இசையின் சங்கமம்...Tunes of Passion
தேசம் தாண்டுதல் என்பது மனிதர்களை பொறுத்தவரை வலி சுமக்கின்ற நிகழ்வாகவே இருக்கும்.
ஓடி விளையாடி கூடிக் களித்த மண்ணில் இருந்தும் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் என அத்தனையும் தொலைத்து விட்டு முற்றிலும்; அந்நியமான வாழ்க்கைச் சூழலுக்குள் பிடுங்கி வீசப்படுதல் என்பதும் கூட ஒரு வகை மரணம் தான்.
எத்தனை எத்தனை வசதிகள் வாய்ப்புகள், பாதுகாப்பு,கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் இன்னும் இன்னும் பலவாய் விரியும்; காரணிகளை புலம்பெயர் தேசங்களில் அனுபவிக்க முடிகின்ற போதிலும் தாய் மண்ணின் மணம் வீசும் காற்றினை தொலைத்தல் என்பது கொடுமையானது.
அவ்வாறாக இழத்தலில் உயிர்க்கும் புதுவாழ்வில் தாய் மண்ணில் நாம் வாழ்ந்த நினைவுகளையும் தாய் மண் தந்து போன சுகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டு வருவது இங்கும் அழிந்து போகாமல் தொடரும் எங்கள் கலைகளும் பாராம்பரியங்களும் தான்.
இங்கு பிறந்து வாழும் அடுத்த தலைமுறை தமிழ் பற்றிய அறிதலையும் புரிதலையும் கொண்டிருப்பதற்கு காரணம் இங்குள்ள ஊடகங்களினதும் கலைஞர்களினதும் அர்பணிப்புடனான பங்களிப்பு என்பது மிபை;படுத்தப்படாத உண்மை.
தமிழின் எதிர்கால இருப்பிற்கான முனைப்புகளுக்கு தமிழர்கள் வழங்கும் ஆதரவு என்பது இன்னும் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
இலங்கையில் ஊடகச் சூழலில் பல வருடங்கள் வாழ்ந்தவன் அங்குள்ள பெரும்பாலான கலைஞர்களோடும் தொடர்புகளை கொண்டிருந்தவன் என்ற வகையில் தேசம் தாண்டியும் நீளும் கலைஞர்களின் சோகங்களை இங்கும் உணர முடிவது வேதனையானது தான்.
அங்கு ஒரு இசைத் தொகுப்பை வெளியிடுவதற்கு ஒவ்வொரு கலைஞனும் சந்திக்கும் அத்தனை சவால்களையும் வசதி வாய்ப்புகளில் பல படி மேலாங்கி நிற்கும் இந்த மண்ணிலும் அவர்கள் சந்திக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையினை மனது கனக்கும் வேதனைகளோடு பதிவு செய்கின்றேன்.
இங்கு வாழும் நம் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தாம் சார்ந்த கலைத்துறைக்கு தம்மை முழுமையாக அர்பணித்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
அது இங்குள்ள வாழ்கைச் சூழலின் தாக்கம் சார்ந்த ஒன்றாகவே இருக்கின்றது.
இயல்பு வாழ்விற்காய் ஒன்றிற்கும் மேற்பட்ட பணிகள் குடும்ப நலன் சார் தேவைகளின் கவனிப்பு வார விடுமுறை கொண்டாட்டங்கள் என நின்று பேசவும் நேரமின்றி அலையும் வாழ்கை தான் இங்கே வாய்க்கின்றது.
ஆனால் அத்தனை நெருக்கு வாரங்களையும் தாண்டி தங்களுக்கும் புதைந்திருக்கும் கலைத் தாகத்தையும்; தமிழ் மீதான காதலையும் வெளிப்படுத்த முனையும் ஏரானமான படைப்பாளிகளை சந்திக்க முடிவதில் சந்தோசம்.
நான் தற்போது பணியாற்றி வரும் வணக்கம் எப்.எம் வானொலி ஊடாக பிரதி சனிக்கிழமைகளில் எமது கலைஞர்களோடு உரையாடவும் அவர்களின் கதைகளை பேசுவதற்குமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது.
