என்னத்த சொல்ல... வட போச்சே

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசனின் இலங்கை விஜயம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகப் பரப்பிலும் விவாதங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளன.

இது தனிப்பட்ட விஜயம் தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் தனது உறவினர்களையும் சந்திப்பதற்கான விஜயத்தையே தான் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மீள வலியுறுத்தியிருக்கின்றார்.

தன்னை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதான ஒரு செய்தி இறுதியாக வெளியாகியிருக்கின்றது.தான் கைது செய்யப்படவோ அல்லது நாடு கடத்தப்படவோ நேரிடும் என இலங்கை அதிகாரிகள் தம்மை அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதற்கு முன்னதாக அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இவ்வாறான ஓர் நிலைமையை எதிர்நோக்க நேரிடலாம் என இலங்கை அதிகாரிகள் தமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.


எவ்வாறெனினும், வீட்டுக் காவலில் வைத்திருந்ததாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார். இலங்கை அதிகாரிகள் தம்மை வீட்டுக் காவலில் வைத்திருக்கவில்லை எனவும், எச்சரிக்கை விடுத்திருந்தனர் எனவும் தெரிவித்துளளார்.



முன்னர் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டதான செய்தியை தமிழ் வின் இணைமும் தமிழ் நெற்றும் வெளியிட்டிருந்தன. தமிழ் வின்னில் அந்த செய்தி பின்னர் காணமல் போய்விட்டது ஆனால் தமிழ் நெற்றில் அது தற்போது வரை இருக்கின்றது.

 நேற்று முன்னதினம் மாலை பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதான செய்தி வெளியானவுடன் ஊடகப் பரப்பில் பரபரப்பு தொன்றிக் கொண்டது.

ஆனால் அது கனேடிய வெளிவிவாகர அமைச்சும், புதிய ஜனநாயக் கட்சியும் இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா அவர்களும் வெளியிட்ட அறிக்கைகளால் புஸ்வாணமாகிவிட்டது.

இது இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்பாராமல் கிடைத்துள்ள வாய்ப்பு. எங்கே விக்கெட் புடுங்கப்படுமோ என்று பதற்றத்துடன் காத்திருக்கும் ஒரு துடுப்பாளனுக்கு நோ போல் (No -Ball) பந்து வீசியிருக்கின்றன நமது ஊடகங்கள்.


பாத்திய பாத்தியா நான் அப்பவே சொன்னேன் இலங்கையில் டிமாகிரசி இருக்கு ...தமிழ் மீடியா தான் இல்லை எண்டு சொல்லுது என்று மகிந்த அன்ட கோ பாட்டுப்பாடி கொண்டாடிக் கொண்டே பீறி ஹிற் (Free hit) அடிக்க நாங்கள் அட வட போச்சே என்று அடுத்த போலுக்கு காத்திருக்கின்றோம்.


கனடாவிற்கு வருகை தரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுற்றுலா பயண அனுமதியில் தான் இங்கு வருகின்றார்கள் மக்கள் சந்திப்புகளை நடத்துகின்றார்கள், கூட்டங்களில் பேசுகின்றார்கள் பின்னர் போய் விடுகின்றார்கள்.


அதேபோன்று சுற்றுலா பயண அனுமதியில் இலங்கைக்கு சென்று சந்திப்புகளை நடத்தி, கூட்டங்களில் பேசி பின்னர் திரும்பி வரலாம் என்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் நினைத்திருக்கலாம் ஆனால் அங்கு தான் கேள்விகள் பிறக்கின்றன.



மிக அண்மை நாட்களில் நோர்வே நாட்டின் வாழ்வுரிமை பெற்ற கவிஞர் ஜெயபாலன் அவர்களும் இந்தியாவில் இருந்த வருகை தந்த ஊடகவியலாளர் பிரபாகரன் அவர்களும் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை இலங்கையின் கள நிலை யதார்த்தங்களை புரிய வைப்பதற்கு போதுமானது.

இவ்வாறான ஜனநாயக மறுப்பு மற்றும் ஊடக அடக்குமுறை நிலவும் நாட்டிற்கு செல்வதற்கு வலுவான காரணங்கள் அவசியமாகின்றன.அவற்றில் பிரதானமானதும் முக்கியத்துவம் மிக்கதுமாக இலங்கையில் நிலவும் ஜனநாயக மறுப்பினை ஊடக அடக்குமுறைகளை முழு உலகிற்கும் தெரியப்படுத்துவதற்கான முனைப்பே அமைய முடியும்.


குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் போன்ற ஒருவர் அதனை பிரதான நோக்கமாக கொண்டு தனது பயணத்தை முன்னிலைப்படுத்தியிருக்க முயும்.

 ஆனால் நான் எனது சொந்தங்களையும் ஊரையும் பார்ப்பதற்காகவே இலங்கைக்கு வந்துள்ளேன் என்பது ” அப்ப இவ்வளவு நாளும் ஏன் எங்களை பார்க்க நீங்கள் வரவில்லை என்ற கேள்வியை அங்குள்ள மக்கள் எழுப்புவதற்கு” வாய்பினை ஏற்படுத்தி விடுகின்றது.


