பதிவின் பதிலும் பதிவும் - இசையமைப்பாளர் ராஜின் எண்ணங்கள்
எனினும் ராஜ் எழுதிய 3 தொடர் பின்னூட்டங்கள் அந்த எண்ணத்தை மாற்றி விட்டன.

எனது அனுபவங்கள் மற்றும் ஆதங்கங்கங்களை பகிர்ந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு தொடரை ஆரம்பித்தேன்.
அதில் எங்கள் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதமைக்கான காரணங்கள் என என் மனதில் பட்டவற்றை பதிவு செய்தேன்.
அந்த பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் லோசனும் நடைமுறை சவால்கள் குறித்து பின்னூட்டமிட்டடிருந்தர்.
இது குறித்து இசையமைப்பாளர் ராஜ் தனது எண்ணங்களை நீண்ட பின்னூட்டமாக வழங்கியிருக்கின்றார்.
அதனை பின்னூட்டமாக வைத்திருப்பதை விடவும் பதிவாக்குதல் பொருத்தமானது என்று கருதுகின்றேன்.
பின்னூட்டங்களை பார்க்க தவறியவர்களுக்காக..
இனி ராஜின் கருத்துக்கள்...
எல்லோருக்கும் எனது நன்றிகள் :)
ரமணன் , லோஷன் ... இந்த வாதத்தில் நானும் எனது கருத்துகளை பரிமாற்ற விரும்புகிறேன் . சரியா ,தவறா என்று எனக்கு தெரியாது
.. இது எனக்குப் பட்டது ...
//முடியுமானவரை உள்ளூர் பாடல்களை வழங்கினாலும் எதிர்பார்த்தளவு அவை ஹிட் ஆவதில்லை.. இதற்கு நேயர்கள் தான் காரணம் என்று கண்மூடித்தனமாக சொல்லப் போவதில்லை. - //
உள்ளூர் பாடல்களுக்கு உள்ள ஒரே போட்டியும் உந்துதலும் இந்திய சினிமாத் துறையே ! எமது பாடல்கள் இந்தியப் பாடல்களையே பின்பற்றுகின்றன .. இந்தியப் பாடல்களுடன் போட்டி போட்டு தோற்றுவிடுகின்றன.. காரணங்கள் ?
1. ஒலிப்பதிவுத் தரம் -சிறந்த ஒலிப்பதிவுக் கூடங்கள்,
2. சிறந்த குரல்கள்
3. மூலதனம்
4. அவை திரைப்படப் பாடல்கள் - - ஆல்பம் பாடல்கள் அல்ல
இந்தியாவில் நிறைய செலவு செய்து விலை மதிப்புள்ள ஒலிப்பதிவுக்கருவிகள் , மென்பொருட்கள் , மிகுந்த ஆள் பலம்/திறமை கொண்ட இசைக்குழுக்கள் (Orchestras-Western and Eastern) எல்லாவற்றையும் பயன்படுத்தி பாடல்களுக்கு இசையமைக்கப் படுகிறது. அவர்களது முதலீடு , ஏதாவது ஒரு திரைப்படத்துக்காக, இலாப நோக்குடன் இருப்பதால் அவர்களால் செலவு செய்து அந்த இசைத் தரத்தை (richness) தரக்கூடியதாக இருக்கிறது ..
நாங்கள் - உள்ளூர் கலைஞர்கள் -அவ்வளவு செலவு செய்து இசையமைக்க முடியுமா ? இல்லை !
ஆனால் , இப்பொழுது உள்ள மென்பொருட்களை பயன்படுத்தியும் , எங்களுள்ளே உள்ள சில சிறந்த ஒலிப்பதிவுப் பொறியியலாளர்களின் உதவியுடனும் , எமது சிறந்த வாத்தியக் கலைஞர்களைப் பயன்படுத்தியும் அந்த இசைதரதுக்கு அருகில் செல்ல முடியும்... இசையைக் கேட்கும் போது நேயர்களால் எமது இசைக்கும் இந்திய இசைக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாமல் செய்வோமானால் - அது முதல் வெற்றி.. நம்மவர்களில் சிலர் அந்த வெற்றியை அடைந்துள்ளனர்.
சிலர் அவர்களை விட இசையில் மிகத் திறமைசாலிகளாக இருந்தாலும் , அடைய முடியாமல் இருப்பதற்கான காரணம் - அவர்களின் பாடல்களில் பாவிக்கப் படும் தொனிகள் (tones), அவர்கள் பாடல்களை வடிவமைக்கும் முறை (arrangement) பழையதாகவும் ஒரே மாதிரியாகவும் (monotonous) இருத்தல், மேடை இசை போன்ற பின்னணி .. நேயர்கள் கேட்டவுடன் "இது உள்ளூர் பாடல் " என்று இலகுவாகக் கண்டு பிடித்து விடுவார்கள் !!!
