25 வருடங்கள்...நான் .. ஊடகம் .... இன்னும் சில...
ஒலிபரப்பு ஊடகத்துறையில் என்கான வாசல்களை திறந்து வைத்த சூரியனுக்கு இன்று அகவை 21. இங்கு நான் கற்ற ஆரம்பக் கல்விதான இன்று வரை என்னை இயக்கி கொண்டிருக்கின்றது. அதனால் என்றும் என் நேசத்திற்குரிய வானொலிக்கு என் வாழ்த்துகள். இந்த நாளில் என்வாழ்வையும் திரும்பிப் பார்க்கின்றேன்.
25 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். 1993 ம் ஆண்டு அபர்ணாலாய என்ற இசைக் குழுவின் அறிவிப்பாளனாய் எனது ஊடகப் பயணம் தொடங்கியது.
இடம்பெயர்வுகள் புரட்டிப் போட்ட வாழ்கையில் தொலைந்து போன கனவுகளுக்கு மீண்டும் 1999ம் ஆண்டு புது வாசல் திறந்தது. என்றும் பெருமதிப்பிற்குரிய ஆசான் நடராஜசிவம் அவர்களால் ஒலிப்பரப்பாளன் என்ற அடையாளத்துடன் சூரியன் பண்பலை மூலம் முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. . ஒலிபரப்பாளன், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.
இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திருந்தேன் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றேன்.
வாழ்கையின் ஒவ்வொரு படிகளையும் மிகுந்த சிரமங்களுடனேயே நான் ஏறிக் கடந்திருக்கின்றேன்.ஊடகமல்லாத வேறு துறையை தேர்ந்திருந்தால் சில வேளைகளில் சிரமமற்ற வாழ்வு வாய்திருக்குமோ என்றும் நான் எண்ணியதில்லை.
என்னைப் பொறுத்தவரையில் ஊடகவியல் என்பது ஒரு தவம் .வெறுமனே ஊடகம் வாயிலாக பிரபல்யம் பெறுவது தான் இலக்காக இருந்திருந்தால் எங்காவது ஒர் இடத்தில் குட்டையாக தேங்கியிருப்பேன். ஊடகத்துறையின் பல்வேறு பரிமாணங்களையும் தேடியறியும் ஆர்வத்தில் அலைந்துகொண்டிருப்பவனாகவே என்னை நான் காண்கின்றேன். இந்த பயணம் தேடல்கள் நிறைந்தது புதிது புதிதாய் விடயங்களை அறிந்து என்னை புதுப்பிக்க இது உதவியாய் இருக்கின்றது.
சமகால அரசியல் ,ஊடகத்துறையின் புதிய முயற்சிகள், சமூக ஊடகப் போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற விடயப்பரப்புகள் எனது கவன ஈர்பான்கள், இவை தொடர்பில் தேடிக்கற்பதில் வாசிப்பதில் அதிக அக்கறை கொண்டவன்.
99ம் அண்டு சூரியனில் பகுதி நேர ஒலிபரப்பாளனாய் ஆரம்பித்த எனது உடகப் பயணம் பின்னர் அங்கு நிரந்தர ஒலிபரப்பாளன் நிலை வரை உயர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தந்த நேற்றைய காற்று இன்றும் எனது நேசத்திறக்குரியது.
அதேகாலத்தில் செய்திப்பிரிவினருடன் எனது நெருக்கம் அதிகரிக்கவும் ஒலிப்பரப்பு ஊடகவியலாளன் என்ற நிலை குறித்த அக்கறை என்னுள் அதிகரித்தது அதன் பலனாக சூரியன் செய்திப்பிரிவின் "சூரியப் பார்வைகள்" என்ற வாராந்த சஞ்சிகையினை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து அதன் ஊடாகவே எனது ஊடகப் பயணம் வேறு பரிமாணத்தை அடைந்தது. வெறுமனே ஒலிவாங்கிக்கு முன்னால் இருந்து பாடல்களை ஒலிபரப்பி கதை சொல்வதன் மீதான ஆர்வம் குறைவடைந்து வானொலி ஊடகம் மூலமாக மக்களுக்கு பயன் தரும் வைகயிலான செய்திப் பரிமாற்றத்தை நவீன முறையில் மேற்கொள்வது குறித்து அதிகம் கவனம் செலத்தினேன்.
