எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது !

2009 பேரவலத்தின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வேறு தளங்களுக்கு நகர்த்தப்பட வேண்டிய நிலை உருவானது. ஆயுதப் போராட்டங்களின் மூலமாக தனி நாடு உருவாக முடியும் என்ற சித்தாந்தம் மாற்றமடைந்திருக்கும் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் உலக நடைமுறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த மூன்று தசாப்தகால போராட்டத்தில் எமக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கிற்காய் மடிந்து போனவர்களின் கனவுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நாம் சென்று விட முடியாது. 2009 ற்கு முன்னர் விடுதலைப் போரின் ஆதரவுத் தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்கள் 2009 ற்கு பின்னர் விடுதலைக்கான முனைப்புகளின் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை குலைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்த முடியாத நீண்டகால பேரழிவுகளை புலம் பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா அரசு நம்புகின்றது அதனை எண்ணி அஞ்சுகின்றது. தயாகத்தில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான தண்டனையை புலம்பெயர் தமிழர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்ற அச்சமே இன்னும் ராஜபக்சக்களையும்; பென்சேகாவையும், ரனிலையும், காவிகளையும் கவலை கொள்ள வைக்கின்றது. ஸ்ரீலங்கா அரசால் ஆக்கரிமிக்கப்பட்ட எமது மண்ணில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாயக மக்களும் அவர்களை அரசியல் ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மிகக் கூடிய அழுத்தங்களை எதிர் கொண்டுள்ள நிலையில் புலம்யெர் தமிழர்களின் செயல்பாடுளே வீச்சம் பெற வேண்டிய நிலையை காலம் ஏற்படுத்தி விட்டுள்ளது. ஆனால் துரதிஸ்டவசமாக நாங்கள் எமக்குள்ளான போராட்டங்களை முனைப்பு படுத்தவதில் தீவிரம் காட்டி நிற்கின்றோம். தாயகத்தில் இன்னும் எங்கள் மக்களின் அவலங்களை, முள்ளிவாய்கால் பேரவலத்தின் வலிகளை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தேவைகளை சர்வதேச நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் தொடர்ச்சியாக எடுத்துச் சொல்ல வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் முன்னால் விரிந்து கிடக்கின்றது. எமது போராட்டத்தை இதன் மூலமாகவே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். நாடு கடந்த மக்களின் விடுதலை உணர்வு மங்கிப் போகமால் நிலைத்திருக்க வேண்டும். எனினும் இலங்கையில் இடம்பெறுவது இன அழிப்பா இல்லையா என்பதே இன்று விவாததத்திற்குரிய விடயமாக மாறிப் போயிருப்பது எவ்வளவு தூரம் வேதனைக்குரியது. இன அழிப்பு என்றால் என்ன என்று அகாராதி விளக்கங்கள் தேடி அது சரி இது பிழை என்று விவாதிப்பதிக்கும் எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது. இன அழிப்பு ( Genocide) என்றால் அது யூதர்களுக்கு மட்டுமேயானது யூத இனம் மட்டுமே இன அழிப்பிற்குட்பட்டது எனவே அதனை பயன்படுத்துவது எமக்கு பயன்தராது என்பதே அதனை நிராகரிப்பவர்கள் சொல்லும் காரணம். இன அழிப்பு என்பது மிகப் பெரிய விடயம் அதை நோக்கி நகர்வதும் அதனை நிரூபிக்க முயல்வதும் வெற்றியை