ஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 04

அன்புள்ள நண்பரே

நான் சூரியனில் இணைந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது.

சூரியனில் அறிவிப்பாளராவதற்கு சில மாதங்கள் முன்பாக ஒரு இரவுப் பொழுதில் ரவூபின் நேற்றைய காற்றை கேட்டு முடித்த பின் முகுந்தனும் சர்தாரும் தொகுத்தளித்த அன்புள்ள நண்பரே நிகழ்ச்சியை எதேச்சையாக கேட்க நேர்ந்தது.

அன்று படித்துச் சுவைத்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பல முறைகள் முயன்று நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அழைப்பு கிடைத்தது.

மறு முனையில் முகுந்தன் என்ன சொல்லப் போகின்றீர்கள் ? ஒரு கடி ஜோக் கொஞ்சம் பெரிய ஜோக் சொல்லவா சரி என்று அழைப்பை வானொலிக்கு மாற்றினார்.

உங்கள எல்லோருக்கும் தெரிந்த நகைச்சுவை தான் இருந்தாலும் ..மீண்டும் ஒரு முறை எனக்காக

ஒரு ஒட்டகச்சிவிங்கியை; மூன்று படிமுறைகளின் மூலம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் ..

முகுந்தன் - தெரியாது நீங்களே சொல்லுங்கள்நான் -

படி ஒன்று – குளிர்சாதனப் பெட்டியின் கதவை திறத்தல்
படி இரண்டு – ஒட்டகச்சிவிங்கியை உள்ளே வைத்தல்
படி மூன்று – குளிர்சாதனப் பெட்டியின் கதவை மூடுதல்முகுந்தன் - இதில் என்ன கடி இருக்கின்றது..
நான் - இன்னும் கதை முடியவில்லை இப்போது ஒரு யானையை குளிர்சாதனப்பெட்டியில் நான்கு படிமுறைகளில் வைக்க வேண்டும்.

முகுந்தன் - முதல் மூன்று இப்போது நான்கு ... தெரியாது நீங்களே சொல்லுங்கள்நான். -

படி ஒன்று – குளிர்சாதனப் பெட்டியின் கதவை திறத்தல்
படி இரண்டு – ஒட்டகச்சிவிங்கியை வெளியே எடுத்தல்
படி மூன்று – யானையை உள்ள வைத்தல்
படி நான்கு– குளிர்சாதனப் பெட்டியின் கதவை மூடுதல்முகுந்தன்

விசயம் கொஞ்சம் சீரியஸ் போலதான் இருக்கு அடுத்து என்ன

நான் - ஒரு விமானம் பறந்து கொண்டிருக்கின்றது அதில் காட்டு விலங்குகள் எல்லாம் ஏற்றப்பட்டுள்ளன.திடீரென இயந்திரக் கோளாறு ஒரு விலங்கை வெளியில் தூக்கி வீசினால் விமானம் தப்பி பிழைக்கும் இல்லா விட்டால் விழுந்து என்கின்றார் விமானி.காட்டு விலங்கினை வெளியில் வீசலாம் ஆனால் அது நிலத்தில் விளக்கூடாது என்பது காட்டரசன் சிங்கத்தின் கட்டளை.நீங்கள் எந்த விலங்கை வெளியில் வீசுவீர்கள் ஏன் ?

முகுந்தனுக்கு இன்னும் விசயம் புரியவில்லை சில வினாடி மௌனத்தின் பின் அந்த பதிலையும் நீங்களே கூறுங்களேன் என்றார்..

யானையை வீசலாம்

எப்படி ? மறுமுனையில் இருவரும் ஒருமித்து கேட்கின்றனர்.

யானை தான் குளிர்சாதனப்பெட்டியில் இருக்கின்றது தூக்கி வீசினால் யானை நிலத்தில் விழாது குளிர்சாதனப் பெட்டி தானே விழும் இப்போது கடி புரிந்து இருவரும் சிரித்தார்கள் இன்னும் இருக்கின்றதா ..

நான் - ஆம் ஒரு ஓட்டப் பந்தயம் நடந்து கொண்டிருக்கின்றது ஒருவர் மிக வேகமாக மற்றையவர்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றார் தீடிரென்று அவர் விழந்து இறந்து போனார் ஏன் ?