சிறந்த வடிவமைப்புடன் , சிறந்த ஒலிப்பதிவுத் தரத்துடன் தரமான இசையை ஒவ்வொரு தொனியையும் கவனமாகத் தெரிவு செய்து வழங்கினால், இந்திய இசைக்கும் எமது இசைக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பது கஷ்டம் !
குரல்கள் - இது உண்மையில் நாங்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை. இது மேன்போருட்களாலோ உபகரணங்களாலோ ஈடு செய்ய முடியாததொன்று .
இந்தியக் கலைஞர்களுக்கு நிகரான பாடகர்களை காண்பது அரிது. ஒளிப்ப்பதிவுக் கூடத்தில் Dr. பாலசுப்ரமணியம் , திப்பு , கார்த்திக் ஆகியோர் பாடும் போது ஒலிப்பதிவு கூடம் அதிர்ந்தது.
அவ்வளவு பாரம் (weight) அந்தக் குரல்களில் .அத்துடன் தெளிவு(clarity), துல்லியம்(accuracy) , பாவனை(feel) .. ஒலிப்பதிவு நேரம் 30-45 நிமிடங்கள் மட்டுமே !
எமது பாடகர்கள் மேலுள்ளவற்றை பயிற்சி (voice training) மூலமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.. ஆனால் இங்கு இலங்கையில் " கசுன் கல்ஹார" என்ற ஒரு சிங்களப் பாடகரிடம் அது அத்தனையையும் கண்டிருக்கிறேன். அவர் குரல் பயிற்சி வகுப்புகள் கூட நடத்தி வருகிறார் .எம்மவர்கள் எவரும் " பாடல் ஒலிப்பதிவுக் கலைக்கு " குரல் பயிற்சி வழ்ங்குவது குறைவு . நாங்கள் முயற்சித்தால் எங்களாலும் முடியும் .
எமது பாடகர்கள் தயவு செய்து என்னைத் தவறான முறையில் புரிந்து கொள்ள வேண்டாம் !
வானொலி/ தொலைக்காட்சி நிலையங்களுக்கு எனது வேண்டுகோள் .. இந்த நாட்டில் , இப்பொழுது எங்களால் இந்திய தரத்தில் செலவு செய்து தமிழ்த் திரை படங்களை தயாரிப்பதென்பது ஒரு கஷ்டமான விடயம். ஆனால் , நாங்கள் ஏன் ஆல்பம் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக் கூடாது?
எமது கலைஞர்களால் சிறந்த இசை , சிறந்த பாடல் ஒளிபபதிவுகள் (videos). ஒளியும் ஒலியும் தரமாயிருந்தால் ஊடகங்களின் மூலம் மக்களை விரும்பச் செய்யலாம். ஊடகங்களால் முடியாதது ஒன்றுமில்லை. ஆல்பம் இசை சிங்களத்தில் பிரபலமாகி இருக்கிறது. தமிழில் அந்தளவுக்கு இல்லை.. திரைப் படங்களின் முன்னிலையில் இவை பிரபலம் ஆகாது என்று நீங்கள் கூறலாம் .ஆனால், எப்படி இது ஹிந்தியில் சாத்தியமானது ?
கடைசியாக 1999 பற்றி சில வார்த்தைகள்.. முதலில் நான் பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன் . படம் இன்னுமொரு லோக்கல் படமகாத் தானே இருக்கும் என்று எல்லோரும் போல் நம்பினேன்.
பின்னணி இசைக்காக இயக்குனர் லெனின் படத்தை அனுப்பியபோது நான் நினைத்து பிழை என்பதைத் தெரிந்து கொண்டேன். இந்திய பாடங்களில் இருந்து வேறுபட்டு , ஆங்கிலப் படங்களுக்கான தரங்களை மேலதிகமாகக் கொண்டிருந்தது 1999 .
பின்னணி இசையை நான் முடித்த போது எனக்குள்ளே ஒரு சந்தோஷம்,... லெனினுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .. 1999 - கனடாவில் வாழும் நம்மவர்களால் முற்று முழுதாக உருவாக்கப் பட்ட ஒரு படம் !
நம்மவர்களாலும் இந்திய சினிமாவுக்கு நிகராக படங்களை தயாரிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது !
இலங்கையிலும் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.. ஆடியோ வெளியீடு ஆகஸ்ட் மாதம் ! உங்களின் ஆதரவு தேவை :)
நன்றி
ராஜ்
Comments