ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று A Gun and a Ring ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.
சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவான எதிர்பார்பை ஏற்படுத்தி விட்டுள்ளதை அரங்கில் திரண்டிருந்த இரசிகர்களின் எண்ணிக்கை புலப்படுத்தியது.
நம்வர்கள் படைப்புகள் என்றாலே தூர விலகி ஓடும் நம்மவர்களே நான்கு அரங்குகளிலும் இதன் முதல் காட்சியை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தமை ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி.
அந்த ஆவலை எந்த வகையிலும் பாதிக்காத படைப்பாக அது அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது.
80 களில் ஆரம்பித்த தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் 2009 ல் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை ஒரு தகவலாக அல்லது செய்தியாக மாற்றினங்கள் கடந்து போகக் கூடும் ஆனால் இந்த மூன்று தசாப்பதங்களையும் யுத்த முனைகளிலும் அதற்கு வெளியிலும் அனுபவித்து எமக்கு அது செய்தி அல்ல அது எமது வாழ்கை.
ஆதனால் தான் போரின் வலிகளை நேரில் அனுபவித்த எம்மைவிட சிறப்பான முறையில் எவராலும் சொல்விட முடியாது என்று நான் முழுமையாக நம்புகின்றேன்.
யுத்தம் முடிந்த பின்னரும் அதற்கு முன்னரும் எமக்கு இழைக்கப்பட கொடூரங்கள் அதன் வீச்சம் குறையாமல் எங்கள் மனங்களில் நினைவுகளாய் வாழ்கின்றன என்பதற்கான மற்றுமொரு சாட்சி இந்த திரைப்படம்.
நடந்து முடிந்த யுத்தம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அது இனியும் எங்களை பாதிக்கத்தான் போகின்றது என்பதை பதிவு செய்கின்ற ஒரு முயற்ச்சியாகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.
யுத்த பூமியில் இருந்து தப்பி வந்தாலும் அது எம்மை விட்டு விடாமல் தொட்டு தொடர்கின்றது என்பதற்கான சாட்சியங்களை நாங்கள் எமது அன்றாட வாழ்வின் ஊடாகவே தரிசிக்கின்றோம்.
83 கலவரத்தில் தாக்கப்பட்ட ஒருவர் இரத்தம் தோய்ந்த தனது உடைகளை இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார் என்றால் அவர் இன்னும் அந்த வலிகளை மறந்து விடத்தயாரில்லை என்பதையே நாம் புரிந்து கொள்ளக் கூடிய செய்தியாக அவர் எங்களுக்கும் இந்த உலகத்திற்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
வெள்ளைவானில் கடத்தப்பட்ட தனது மகன் எங்கோ உயிரோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் கோவில்களில் அவன் பெயருக்கு அர்சனை செய்யும் தாய்மாரை நாங்கள் எல்லாக் கோவில்களிலும் காண முடிகின்றது. ஆந்த தாயிடம் இருப்பது நம்பிக்கையை தாண்டி நிற்கும் ஆற்றாமை.
ஒன்றுமே அறியாத எனது குழந்தையை உன்னால் கூட காப்பாற்ற முடியவில்லையே என்று கடவுள் மீது வீசப்படும் விமர்சனமாகவோ வசையாகவோ தான் அந்த அரச்சனைப் பூக்களை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது.
ஆம் யுத்தம் முடிந்து விட்டதாக உலகம் எங்கள் மீது எத்தனை முறை வேண்டுமானலும் அடித்துச் சத்தியம் செய்தாலும் எங்கள் மனங்களில் எல்லாம் யுத்தம் மரணம் வரை உயிர் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்.
புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறை மீது நாம் செலுத்தும் அதிகாரத்துடன் கூடிய வன்முறைகள் மூலம் எங்கள் வலிகளை கடத்திக் கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் நம்பிய எல்லாம் தோற்றுக் கொண்டே இருப்பதால் ....