முகுந்தன் - அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் ...
நான் - இல்லை
முகுந்தன் - சரி இனி என்ன செய்ய ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறீர்கள் ..அதையும் நீங்களே சொல்லுங்கள் என்றார் தருமி ஸ்ரைலில்

நான் - விமானத்தில் இருந்து தூக்கி வீசிய குளிர்சாதனப் பெட்டியும் அதனுள் இருந்த யானையும் அவர் மீது விழுந்து அதில் நசிந்து அவர் இறந்து விட்டார்

ஐயா சாமி உங்கள் கடி போதும் ,ஆளைவிட்டால் போதுமடா என்று நன்றி வணக்கம் கூறி என்னை அனுப்பி விட்டார்கள்

ஹலோ ஹலோ நீங்கள் எங்க ஒடுறீங்கள் இன்னும் கதை முடியவில்லை...சரி சரி உங்கள் பிரச்சினை புரிகிறது இனி நான் மிச்ச கதையை சொல்ல மாட்டேன்........

இப்படி தான் ஓரு கடி ஜோக்குடன் எனக்கும் சூரியனுக்குமான தொடர்பு ஏற்பட்டது.

பின்னர் சில சந்தர்ப்பங்களில் சுஜீவாவுடனும் சர்தாருடனும் அன்புள்ள நண்பரே நிகழ்சியில் உரையாடியிருக்கின்றேன்.

கால ஒட்டத்தின் போக்கில் நானும் சூரியக் குடும்பத்தில் உறுப்பினராக இணைந்த போது என்னை வானலையில் முகுந்தன் தான் அறிமுகம் செய்து வைத்தார் கூடவே வெள்ளையனும் - நிகழ்ச்சி வண்ணத்தடாகம் ,நேரம் நள்ளிரவு 12 மணி.

இணைந்து ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு எனக்கு நேற்றைய காற்றும் அன்புள்ள நண்பரே நிகழ்ச்சியும் வழங்கப்பட்டது.


ஆரம்பத்தில் சர்தாருடனும் பின்னர் முகுந்தன் வெள்ளையன் ஆகியோருடனும் அன்புள்ள நண்பரே நிகழ்ச்சினை தொகுத்து வழங்கினேன்.

இது நேயர்களுடன் கலந்துரையாடும் ஒரு நிகழ்ச்சியாக வடிவம் பெற்றது.மிக முக்கியமாக சமூக அவலங்கள் வேடிக்கையான விடயங்கள் ,வாழ்வின் அனுபவங்கள் என பல்வேறு பரிமாணங்களை இந்த நிகழ்ச்சி தொட்டுச் சென்றது.

முற்றிலும் நேயர்களின் திறமைகளுக்கு களமைத்துக் கொடுப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.

இதன் ஊடாக பெருமளவில் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கும் ஆற்றல் மிக்க இளம் பேச்சாளர்கள் உருவானர்கள்.

கவிதைச் சமர்

பல கவிஞர்களையும் இந்த நிகழ்ச்சி உருவாக்கியது.வியாழக் கிழமைகளில் முகுந்தனுடன் இணைந்து வழங்கிய கவிதைச் சமர் மிக முக்கியமானது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றி முற்று முழுதாக முகுந்தனையே சாரும்.

அவர் தான் இந்த நிகழ்ச்சியின் பிரசவ தந்தை.

முகுந்தனின் பாடசாலைக் கால இலக்கிய அனுபவங்கள் மற்றும் நேயர்கள் உடனான அசைக்க முடியாத பிணைப்பு என்பன இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமான நிகழ்சிகளில் ஒன்றாக ஆக்கியது.

நானும் முகுந்தனும் சூரியனில் இருந்து வெளியேறுவதற்கும் இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணம் என்பது கசப்பான உண்மை.

புல பதிய கவிஞர்களுக்கு கவிதைச் சமர் களம் தந்தது இலங்கையின் மூத்தன கவிஞர்கள் இராதாமேத்தா மற்றும் மேமன் கவி போன்றோரின் நேரடி பங்களிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஊக்கமளித்தது.

