ஒரு அழிவின் முடிவில் மறு அழிவின் ஆரம்பம்…

யாழ்ப்பாணம் தமிழர்களின் கலாசாரத் தலைநகரம். மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோரங்களை இன்றும் சாட்சியங்களாகிக் கொண்டுள்ள நகரம்.

தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தேவைகள் கருதி யாழ் குடாவிற்கான நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் நான் வாழந்த சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி வீசப்பட்ட பின்னர் குறிப்பிடக் கூடிய வகையில் நீண்ட நாட்கள் அங்கு தரித்திருக்க கிடைத்த இந்த வாய்ப்பு இன்னும் சில காலத்திற்கு ஞாபகங்களை தாலாட்டும்.


பதினைந்து வருடங்களில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட வேண்டியவை.

வீதிகள் தோறும் மரங்கள் வளர்க்கின்றார்களோ இல்லையோ மரங்களை தறித்து அடுக்கி காவல் அரண்களை அமைக்க தவறவில்லை.

யுத்தம் முடிந்து விட்டதற்கான எந்த சுவடுகளும் இன்றி இன்னும் யுத்தம் பற்றிய கவலைகள் மிச்சமிருக்கின்ற ஒரு பிரதேசமாகவே குடாநாட காட்சி தருகின்றது.

வீதிகள் தோறும் காவலிருக்கும் பச்சை உடைக்காரர்களை காணும் போது ஆத்திரத்திற்கு பதிலாக கவலை படத் தோன்றுகின்றது.

அவர்களை தாண்டிப் போவதற்கும் அவர்களின் பிரசன்னங்களை இட்டு கவலைப்படாதிருக்கவும் அங்குள்ள மக்கள் பழக்கப்பட்டு விட்டார்கள்.

யுத்தத்தின் வலிகளை சுமந்து நிற்கும் தலை தறிக்கப்பட்ட மரங்களும் எங்கள் மனிதர்கள் வாழந்த சிதிலமாகிப் போன வீடுகளும் காலத் துயரின் நீட்சிகளை சொல்லி நிற்கின்றன.

சாம்பலில் இருந்து உயிர் கொள்ளும் பறவைகளாய் இடிபாடுகளில் இருந்தும் எழுந்து நிற்க முற்பட்டுள்ளது எங்களின் நகரமும் அதன் மக்களும்.

உலகமயமாக்கலும் அதனோடு சேர்ந்த கிராமங்களை நகரங்களாக்கும் நாசங்களும் அங்கும் தொடங்கி விட்டது தான் இப்போடு சுடுகின்ற பிரச்சினையாகி மாறி வருகின்றது.

இன்னும் கொஞ்சம் ஆண்டுகளின் பின்னர் பச்சை விரித்து படுத்துக் கிடக்கும் எங்களின் வயல் நிலங்களையும் பனித் துளிகள் பரவிக்கிடக்கும் தோட்டங்களையம் படங்களில் மட்டுமே நாம் காணவேண்டிய நிலை வந்து சேரும் என்பது வருத்தத்திற்குரிய உண்மை.

இப்போது தென்னிலங்கையில் இருந்து படையெடுக்க ஆரம்பித்துள்ள பெரு நிறுவனங்கள் தங்களுக்காக நிலங்களை வளைத்துப் போடும் எத்தனிப்புகளை துரிதப்படுத்தியுள்ளன.

ஆர்பிகோ , டி.எஸ்.சே என பல முன்னணி நிறுவனங்கள் நில வேட்டையில் ஈடுபட மறுபுறம் பணம் படைத்தவர்களும் யாழ் மண்ணை விலை வாங்கி வருகின்றனர்.

கொஞ்ச நாளில் வயல் நிலங்களில் எல்லாம் தொழில் சாலைகள் எழுந்து நிற்கும் சுற்றுச் கூழலை மாசுபடுத்தம் அசுத்தக்காற்றும் ஏ9 வழியாக யாழ் மண்ணை வந்து சேரும்.

தென்னிலங்கையின் தேவைகளுக்கான நுகர்வுப் பொருட்களுக்கான உற்பத்தி கூடமாக யாழ் மண் விரைவில் மாறிப் போகும் என்பது தான் நான் கண்ட காட்சிகள் மற்றும் சந்தித்த மனிதர்கள் தெரிவித்த தகவல்கள் எனக்கு உணர்த்தி நிற்கின்ற உண்மை.

கடந்த கால போர்ச் சூழலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து தமது வாழ்வினை மீளக் கட்டியெழுப்ப முனையும் குடாநாட்டு மக்களின் பொருளாதாரா மேம்பாட்டை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்கு குடாநாட்டு மக்களை தயார்ப்படுத்தப் போவது யார் என்ற கேள்வி எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

அபிவிருத்தி என்ற பதம் மிகவும் அச்சுறுத்தலானது என்பது இப்போது தான் எனக்கு புரிகின்றது.

அண்மையில் தென்னிலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோர் மற்றும் பாரிய நிறுவனத் தலைவா்கள் கலந்து கொண்ட வாத்தக மகாநாடு இந்த அச்சுறுத்தலை மேலும் அதிகரித்துள்ளது.

விழ விழ எழுந்து வரும் எம்மவர்களை இனி எப்போதும் எழுந்து விடாதபடிக்கு அடித்துப் போடப்போகின்றதா இந்த அபிவிருத்தி என்ற கேள்வி இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாததாகின்றது.

தமிழ் மக்களின் ஆயுத யுத்தம் கசப்பான முடிவினை கண்டு நிற்கும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கின்றது இந்த புதிய யுத்தம்.

ஒரு அழிவின் முடிவில் மறு அழிவின் ஆரம்பம்.

Comments

www.bogy.in said…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
சிந்திக்க வைக்கும் பதிவு 50 வது பதிவிற்கு முற் கூட்டிய வாழ்த்துக்கள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

Popular posts from this blog

யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...