தேடித்தராது அது வீணான முயற்சி என்று ஆதாரங்களை அடுக்குகின்றார்கள். இன அழிப்பு என்றால் ஒரு இனத்தை முழுமையாகவோ பகுதியாகவோ இல்லாமல் செய்வதற்கு மற்றுமொரு இனம் மேற்கொள்ளும் தாக்குதல். இது பகுதி பகுதியாக ஒரு இனத்தை அழிக்கும் சங்கிலித் தொடர் நிகழ்வுகளை கொண்டதாக இருக்கும் என்று சொல்கின்றார்கள். முள்ளிவாய்காலில் ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழர்களை கொன்றது மட்டுமல்ல அதன் பின்னர் வடக்கு கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட பல நடவடிக்கைகளும் தமிழர்கள் மீது இன அழிப்பு நடைபெறுகின்றது என்பதற்கு ஆதாரங்களாக இருக்கின்றன.குறிப்பாக ஒரு இனத்தின் இனவிருத்தியினை தடை செய்யும் முனைப்புகள் கூட இன அழிப்பின் ஒரு வடிவம் தான் என்று சொல்லப்படுகின்றது. கோட்பாடுகளும் வரைவிலக்கணங்களும் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டவை அவை காலப் போக்கில் மாற்றமடைந்தே வருகின்றன. அது போல தமிழர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் செயல்பாடுகளும் இன அழிப்பாக ஒரு காலத்தில் பதிவு செய்யப்படலாம், அப்படி ஒரு போதும் நடக்காத என்று அடித்துக் கூறும் அதீத சக்தி பெற்றவர்கள் யாரும் இங்கில்லை என்றே கூறலாம். காலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. நாம் எமக்குள் மோதி என்ன பலன்; கிடைத்துவிடப் போகின்றது. ஆனால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பா ? போர்குற்றமா ? என்ற ஒரு பதத்திற்கான மோதலில் நாம் ஈடுபடுவதையும் இதனை முன்வைத்து தமிழர் சமூகம் பிளவு பட்டு நிற்பதை தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் விடுதலை தீயில் ஆகுதியாக்கிய அந்த ஜீவ ஆத்மாக்கள் மன்னிக்குமா ? எமக்குள் எழுந்துள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குள் இனப் படுகொலை புரிந்தவர்கள் அல்லது போர் குற்றம் புரிந்தவர்கள் தப்பி விடுவார்களே ? நாம் எமது பிரச்சினைக்கு ஒரு முடிவிற்கு வரும் போது அங்கே “எல்லாம்” முடிந்து போய்விடுமே ? அப்போது நாம் என்ன செய்வோம் எங்கள் முன் உள்ள மிக முக்கிய பிரச்சினை எமது இனத்தின் விடுதலையா அல்லது எம்மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையா போர் குற்றமா என்ற விவாத்திற்கான தீர்ப்பா ? எது முக்கியம் என்பதை சம்பந்தப்பட்டவர்களே தீர்மானிக்க வேண்டும் மக்கள் மத்தியில் வெளிப்படையான உரையாடல்கள் இன்றி தெளிவு படுத்தும் வேலைத் திட்டங்கள் இன்றி புலம் பெயர் தமிழர் அமைப்புகள் தமது வேலைத் திட்டங்களை மூடி வைப்பது ஆரோக்கியமாகாது. 2009 ற்கு முன்னர் ஒரணியாக இருந்தவர்கள் இப்போது எதிரிகள் போல் முறைத்துக் கொண்டு திரிவது ஏன் ? எல்லா அமைப்பிலும் எல்லா இடத்திலும் தவறுகள் இருக்கும் அது தவிர்க்க முடியாதது தான்.