ஒரு அழிவின் முடிவில் மறு அழிவின் ஆரம்பம்…
யாழ்ப்பாணம் தமிழர்களின் கலாசாரத் தலைநகரம். மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோரங்களை இன்றும் சாட்சியங்களாகிக் கொண்டுள்ள நகரம். தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தேவைகள் கருதி யாழ் குடாவிற்கான நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் நான் வாழந்த சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி வீசப்பட்ட பின்னர் குறிப்பிடக் கூடிய வகையில் நீண்ட நாட்கள் அங்கு தரித்திருக்க கிடைத்த இந்த வாய்ப்பு இன்னும் சில காலத்திற்கு ஞாபகங்களை தாலாட்டும்.
பதினைந்து வருடங்களில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட வேண்டியவை. வீதிகள் தோறும் மரங்கள் வளர்க்கின்றார்களோ இல்லையோ மரங்களை தறித்து அடுக்கி காவல் அரண்களை அமைக்க தவறவில்லை. யுத்தம் முடிந்து விட்டதற்கான எந்த சுவடுகளும் இன்றி இன்னும் யுத்தம் பற்றிய கவலைகள் மிச்சமிருக்கின்ற ஒரு பிரதேசமாகவே குடாநாட காட்சி தருகின்றது. வீதிகள் தோறும் காவலிருக்கும் பச்சை உடைக்காரர்களை காணும் போது ஆத்திரத்திற்கு பதிலாக கவலை படத் தோன்றுகின்றது. அவர்களை தாண்டிப் போவதற்கும் அவர்களின் பிரசன்னங்களை இட்டு கவலைப்படாதிருக்கவும் ...