ஊடகத்துறையில் நான் மிகவும் விரும்பி நேசிக்கும் நிகழ்சிகளில் ஒன்றாக நான் பேச நினைப்பதெல்லாம் எப்போதும் இருக்கின்றது.
சூரியனில் பணியாற்றி காலங்களில் இலங்கையின் புகழ் பூத்த பாடகிகளில் ஒருவராக நித்தியா மகிந்தகுமார் அவர்களுடன் இணைந்து இது போன்ற நிகழ்சியினை நடத்தியிருந்தேன்.
அந்த நிகழ்ச்சி வேறு எதுவும் தந்து விட முடியாத மன நிறைவை தந்திருந்தது அதே போன்ற ஒரு நிகழ்சியினை இங்கும் நடத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
இங்கு புலம்பெயரந்து வாழும் கலைஞர்களையும் இங்கு பிறந்து வளர்ந்த அடுத்த தலைமுறை கலைஞர்களையும் சந்திக்கும் சந்தர்ப்பத்தை அது எனக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.
அவ்வாறு நான் சந்தித்த கனடாவின் முக்கிய பாடகர்களின் ஒருவரான பிரபா பாலகிருஸ்ணன் மூலமாக மேலும் பலரை அறிமுகமாக்கிக் கொண்டேன்.
அவ்வாறு கிடைத்த அனுபவங்களில் ஒருவர் தான் Steve Cliff; ஜேர்மனியில் பிறந்து வளர்த தமிழ் இளைஞர்.
மூன்று வயதில் இசை மீதான காதலில் விழுந்தவர் அப்போதே அங்குள்ள இசைப் பள்ளியில் சேரக்கப்பட்டார்.
இசைக்கலைமணி தர்மினி தில்லைநாதனிடம் முறைப்படி சங்கீதமும் கற்றவர்.
10 வது முதல் ஜேர்மனியில் உள்ள இசைக் குழுக்களில் பாடகராக தனது இசைவாழ்வை தொடர்நதவர் 750 ற்கும் அதிகமான மேடைகளை தனது இசையால் அலங்கரித்திருக்கின்றார்.
பாடகராக மட்டும் நின்றுவிடாது ஒரு தாளவாத்திய கலைஞனாகவும் மிளிர வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது 6 வயதில் Drums வாத்தியத்தை பயில ஆரம்பித்தவர் அதன் தொடர்சியாக அமெரிக்க மற்றும் ஆபிரிக்க தாள வாத்திய கருவிகளை இசைப்பதற்கும் பயிற்சிகனை பெற்றுக் கொண்டவர்.
இதனால் ஜேர்மனிய இசைக் குழுக்களோடு இசை நிகழ்சிகளை நடத்தும் வாய்பினையும் ளுவநஎந ஊடகைக பெற்றுக் கொண்டார்.
தனது இசை வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை ஒரு இசை ஆசிரியனாய் தொடர்ந்த Steve Cliff ஜேர்மனியில் வாழும் பல சிறுவர்களுக்கு இசைப் பயிற்சியினை வழங்கியுள்ளார்.
தனது 16வது வதில் ஒரு இசையமைப்பாளாய் உருவெடுத்த Steve Cliff; இன்று வரை பல நூறு பாடல்களை பல்வேறு இசைத் தொகுப்புகளில் படைத்திருக்கின்றார்.
Steve Cliff கனடாவிற்கு புலம்பெயர்ந்துள்ள நிலையில் இங்குள்ள முன்னணி பாடக பாடகிகளோடு இணைந்து படைத்துள்ள இசையின் சங்கமம் Tunes of Passion என்ற இசதை் தொகுப்பு இங்கே இம்மாதம் 3ம் திகதி வெளியிடப்படுகின்றது.
கனடாவில் உள்ள முன்னணி பாடகர்கள் பாடகிகள் அனைவரும் சங்கமிக்கும் முதலாவது இசைத் தொகுப்பாக இதனை கருத முடியும்.
இசைக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒரு இளைஞனின் சாதனை முயற்சிக்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டியது காலத்தின் கடமையாகின்றது.