எங்கள் நம்பிக்கைகள் எல்லாம் பொய்யாகிக் கொண்டே இருப்பதால்… எங்களிடம் இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்றானதால்…
எங்கள் வாழ்கையில் எதோ ஒரு புள்ளியில் துப்பாக்கிச் சன்னங்களால் நாம் காயப்படுத்தப்பட்டுள்ளதால் .....இது எமது கதைகளை பேசும் ஒரு திரைப்படம் என்பதை பார்வையாளனால் உள்வாங்கிக் கொள்ள முடிகின்றது. அது தான் இந்த படைப்பின் வெற்றியாகவும் கருதப்படுகின்றது.
யுத்தத்தையும் அதன் வலிகளையும் தவிரத்து விட்டு எங்கள் வாழ்கையை ஒருபோதும் பதிவு செய்து விட முடியாது என்ற யதாரத்தைப் பேசும் ஒரு படமாக யு புரn யனெ ய சுiபெ அமைகின்றது.
ஓன்றோடொன்று தொடர்பு பட்டு நிற்கும் 6 கதைக் களங்கள் மூலமாக இந்த திரைப்படத்தின் கதை சொல்லப்படுகின்றது.
கனடாவில் உணவகத்தில் பணிபுரியும் ஒருவரின் மகனின் தற்கொலை. தனது ஒரே மகன் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்பதை அறிந்து கொள்ள முனையும் மகனை இழந்த தாயின் தவிப்பு.
தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து வேறொருவனுடன் வாழ்வதை இயலாமையும் ஆற்றாமையுடனும் எதிர் கொள்ளும் ஒருவன்.தனக்கு துரோகம் செய்த மனைவியை கொன்று பழிதீர்க்க அலைகின்றவனின் கோபம்.
போரில் தனது குடும்பத்தையே இழந்த நிலையில் கனடாவிற்கு திருமணத்திற்காக வந்து சேரும் பெண். அவளை அழைத்தவனால் கைவிடப்படுகின்றாள். தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கான பதிலை கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றாள்.
தனது தவறொன்றிற்காக வருந்தி தற்கொலைக்கு முனைந்து தோற்றுப் போகும் ஒருவன்.
இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதைகளில் இவர்களுடன் தொடர்பு பட்டு நிற்கும் கிளைக் கதைகளுமாக இந்த திரைப்படம் பல தளங்களில் பயணிக்கின்றது.
இந்த கதைகளை ஒரு துப்பாக்கியும் மோதிரமும் இணைக்கும் உத்தி முற்றிலும் மாறுபட்ட திரை அனுபவம் ஒன்றை தந்து நிற்கின்றது.
உன்னோடு எனக்கு இனி எதுவுமில்லை என்று கூறி காதலானால் அடித்து வீழ்த்தப்பட்டு கிடக்கும் முன்னாள் கணவனின் முகத்ததில் அவனின் மனைவி வீசி எறியும் மோதிரம் முடிவில் வாழ்வை தொலைத்து விட்ட இருவரின் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்கான குறியீடாக மாற்றப்பட்டுள்ளது.
ஒருபுறம் இழப்புகள் வலிகள் குறித்தும் ஏமாற்றகள் துரோகங்கள் குறித்தும் வாழ்வின் கறுப்பு நினைவுகளை பதிவு செய்யும் இந்த திரைப்படம், இழப்புகளை தாண்டியும் வாழ்கை இருக்கின்றது புதிய பயணங்களுக்கான பாதைகளை நாங்களே தெரிவு செய்ய வேண்டும் என்ற தெளிவானதும் அவசியமானதுமான செய்தி ஒன்றை எங்கள் எல்லோருக்காகவும் சொல்லி நிற்கின்றது.
யுத்தம் ஏற்படுத்தி நிற்கும் வலிகளை கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலமாகவே இயக்குனர் லெனின் சொல்லியிருக்கின்றார்.
அவை காட்சிகளாக விரிந்திருந்தால் இன்னும் காத்திரமாக அமைந்திருக்கும் என்று சிலர் முன்வைத்த விமர்சனங்களோடு என்னால் உடன்பட முடியவில்லை.
யுத்தம் என்பது என்ன ? அது ஏற்படுத்தி சென்ற இழப்புகள் எவை ? அவை சார்;ந்த வலிகள் எவ்வாறனவை என்பதை காட்சிப் படிமங்களாகவே அறிமுகம் செய்ய வேண்டிய தேவை ஒரு படைப்பாளிக்கு கிடையாது என்றே நான் சொல்வேன்.