நண்பன் தீபசுதனின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட வாய்பினால் இங்கிலாந்து செல்வதற்கான சந்தர்ப்பம் 2000ம் ஆண்டு கிடைத்தது லண்டனில் இயங்கிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2001 ம் ஆண்டு முதல் 2003 வரை ஒலிபரப்பாளனாய் இயங்கினேன். புலம்பெயர் வாழ்கைச் சூழல், தாயகத்திற்கு வெளியில் ஊடகர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என பல அனுபவங்களை இந்த வாழ்கை எனக்கு கற்றுத் தந்தது. அதேபோல் மாற்றுக் கருத்துக்களின் முக்கியத்துவம் பன்மைத்துவத்தின் அவசியம் என பல விடயங்களையும் இந்தக் காலத்தில் தான் அறிந்து கொண்டேன். இலங்கையின் ஊடக அடக்குமுறைச் சூழலுக்குள் இருந்து சென்றவனுக்கு ஊடகச் சுதந்திரம் எவ்வாறானது என்பதை புரிய வைத்த காலம் அது. பல அரசியல் தலைவர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் நேர்காணும் வாய்ப்பும் அன்பை கொட்டித் தீர்க்கும் வானொலி நேயர்களை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமும் இங்கு கிடைத்தது. இந்த வாய்ப்பினை வழங்கிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராமராஜ் அவர்களும் அவருடை குடும்பத்திற்கும் என்றென்றும் நன்றிகள்.
லண்டனில் கற்றுக் கொண்டிருந்த பட்டப்டிப்பினை புர்த்தி செய்யாமல் இலங்கைக்கு திரும்ப வேண்டிய நிலை 2003 ம் ஆண்டில் ஏற்பட்டது. ஏதுமற்ற சூனியத்திற்குள் தள்ளப்பட்டவனாய் இருந்த காலத்தில் நண்பன் லக்சமனின் உதவியால் கனடாவில் இயங்கி வரும் CMR Tamil மற்றும் TVI தொலைக்காட்சி ஆகியவற்றின் இலங்கை செய்தியாளராக செயல்படும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதே காலப்பகுதியில் லண்டன் ஐ.பி.சி தமிழின் கொழும்பு செய்தியாளராகவும் பதிவு, சங்கதி போன்ற இணையங்களின் செய்தி தொடர்பாளராகவும் செயல்பட்டேன். அதன் பின்னர் நண்பன் கிருஸ்ணாவின் தொடர்பினால் தமிழ் வண் தொலைக்காட்சியின் செய்திக் தொடர்பாளராகவும் செயல்படும் வாய்ப்பு கிடைத்தது.
2006ம் ஆண்டு நானும் நண்பன் வரதனும் சேர்ந்து வியூகம் என்ற ஒரு மாத சஞ்சிகையினை ஆரம்பித்த போது எந்தவிதமான எதிர்பார்புமின்றி அதற்கு ஆசிரியராய் இருப்பதற்கு இணங்கி அன்று முதல் இன்று வரை என்னை ஊடகத்துறையில் வழிநடத்தும் பேரன்பிற்குரிய இளையதம்பி தயானந்தாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவை ஏராளம். தமிழ் ஒலிபரப்பு ஊடகத்துறையின் பெருங் கடல் ஒன்றின் கரையில் ஒற்றைக் கல்லாய் நான் வரம் பெற்றேன் என்பதே பெருமை.
2006ம் ஆண்டு நண்பர் வியாசாவின் அறிமுகத்தினால் இன்ரநியூஸ் எனும் அமெரிக்காவை தளமாக கொண்டியங்கிய ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சொல்லப்பட்டாத மக்களின் கதைகளை பேசும் நிகழ்சியினை தாரித்து வழங்கியதோடு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஊடகங்களில் நவீன தொழில் நுட்ப பயன்பாடு குறித்த பயிற்சிகளையும் வழங்கினோம்.
பின்னர் மீண்டும் வாழ்வோம் என்ற பெயரிலான திட்டம் ஆரம்பிக்கப்பட்டு. உள்நாட்டு போரில் இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானத் தேவைகளை பற்றிய தகவல்களை பரிமாறும் நோக்கில் சுமார் இரண்டு வருடங்களாக வானொலி பத்திரிகை இணையம் என வெவ்வேறு ஊடகப் பரப்புகளில் பயணம் செய்யது. இந்த திட்டத்தின் செய்திப் பணிப்பாளராக நான் பணியாற்றியமை வாழ்வின் மறக்க முடியாத தருணம். எங்கள் மக்களின் வாழ்வின் அவலங்களை அவர்களுக்கான மனிதாபிமான தேவைகளைனிள் அவசியங்களை அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உதவி வழங்குனர்களிக்கம் எடுத்துச் சொல்வதே அந்த நிகழ்சியின் பிராதான நோக்கம். கரணம் தப்பினால் மரணம் என்ற வகையிலலேயே மனிதாபிமான செய்தியிடல் நிலவியது. ஒரு ஊடகப் போராளியாய் எனது அணியுடன் நான் மேற்கொண்ட அந்த பயணம் உண்மையில் எனக்குள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் ஊடகம் தொடர்பான பார்வைப் பரப்பயைும் விசாலித்துள்ளது.
