பன்னிரண்டாவது வருடத்தில் சூரியன்....

நேற்று போல் தான் இருக்கின்றது ஆனாலும் 11 வருடங்கள் உருண்டோடி முடிந்து விட்டது.சூரியன் தனது ஒலிக்கரங்கள் கொண்டு தமிழ் பேசும் நெஞ்சங்களை அரவணைக்க ஆரம்பித்து 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எத்தனை சாதனைகள் எத்தனை வேதனைகள் அத்தனையும் தாண்டி இன்றும் மக்கள் மனங்களில் தனித்துவமான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கின்றான் சூரியன். உலக வர்த்தக மையத்தின் 35வது தளத்தில் இருந்து இலங்கை முழுவதற்கும் தமிழ் பரப்பும் வானொலியின் 11 வருடம் என்பது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பெருமை கொள்ளத்தக்கது.இலங்கையின் முதன் முதலாக 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பை ஆரம்பித்த தனியார் ஒலிப்பரப்பு ஊடகம் சூரியன். வானொலி மீதான மக்களின் அவதானிப்பு குறைவாக இருந்த காலத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது சூரியன் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.வானொலிக்கென வகுக்கப்பட்ட சம்பிரதாயங்களை உடைத்து ஒரு மாற்றத்தை தமிழ் ஊடகப் பரப்பில் ஏற்படுத்திக் காட்டியது சூரியன். தமிழ் ஒலிபரப்பு துறையின் தாயகமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல வருடங்கள் பணியாற்றிய பழுத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் தலைமையில் புதிய இளைஞர்கள...