ஊரையும் உறவுகளையும் பார்க்க சென்றவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனையும் சந்தித்தது ஏன் என்ற கேள்வியினையும் தானாகவே தோற்றி வித்துள்ளது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்சைக்குரிய அடையாளங்களாக கருதப்படும் இருவரையும் சந்தித்திருப்பது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஆசையின் மறைமுக ஏற்பாடாகவே நினைக்கத் தோன்றுகின்றது.


பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசனின் இலங்கை விஜயமும் அது சார்ந்த சர்சைகளும் 2014ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஊடகப் பரப்பின் முக்கியத்துவம் பெற்றாலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள கனேடிய பாராளுமன்ற தேர்தல் வரை அது தாக்கம் செலுத்தாது என்பது உண்மையானது.


ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கனடாவில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள் நீந்திக் கடக்க வேண்டிய முக்கியமானதும் நீளமானதுமான நெருப்பாறு ஒன்று இருக்கின்றது என்பதை நாங்கள் மறந்து விட முடியாது.


கடந்த முறை போல் அல்லாது இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அதிகளவான தமிழ் பிரதிநிதிகள் களம் இறங்கவுள்ளனர்.


2015ம் ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யார் போட்டியிடப் போகின்றார்கள் என்பதை தீர்மானிப்பதே தற்போது அவர்கள் முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவால்


ராதிகா சிற்சபையீசன் போட்டியிடவுள்ள தொகுதியில் தானும் போட்டியிடப் போவதாக நகர சபை உறுப்பினர் லோகன் கணபதி அறிவித்துள்ளார்.


ஒரே தொகுதியில் இரு தமிழர்கள் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுவது குறித்து பெரும்பான்மையான தமிழர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


ஆனால் தக்கன தப்பி பிளைக்கும் இது ஜனநாயக தேசம் இதில் எவரையும் எதற்காகவும் நாங்கள் ஒதுங்கிச் செல்லுமாறு கோர முடியாது என்கின்ற வாதங்களும் எளாமல் இல்லை


பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா தான் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாயகக்கட்சியின் சார்பிலம் லோகன் கணபதி அவர்கள் தொழில் கட்சி சார்பிலும் ஸ்காபுரோ வடக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.


தமிழர்கள் அதிகளவாக வாழும் பகுதியாக இது இருந்தாலும் தமிழர்களின் வாக்குகள் மட்டும் வெற்றியை தீர்மானிக்காது. ஆனால் வெற்றியாளரை தமிழர்களின் வாக்குள் தீர்மானிக்கும்.


இங்கு தான் பிரச்சினை எழுக்கின்றது கனடாவின் மூன்று பிரதான கட்சிகளும் 30 வீதமான ஆதரவை கொண்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம். வெற்றியை தீர்மானிக்கும் 10 வீதமான வாக்குகள் தமிழர்களினால் அளிக்கப்படும்.


இதனை குறிவைத்தே நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 4 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் ராதிகா சிற்சபையீசன் மீண்டும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் இந்த தேர்தலை எதிர் கொள்கின்றார்.அவருடைய அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல அவர் சார்ந்த புதிய ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மையினர் மையப்படுத்தம் அரசியல் வியுகமும் கூட கேள்விக்கு உட்படுத்தப்பட்ட மறுசீரமைக்கப்படும் தேவையினை தேர்தல் தோல்வி ஏற்படுத்தி விடும்.


அந்த தொகுதியில் தமிழ் வாக்குகள் சிதையாமல் ஒருவருக்கே கிடைக்குமாக இருந்தால் ஒரு ஆசனம் உறுதியாகலாம்.ஆனாலும் அது கூட மற்றயை கட்சிகளின் வேட்பாளர்களின் நியமனங்களை சார்ந்தே தீர்மானிக்கப்படும்.


இருந்த போதிலும் வெற்றிக்கான முயற்ச்சிகளையும் நகர்வுகளையும் எல்லோரும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.


ராதிகா சிற்சபையீசன் புலம் பெயர் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை அடையாளமாகவும் லோகன் கணபதி அவர்கள் புலம் பெயர் தமிழர்களின் முதல் தலைமுறை அடையாளமாகவும் நோக்கப்படுகின்றனர்.அவர்களின் அரசியல் நகர்வுகள் கூட இதனை மையம் கொண்டதாகவே இருந்து வருகின்றது.


இவர்கள் இருவர் மீதான ஆதரவும் விமர்சனங்களும் தமிழர்களிடத்தில் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

இவற்றை தாண்டி வெற்றி பெறுவதற்கு சில “மேலதிக” வேலைகளை அல்லது வீட்டுப் பாடங்களை இந்த இருவரும் மேற்கொள்ள வேண்டும்.