வானொலி கவிஞர்கள் பலர் உருவாவதற்கும் அவர்கள் தங்கள் திறமைகளை புடம் போடவும் கவிதைச் சமர் வாய்ப்பு ஏற்படுத்தியது.

ஒரு வாரத்திற்கு முன்னரே வழங்கப்படும் கவி வாதத் தலைப்புகளுக்கு தங்கள் கவிதைகளால் கவிஞர்கள் பலம் சேர்ப்பது தான் இந்த நிகழ்ச்சி – நிச்சயமாக இது ஒரு புதிய முயற்சி.

இந்த நிகழ்ச்சிக்கு வந்து குவியும் ஆக்கங்களே இந்த நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் பெற்றிருந்த ஆதரவிற்கு சான்று.

அலுவலக மேசையில் வந்து குவியும் கவிதைகளில் இருந்து எதை படிப்பது எதை தவிர்ப்பது என்பதே எங்களிருவரும் தலையாய பிரச்சினையாக இருந்த காலம் அது.

நேயர்களின் உச்ச பட்ச பங்களிப்புடன் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் நிச்சயம் அன்புள்ள நண்பரே கொண்ட வந்த கவிதைச் சமருக்கு ஒரு இடம் உண்டு.

அதேபோல் அன்புள்ள நண்பரே நிகழ்ச்சியின் ஊடே நான் உருவாக்கிய சில புதிய அம்சங்களில் முக்கியமானது கேள்வி நேரம் நேயர்கள் தங்கள் மனங்களில் தோன்றும் சந்தேகங்களை தபால் அட்டைகள் மூலம் எழுதி அனுப்பினால் அவற்றிற்கான பதில்களை தேடி அவற்றை வானலையில் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி.

அது அறிவியல் சார்ந்த பல விடயங்களை நான் தேடி அறியவும் அவற்றை வானொலி வடிவத்தில் பகிர்வதற்கான வாய்ப்பினையும் எனக்கு வழங்கியது.

அன்புள்ள நண்பரே நிகழ்ச்சி ஜனரஞ்சக நிலை கடந்து கொஞ்சம் தீவிரப் போக்கினை எடுத்தமையும் அதில் பல்வேறு கருத்துக்களை நான் முன்னிலைப்படுத்திய விதமும் ஜனரஞ்சக அறிவிப்பாளர் நிலையை எட்ட முடியாமல் தடுத்த விட்டன.

சாதாரண நேயர்கள் என்னுடன் உரையாட தயங்கும் நிலையை இது போன்ற தீவிரப் போக்கு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தின.

சூரியனின் இரண்டாவது வருட நிறைவை முன்னிட்டு அன்புள்ள நண்பரே நிகழ்ச்சியின் சிறப்பான பங்கேற்பாளர்களை அழைத்து வந்து அவர்களின் பங்கு பற்றுதலுடன் ஒரு வார நிகழ்ச்சியை வழங்கினோம்.

அன்புள்ள நண்பரே நிகழ்ச்சிக்கான விடயங்களை தேடுவதும் அது தொடர்பில் தகவல்களை திரட்டுவதும் என்கு தேடி அறிதலின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.இந்த நிகழ்ச்சிகான எனது தேடல் இந்த நிகழ்ச்சியில் நான் வெளிப்படுத்திய கருத்துக்களை கனதிமிக்கதாய் மாற்றியது.

கல்விச் சமூகத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் பலர் நேரடியாக இந்த நிகழ்ச்சி போக்கு குறித்து எனக்கு பாராட்டு தெரிவித்தமை நிச்சயம் கடின உழைப்பின் பலன் என்று தான் கருதுகின்றேன்.

அறிவிப்பாளர்கள் தங்களை காலத்தின் போக்குகளை புரிகின்றவர்களாக உலகத்தை தெரிந்து கொள்பவர்களாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதி கொண்டவன்.

வெறுமனே பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சியாக இருந்தால் கூட அதன் ஊடாக ஏதாவது ஓரு விடயத்தை கேட்டுக் கொண்டு இருக்கின்றவர்களுக்கு சொல்வது தான் அறிவிப்பாளரின் திறமை.