உலகின் மிக உறுதியான கட்டுக் கோப்பான விடுதலைப் போராட்ட அமைப்பில் தான் மாத்தையாவும் கருணாவும் இருந்தார்கள் அதற்காக விடுதலைப் புலிகளே தவறான அமைப்பு என்று யாராவது சொல்லி விட முடியுமா ? முள்ளிவாய்கால் நினைவு நிகழ்வை நடத்துவதில் தொடங்கி இன்று கனேடிய பாராளுமன்றத்திற்கு செல்லும் பிரதிநிதி யாரின் “செல்லம்”; என்பது வரை எங்கள் முரண்பாடுகள் முட்டி மோதுகின்றன. இதற்கிடையில் தாளத்திற்கு போட்டியாக ஆட்டம் ஆடும் நிகழ்வுகளும் இதன் நீட்சியாக அரங்கேறுகின்றன. இது கால ஓட்டத்தில் இன்னும் பல பிளவுகளை எங்களுக்குள் தோற்றுவிக்கும். இன்னும் இன்னும் பலவாய் நாம் பிரிந்து போகின்ற நிலை எம்மை மேலும் பலவீனப்படுத்தும், எங்கள் இலட்சியங்கள் தூரமாகும். புலம் பெயர் அமைப்புகளுக்கு இருக்கின்ற மக்களின் ஆதரவு தளம் இதனால் சிதைக்கப்படுகின்றது என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எம்மவர்களை வெற்றி கொள்வதற்கு அல்லது அவர்களை வீழ்த்துவதற்கே வியூகம் அமைப்பதற்காய் எம் நேரத்தை தொலைப்போம். தமிழ் மக்களை தலைமை தாங்குவது கனேடிய தமிழர் தேசிய அவையா, கனேடிய தமிழ் காங்கிரசா, நாடு கடந்த அரசாங்கமா… இல்லை இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஒரு அமைப்பா என்பது தன் நிலம் பறிக்கப்பட்ட எனது சகோதரனின் கவலை அல்ல ? அடுத்த வேளை உணவிற்கு யாரிடம் கையேந்தலாம் என்று அந்தரித்து அலையும் அப்பாவித் தமிழனிற்கு கனேடிய பாராளுமன்றத்திற்கு யார் தெரிவாகின்றார் என்பதும் முக்கிய பிரச்சினையாக இருக்காது. ஊடக பரப்புரைகளினால் ,பொருளாதார பலத்தினால்;, மாறி மாறி முன்வைக்கப்படும் அவதூறுகள் எம்மினம் குறித்த தவாறன புரிதல்களை அரசியல் கட்சிகளிடமும் அதன் ஆதரவாளர்களிடமும் ஏற்படுத்துவது எத்தனை ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். பொருளாதார பலத்தினால் எதனையும் செய்து விடலாம் என்றும் காசு கொடுத்தால் தமிழ் ஊடகங்கள் எதனை வேண்டுமானாலும் ஒலி ஒளி பரப்பும் என்ற தவாறன தோற்றப்பாடுகள் ஆராக்கியமான சமூகத்தின் அறிகுறியாக அமையுமா ? புலம் பெயர் தமிழர்களின் பலத்தினால் மீண்டும் வாழும் கனவோடு காத்திருக்கும் தாயக மக்களுக்கு நாம் எதனை வழங்கப் போகின்றோம் ? தாயக விடுதலைப் போரில் தம் உறவுகளை இழந்து நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு நாம் வழங்கும் நம்பிக்கை என்ன ? இங்கிருந்து எங்கள் முரண்பாடுகளை மூட்டை கட்டி கப்பல் ஏற்றி அனுப்பி வைப்போமா ? கனேடிய காங்கிரஸ் மீதான விமர்சனம் ஒரு பெட்டி, கனேடிய தமிழ் தேசிய அவை மீதான குற்றச்சாட்டுகள் ஒரு பெட்டி, நாடு கடந்த அரசாங்கத்தினர் மீதான விமர்சனங்கள் ஒரு பெட்டி என்று எங்கள் தேசத்தில் பரிதவித்து நிற்கும் உறவுகளுக்கு பரிசளிப்போம். ஆம் நாம் எல்லோரும் தாயகத்தில் வாழும் உறவுகளின் நலனுக்காகத் தானே இங்கே செயல்படுகின்றோம். மூன்று இலட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் ஒற்றுமையாக செயல்பட முடியாத ஒரு இனத்திற்கு தனி நாடு தேவயா என்று இந்த நாட்டு அரசாங்கமும் ஏனைய இனத்தவரும் கேள்வி எழுப்புதை தவிர்க்க முடிhயமல் செய்கின்றன எங்கள் நகர்வுகள். இதனை மாற்றியமைப்பதற்கு திறந்த உரையாடல் ஒன்றை மேற்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் முன்வர வேண்டும், அது தான் இன்றைய காலத்தின் தேவையாகவும் உள்ளது. இனியும் காலம் கடத்தாமல் பேசுங்கள்.. நம்பிக்கை என்பது மட்டும் தான் நல்லது ஏனென்றால்; எறும்புக்கும் கூட வாழ்கையிருக்கின்றது ஆம் அது அதன் ஒற்றுமையால் உருவான வாழ்கை ! எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது அதனை பிடித்து இழுத்து நிறுத்த வேண்டியது யார் ? .

Comments

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

மீண்டும் வாழ்வோம்….