மனிதாபிமான செய்தியிடல் என்பது இங்கு பெரிதும் கவனம் பெறாத பிரிவாகவே காணப்படுகின்றமை கவலைக்குரியது. எனது கலாநிதிப் படத்திற்கான ஆய்வாக நான் எடுத்துக்கொள்ள எண்ணியுள்ள விடயங்களில் இது முதலிடம் பெறுவதற்கு காரணமும் அதுவே.
என்னைப் பற்றிய இந்த பகிர்வில் இதனைப் பேசலாமா வேண்டாமா என்று பலதடவை சிந்த்தித்த பின்னர் இந்த பகுதியை எழுதுகின்றேன் . கணனித்துறையின் விஞ்ஞானமானியும், முகாமைத்துவ முதுமானியும் எனக்கான கல்வித் தகைமைகளாக கொண்டுள்ள ஊடகவியலாளன் என்பதில் பெருமையடைபவன். இது தற்புகழ்சியாக சிலவேளை சித்தரிக்கப்படலாம் ஆனால் ஊடகத்துறையில் முழுநேரமாக இயங்கி வரும் நான் இந்த அடைவு மட்டங்களை எட்டியமை பெருமைப் படக் கூடிதென்றே கருதுகின்றேன். நான் சார்நதுள்ள ஊடகத்துறையில் கலாநிதி பட்டம் பெற வெண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு. அதற்கான முன்முனைப்புகளை தற்போதுமேற்கொண்டு வருகின்றேன்.இதனை நான் இங்கு பதவி செய்வதன் நோக்கம் என்னை பற்றி பெருமை பேசுவதற்கல்ல மாறாக ஊடகத் துறையில் இயங்குபவர்கள் உயர் கல்வி தகைமைகளை அடைய வேண்டும் அதன் ஊடாக இலங்கையின் தமிழ் ஊடகத்துறை தனது நிலையை உயர்த்த வேண்டும் எனும் ஆசைவெளிப்பாடே. என்னுடன் நெருங்கி பழகி வரும் ஊடக நண்பர்கள் அனைவரிடமும் இதனை நான் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றேன்.
2010ம் ஆண்டு முதல் 2011ம்ஆண்டு கனடாவிற்கு புலம் பெயரும் வரை அங்கு நவீன ஊடகத்துறையின் அடுத்த கட்ட பாச்சலுக்கான தாயர்படுத்தல்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன். இலங்கையைப் பொறுத்தவரை எனது சிற்றறிவிற்கு எட்டியவரை நவீன ஊடகத்திற்கான தனியான பிரிவினை முதலில் ஆரம்பித்துள்ள நிறுவனம் எம்.ரி.வியாகவே இருக்க வேண்டும். ஊடகத்துறையின் எதிர்காலம் நவீன் ஊடக செயற்பாடுகளால் அதிகம் செல்வாக்கு செலுத்தப்படும் என்பதை முன்னுணர்ந்தமையால் எமது நிறுவனத்தின் தலைமை இதனை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருந்தது. இணைய வழி ஊடகச் செயற்பாடுகள் , சமூக வலைத்தளங்கள், செல்லிடப் பேசிகளின் ஊடான செய்திப் பரிமாற்றம் என இந்த துறையின் பரப்பு தொடர்ந்தும் விசாலித்து வருகின்றது. தினமும் நடைபெறும் மாற்றங்களை கவனிப்பதும் அதன் தாக்கங்கள் எதிர்காலப் போக்ககுகள் குறித்து ஆராய்வதுமாக எனது பணி சவால்மிக்கதாகவே அமைந்திருந்தது.
2011 ம் ஆண்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர் வணக்கம் FM ,Tamil One தொலைக்காட்சி, TET HD தொலைக்காட்சி, தமிழினி FM , இ.குருவி. East FM என ஊடகப் பயணம் தொடர்கின்றது. நான் கற்றதும் பெற்றதையும் பகிர்வதற்கான தளங்களை இந்த ஊடகப் பயணங்கள் எனக்கு தந்து நிற்பதாகவே இன்றும் நம்புகின்றேன்.