இந்த வீட்டுப் பாடம் என்பது நான் மற்றவரை விட உயர்வானவர் என்பதை தமிழர்களிடம் வெளிப்படுத்துவதாகவே இருக்க வேண்டும்.


பரப்பை ஏற்புடுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இலங்கை விஜயம் கூட இந்த வீட்டுப்பாடங்களில் ஒன்றாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.


யுத்தம் முடிவடைந்த நான்கு வருடங்கள் கடந்தோடிப் போன நிலையில்... இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்ட பின்னரான நாட்களில்... வடமாகாண சபை உருவாக்கப்பட்டுள்ள சூழலில்.. ஜெயபாலனும் பிரபாகரனும் கூட்டம் சேர்த்தமைக்காக நாடு கடத்தப்பட்ட செய்திப் பிரசுரங்களின் ஈரம் காயும் முன்னர் ஊர் பார்க்கப் போகும் தேவை தோன்றுவதை வேறு எப்படித் தான் அர்த்தம் கொள்ள முடியும்.


அரசியல் என்று வந்த பின்னர் இது போன்றவை தவிர்க்க முடியாதவை ஆனால் மக்களை கவரவும் அவர்களின் மனங்களை வெல்லவும் இந்த மாதிரியான ” பழைய” உத்திகள் கைகொடுக்காது என்பது அவரை வழிநடத்தம் ”ஆலோசகர்களுக்கு” வேண்டுமால் தெரியாமல் இருப்பது நியாயம்.. ஆனால் இங்கே பட்ட மேற்படிப்பு வரை படித்து நான்கு வருடங்கள் பாராளுமன்ற ஆசனத்தை அலங்கரித்த பாராளுமன்ற உறுப்பினர் ராதிகாவிற்கு கூடவா தெரியாமல் போய் விட்டத என்று சிலர் கேட்பதில் 4ட நியாயம் இருக்கத் தானே செய்கின்றது.


அதேபோல் பிரிக்கப்பட்ட ரூட்ஜ் ரிவர் தொகுதியின் மற்றைய பிரிவில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள கரி ஆனந்தசங்கரிக்கும் வில்லங்கம் காத்திருக்கின்றது.


அவர் போட்டியிடத் தீர்மானித்துள்ள தொழிலாளர் கட்சியில் மற்றுமொரு தமிழரும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு விரைவில் விருப்பம் வெளியிடுவார் என்று நம்பகமான தகவல்கள் வெளியாகியுன்ன


அவ்வாறு அறிவித்தல் வெளியானால் இரண்டு தமிழர்களில் யார் வேட்பாளர் என்பதை தீர்மானிக்கும் நிலைக்கு தொழிலாளர் கட்சியின் தலைமை தள்ளப்படும். தேர்தலுக்கு முன்னைய தேர்தல் ஒன்றை அந்த இருவரும் சந்திக்க வேண்டிய நிலை வரும்அதில் யார் வெற்றி பெற்றாலும் தோற்றுப் போனவரின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றவருக்கு தேர்தலில் வாக்களிக்காமல் விடும் வரலாற்றுக் கடமையை சரிவரச் செய்வார்கள். அப்போது அந்த தொகுதியில் இருந்தும் தமிழர் ஒருவர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.


எமது இனம் சந்தித்த அவலங்களுக்கு காரணமான யுத்தக் குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும்....இன்னும் முன்வைக்கப்படாத அரசியல் தீர்வுகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்... வாழ்விழந்து போன மக்களுக்கான வாழ்வை மீளக் கட்டியெழுப்ப எல்லோரும் அணி திரள வேண்டும்.... என்று எமக்கான தேவைகள் ஏராளமாக எங்கள் முன்னால் விரிந்து கிடக்கின்றன.


மேற்குலக நாடுகளின் பிரதான அரசியல் நிரோட்டத்தில் எங்களயை இணைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் எமது போராட்டத்தின் நியாயங்களை எமது மக்களின் அவலங்களை புரியவைப்பதும் கூட முக்கியத்துவம் வாய்ந்த்த தான்.


இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனஅழிவை சந்தித்த ஒரு இனத்தின் பிரதிநிதியாக எமக்கு கிடைக்கும் அத்தனை பாதைகளிலும் எமக்கான விடியலை நோக்கி நாம் நடக்க வேண்டும். மாறாக இந்த பாதை எனக்கானது நீ மாற்றுப் பாதையை தேடிக் கொள்ள என்று சந்தியில் நின்று சண்டையிடுவதோ.. அந்த பாதையால் போகின்றவர்கள் தவறானவர்கள் என்று விமர்சிப்பதோ விடியலை பெற்று தராது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

எமக்குள் எழும் போட்டிகளில் நாம் தொலைப்பது ஒரு இனத்தின் விடுதலை மட்டுமல்ல அந்த விடுதலைக்காய் உயிர் விலை கொடுத்து நிற்கும் எங்கள் உறவுகளின் கனவுகளையும் தான் என்பதை எல்லோரும் நினைவில் கொள்வோம்.



- ரமணன்

Comments

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

மீண்டும் வாழ்வோம்….