அது தவிரவும் அவ்வாறு யுத்தக் காட்சிகளை உட்புகுத்துவது நாங்கள் பார்த்து பார்த்து சலித்த மலின சினிமா உத்தியாகவே மாறிப்போகும் அபாயமும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது.
யுத்தமும் வலி நிறைந்த அதன் கோர முகமும் பாதிக்கப்பட்டவர்களின் வார்தைகளின் ஊடாகவும் அவர்களின் நடவடிக்கைகள் மூலமாகவும் சொல்லப்பட்டுள்ளமை இதனை வேறுபட்ட சினிமாவாக அடையாளப்படுத்தியிருக்கின்றது.
ஆவணப்படத்திற்கும் வெகுஜன சினிமாவிற்கும் இடையிலான பாதையில் இது பயணிக்கின்றது.அது ஆபத்தான பயணம் தான் என்பதை சில இடங்களில் பார்வையாளனும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
யுத்தம் என்பது இன மத வேறுபாடுகள் கடந்தது, கண்டங்கள் கடல்கள் தாண்டியும் அது ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்திவருகின்றது என்பதற்கான குறியீடாக இந்த திரைப்படத்தில் சூடானில் இருந்து வெளியேறி கனடாவில் வாழும் ஒருவரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்படுகின்றது.
எங்களில் பலருக்கும் இருக்கும் குழப்பகரமான மனப் போக்கும் அது சார்ந்து எழும் பிரச்சினைகளும் அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் கோபியின் பாத்திரத்தின் ஊடாக இயக்குனர் பதிவு செய்கின்றார்.
பாரம்பரிய வாழ்வியல் சூழலுக்குள் இருந்து வேர்பிரித்து வீசப்பட்ட ஒரு தலைமுறை நவீன வாழ்கைச் சூழலையும் அதன் போக்கினையும் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பதையும் அதன் விளைவுகள் மரணத்தில் சென்று முடிவதையும் அழுத்மாகவே பதிவு செய்திருக்கின்றது இந்த திரைப்படம்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, ஒருபாலின உறவு என எங்கள் சமூகம் தள்ளி நின்று பார்க்கின்ற அல்லது பார்க்க முனைகின்ற பக்கங்களை இந்த திரைப்படம் மிகவும் துணிவோடு கையாண்டிருக்கின்றது.
இந்த கதையின் மையமாக கதைகளை இணைக்கும் பாலமாக மதிவாசனின் பாத்திரம் கதையோட்டத்தின் இடையறாத தன்மையை பேணுவதற்கு பெரிதும் உதவியாக அமைகின்றது.
இறுதியாக இது தமிழர்களின் இருண்ட பக்கங்களை மட்டுமே பேசுவதாக எழும் ஒரு சில விசமத்தனமான விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் கடந்து போவதே நல்லது என்று நான் கருதுகின்றேன்.
இந்திய சினிமாவின் தந்தையாக கொண்டாடப்டும் சத்தியஜித்;ரேயின் படைப்புகள் இந்தியர்களின் மோசமான வாழ்வியலை பேசுவதாகவும் அவர் இந்தியாவின் வறுமையை விற்று காசு பார்த்ததாகவும் கூட விமர்சிக்கப்படுகின்றார்.ஆனால் அதனையும் தாண்டி அவரின் படைப்புகள் காலங்களை கடந்தும் வாழ்கின்றன என்ற உண்மையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு படைப்பு என்பது எப்போதும் சந்தோசப் பக்கங்களையும் நல்ல முகத்தையும் மட்டுமே காட்ட வேண்டும் என்ற எந்த விதிமுறைகளும் கிடையாது. எனக்கு பிடிப்பதையும் எனக்கு சரியென படுவதையும் படைக்குமாறு எந்த ஒரு படைப்பாளிக்கும் எவரும் கட்டளை போட முடியாது.
விடுதலைக்காக போராட தொடங்கிய போராட்ட அமைப்புகள் தமது அமைப்பிற்குள்ளும் விடுதலைக்காக போராடிய மாற்று அமைப்புக்களுடனும் பேராட வேண்டிய கசப்பான நிலையை நாங்கள் வசதி கருதி மறந்து விடக் கூடாது.
இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகளுக்கு இருக்கும் அதே விதமான இழப்பும் வேதனையும் தான் சகோதர இயக்க படுகொலைகளில் பலிகொள்ளப்பட்டவர்களின் உறவுகளுக்கும் இருக்கும் என்பதை நாங்கள் கவனிக்க தவறிவிடுகின்றோம்.
அவர்களின் வலிகளை பேசாமல் விடுவதன் ஊடாக அல்லது அதனை மறந்துபோய் கடந்து செல்வதில் எங்களை உத்தமர்களாக அடையாளப்படுத்த முனையும் வரலாற்று தவறை நம்மில் சிலர் இப்போதும் செய்து கொண்டே தான் இருக்கின்றோம்.
இயக்கம் ஒன்றில் பயிற்சி முகாமில் இருந்து தப்பிச் செல்ல முனையும் அல்லது மாற்று அமைப்புக்களோடு தொடர்புகளை கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் போராளிகளை அடித்தே கொலை செய்யும் இரும்பன் என்ற ஒரு இயக்கப் பொறுப்பாளர் தான் நம்பிய போராட்டத்தையும் தன்னை நம்பிய போராளிகளையும் அங்கே கைவிட்டு கனடாவிற்கு தப்பி ஓடிவந்து வந்து கோப்பை கழுவிக் கொண்டிருப்பது எங்கள் எல்லோர் மீதுமான நியாயமான விமர்சனம் தான்.
அங்கிருந்து தப்பி இங்கு வந்த பின்னர் இங்கிருந்த கொண்டு அங்குள்ள மக்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் அயோக்கியத் தனங்களை நம்மில் சிலர் இப்போதும் செய்து கொண்டு தானே இருக்கின்றார்கள்.
ஏனைய குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படும் ஒருவர் தனது குடும்பத்தின் மீது சரியான அக்கறை கொள்ளாமல் இருப்பதையும் அதனால் அவர் எதிர்கொள்ளும் விபரீதமும் எங்களில் பலருக்கான பாடம்.
தாயில்லாமல் வளரும் குழந்தை அதனை கவனிக்க நேரமில்லாமல் சமூக சேவை செய்யும் தந்தை தந்தையின் வரவிற்காகவும் அரவணைப்பிற்காகவும் ஏங்கி தவிக்கும் குழந்தை அந்த ஏக்கம் ஏற்படுத்தி நிற்கும் விளைவு என கனமான செய்தியினை இந்த திரைப்படம் பதிவு செய்கின்றது.
வேலை வேலை என்று குடும்பம் பற்றி கவலை கொள்ளாமலும் குழந்தைகள் பற்றி அக்கறைப்படாமலும் ஓடிக் கொண்டிருக்கும் எம்மில் பலர் விடும் தவறுகள் எவ்வாறான பின்விளவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எச்சரிக்கை மணியை உரத்து ஒலிக்கச் செய்திருக்கின்றார் லெனின்.
இன்னும் கொஞ்சம் வேகமாக காட்சிகள் நகர்ந்திருக்கலாம் என்பதும் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதும் எனது தனிப்பட்ட கருத்தாக அமையும்.
தாய் நிலத்தில் இருந்து வேரிழந்து வந்து விழுந்திருக்கும் ஒரு இனக் குழுவான ஈழத் தமிழர்கள்; எங்கள் இருப்பையும் அடையாளங்களையும் பதிவு செய்யும் முயற்சிகளின் முக்கிய முன்னகர்வாக இதனை பார்க்க வேண்டும்.
பெருவணிகமாக மாற்றம் கண்டு நிற்கும் தென்னிந்திய சினிமாவைப் பார்க்கும் வெகுஜனக் கண்களால் இவ்வாறான திரைப்படங்களை பார்ப்பதை தவிர்த்துக் கொண்டால். இது கொண்டாடப்பட வேண்டிய ஒரு திரைப்படமாக நமது படைப்பாக இருக்கும்.
Comments
நன்றியுடனும் தோழமையுடனும் முகுந்தமுரளி.