ஊடக வாழ்வில் தடுமாறிக் கொண்டிருந்த போது ஆர்யா கனடா நிறுவனத்தின் மூலம் எனக்கு பதிய வாசல்களை திறந்து தன்னம்பிக்கை ஊட்டிய கிஷான் எனக்குள் மறைந்திருந்த வர்த்தக முகாமைத்துவ ஆற்றல்களை வெளிப்படுத்தும் வாய்ப்பினை வழங்கினார். இன்று வீடு விற்பனை முகவராக நான் மாறியிருப்பதற்கு காரணம் கிஷான் என்னில் வைத்த நம்பிக்கை. சந்தைப்படுத்தலில் கால்பதிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்படக் காரணம் ஆர்யா கனடா தந்த சந்தைப்படுத்தல் துறை சார்ந்த வாய்ப்புகள். பெரும் நிகழ்சிகளை கூட நடத்தலாம் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையிலும் நீ அறிவிப்புச் செய்யலாம் என்ற நம்பிக்கை ஆர்யா கனடா மூலமே எனக்கு கிடைத்தது. நன்றி கிஷான்
என் வாழ்வில் முதன் முதலில் ஒலிவாங்கியை பிடிப்பதற்கு வாய்பளித்த அபர்ணாலயா இசைக் குழுவின் அதிபர் சிவானுசாந்தன் தொடங்கி சூரியன் பண்பலையில் எனக்கான முகம் தந்த திரு.நடராஜசிவம் Internews Network இல் பயணமப்பட வைத்த நண்பன் வியாசா கல்யாணசுந்தரம், மகாராஜா குழுமத்தில் என்னை ஏற்றுக் கொண்ட அதன் தலைவர் திரு.ராஜமகேந்திரன் கனடாவில் ஊடகப் பயணத்திற்கு வித்திட்ட நண்பன் பகீர் மதன் காந்தன் வாய்ப்புகளை வழங்கிய தமிழ் வண் குழத்தின் தலைவர் திரு.சிறி அண்ணா TET HD யில் வாய்பளித்த பிரேம் அரசரட்ணம் மற்றும் திருமதி ராஜி அரசரட்ணம் பத்தி எழுத்தாளராய் என்றை அறிமுகம் செய்த நண்பன் நவஜீவன் அனந்தராஜ் தற்போது EAST FM 102.7 இல் எனக்கான வாய்ப்பினை வழங்கி நிற்கும் அதன் அதிபர் திரு நடா ராஜ்குமார் என எனக்கான வாசல்களை திறந்து வைத்த அத்தனை பேரையும் இன்றயை பொழுதில் நன்றியோடு நினைத்துக் கொள்கின்றேன்.
கனடாவில் பல முக்கியமான நிகழ்சிகளில் மேடை அறிவிப்புச் செய்யும் வாய்பினை வழங்கிய அன்புள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
பாடசாலைக் காலத்தில் அறிவிப்பாளனாகும் கனவுக்கு தடை போடாமல் என்னை எனது விருப்பம் போல் இயங்க வைத்தது முதல் அதன் பின்னரும் எனது முயற்சிகளுக்கு தமது மானசீக ஆதரவை என்றும் வழங்கி நிற்கும் எனது அம்மாவும் அப்பாவும் அவர்களின் ஆசீர்வாதங்களுக்கும் என்றென்றும் நன்றியுடையவன் நான்.
ஒரு தமிழ் ஊடகனின் வாழ்வு என்பது முட்களின் மீதான பயணம் போன்றது அந்த முட்பாதையில் என்யோடு பயணம் செய்யும் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு ஈடாக நன்றியாக எதனையும் என்னால் தர முடியாது.
இங்கு பெயர் குறிப்பிடாத பலரும் கூட பல வழிகளில் எனக்கு வழிகாட்டிகளைாய், நலன் விரும்பிகளாய் கன் வாழ்கைப் பயணத்தில் துணை நின்றிருக்கின்றார்கள். அவர்கள் அத்தனை பேரையுமு் இந்தப் பொழுதில் நன்றியோடு நினைத்து கொள்கின்றேன். உங்கள் பெயர்கள் இங்ககே விடுப்பட்டாலும் என் நெஞ்சில் என்றும் நன்றியோடு நினைவில் இருக்கும்.
இன்று வரை என் குறைகளோடும் நிறைகளோடும் என்னை அரவணைக்கும் அன்புள்ளம் கொண்ட பலரை இந்த ஊடக வாழ்வு எனக்கு ஏற்புடுத்தி தந்திருக்கின்றது என்பதே பெரும் நிறைவு. அத்தனை பேருக்கும் பேரன்பும் பெரு நன்றிகளும்.
Comments