அந்த திறமையை தேடல்களின் ஊடகத் தான் வளர்த்துக் கொள்ள முடியும்.இப்போதுள்ள புதிய அறிவிப்பாளர்களில் சிலர் வார்தைப் பஞ்சத்தில் சிக்கி தவிப்பதற்கு காரணம் அவர்களுக்கு வாசிப்பும் மொழித் தேர்ச்சியும் இல்லாதமை தான்.

அறிவிப்பாளர்களாவதற்கான அடிப்படை தகுதிகளாக பலரும் குறிப்பிடும் குரல் வளம், விடய ஞானம், பாடல்கள் குறித்த அறிவு போன்ற அடிப்படை தகுதிகள் கூட இல்லாத ஒருவர் இன்று அறிவிப்பாளராகி விட முடிவது உண்மையில் ஒலிபரப்பு துறையின் சாபம்.

இந்த நிலை மாறவேண்டும் உண்மையான திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

Comments

vaseeharan said…
////அறிவிப்பாளர்களாவதற்கான அடிப்படை தகுதிகளாக பலரும் குறிப்பிடும் குரல் வளம், விடய ஞானம், பாடல்கள் குறித்த அறிவு போன்ற அடிப்படை தகுதிகள் கூட இல்லாத ஒருவர் இன்று அறிவிப்பாளராகி விட முடிவது உண்மையில் ஒலிபரப்பு துறையின் சாபம்////

நீங்கள் கூறுவதை ஏற்று கொள்கிறேன் அண்ணா.... தற்போது இருக்கும் அறிவிப்பாளர்களில் பலருக்கு நீங்கள் கூறிய மூன்றும் இருப்பது மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. நீங்கள் கூறிய மூன்று விடயங்களுடன் தேடலும் அதிகம் இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அது தான் ஒரு ஒலிபரபாளனுக்கு முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. வானொலி ஒலிபரப்பு துறைக்கு வரும்,ஏற்கனவே இருக்கின்ற இளம் அறிவிப்பாளர்கள்பலர் இதை நிச்சயம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.............
sharthaar said…
ரமணரே! உங்கள் நினைவுப்பயணத்தில் நானும் உங்களோடு ஒரு சக பயணியாக வருவதையிட்டு மகிழ்கின்றேன்.............

சுவாரஷ்யங்கள் தொடரட்டும்.

சர்தார்
வணக்கம் ரமணன் அண்ணா.
நீண்டநாட்களின்பின்னர் இன்றுதான் உங்கள் வலைப்பதிவுப்பக்கம் வருகிறேன். பல சந்தர்ப்பங்களில் உங்களுக்குப் பின்(தவிர்க்கமுடியாமல்) உங்கள் பிரதியாகப் பார்க்கப்பட்ட எனக்கும் இந்த அனுபவங்களில் பல அப்படியே பொருந்துவதாக உணர்கிறேன். பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.

//ஜனரஞ்சக நிலை கடந்து கொஞ்சம் தீவிரப் போக்கினை எடுத்தமையும் அதில் பல்வேறு கருத்துக்களை நான் முன்னிலைப்படுத்திய விதமும் ஜனரஞ்சக அறிவிப்பாளர் நிலையை எட்ட முடியாமல் தடுத்த விட்டன//

உண்மைதான் அண்ணா. நேயர்களின் மனநிலையை உணர்ந்துகொள்ள எடுக்கும் காலத்துக்குள் எங்களை அவர்கள் ஒரு வடிவத்துக்குள் அடைத்திருப்பார்கள். அதிலிருந்து வெளிவருவது மிகக்கடினம்.
சுவையாக இருக்கிறது உங்கள் அனுபவப் பதிவு
அருமை....அந்த நிகழ்ச்சிகள் பழைய காலத்தை நினைவூட்டிச்செல்கின்றன..
Anonymous said…
ramanan super aaka pathivu seythulliirkaL.

anpudan

theepasuthan
london.
Unknown said…
ரமணரே! உங்கள் நினைவுப்பயணத்தில் நானும் உங்களோடு ஒரு சக பயணியாக வருவதையிட்டு மகிழ்கின்றேன்.............



மதன் காந்தன் canada .

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

மீண்டும் வாழ்வோம்….