இங்குள்ள கலைஞர்களை ஒன்றிணைப்பதும் அவர்கள் மூலமாக ஒரு இசைத் தொகுப்பை கொண்டு வருவது என்பதும் இந்த வாழ்கைச் சூழலைப் பொறுத்த வரையில் மிக மிகக் கடினமானது.
தனது கடினமான உழைப்பால் சாவல்களை தாண்டி அதனை அவர் வெற்றிகரமான படைப்பாக வெளிக் கொண்டு வந்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது.
ஆனால் இது போன்ற முயற்சிகளுக்கு இசை இரசிகர்களாகவும் அனுசரணையாளர்களாகவும் நாங்கள் போதுமான ஆதரவை வழங்குகின்றோமா என்பது இன்னும் பதிலிடப்படாமல் இருக்கும் கேள்வியாகவே எம்மை தொடர்கின்றது.
ஆனாலும் ஒரு ஊடகம் என்ற வகையில் ஒவ்வொரு மணி நேரமும் இது "எங்கட பாட்டு" என்று வணக்கம் எப்.எம் நமது படைப்புகளை ஒலிபரப்பி வருகின்றமை பெருமைக்குரிய விடயமாக இங்கே பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது.
இது போனதுமானது அல்ல என்ற ஆதங்கம் எங்கள் எல்லோருக்கும் இருக்கின்ற போதிலும் எதிர்காலத்தில் அதற்கான பதிலை நாம் வழங்குவோம் என்பதை மட்டுமே இப்போது இங்கே பதிவிட முடிகின்றது.
எமது கலைப்படைப்புகளுக்கும் எமது கலைஞர்களுக்கும் நாங்கள் தரும் ஊக்கம் என்பது அவர்களின் இசையை அவர்களின் கலையை இரசிப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது.
இது போன்ற படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது என்பதன் பின்னணியில் பொருளாதாரம் என்ற பலம் பொருந்திய காரணி ஒன்று இருக்கின்றது என்பதை நாங்கள் எவரும் மறந்து விட முடியாது.
இங்கு வாழும் மனிதர்களின் வாழ்வு மணித்துளிகளால் ஆனது இங்குள்ளவர்களின் வருவாய் என்பது மணித்தியாலங்காளல் நிச்சயிக்கப்படுகின்றது.
அவ்வாறான சூழலில் இசைக்கும் கலைக்கும் ஒருவன் தன்னை அர்பணித்தல் என்பது அவனின் மாத வருமானத்தில் சில நூறு வெள்ளிகளின் இழப்பின் அடையாளமாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் உழைப்பிற்கும் முயற்ச்சிக்குமான குறைந்த பட்ச பெறுதியினையாவது அவர்களுக்கு மீளளிக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆதங்கம்.
இங்கு வாழும் நம்மவர்கள் அவர்களின் இசைத் தொகுப்பினை பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்வதன் மூலம் அதற்கான சந்தைப் பெறுமதியை அதிகரிக்க முடியும்;.
அதன் மூலம் இது போன்ற படைப்புகள் எங்கள் மத்தியில் பரவலான சந்தையினையும் அதன் ஊடான வருமான ஈட்டத்தையும் பெற்றுக் கொள்ளும்.
கலைஞர்கள் கலை ஈடுபாட்டிற்காக ஒரு சில முயற்சிகளை முன்னெடுக்கலாம் ஆனால் அது முறிந்து போகாமல் தொடரவும் புதிய புதிய வரவுகள் நிகழவுமான சூழலை நுகர்வோராக நாம் அனைவரும் ஏற்படுத்த வேண்டும்.
ஒரு இசைத் தொகுப்பு என்பதற்கு அப்பால் அங்கள் மொழி இனம் சாந்த அடையாளம் ஒன்றின் இருப்பிற்கான முயற்சியாக அதனை நாங்கள் கருத வேண்டும்.
அது போல் இங்குள்ள வர்த்தக நிறுவனங்களும் தொழில் முனைவோரும் இது போன்ற முயற்சிகளுக்கு அனுசரணையளிப்பதன் மூலம் இது போன்ற படைப்புகள் வெளிவருவதற்கான சூழலை உருவாக்க முடியும்.
இந்த முயற்சிக்கும் பலர் தமது ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள் அது போல் மேலும் மேலும் பல புதிய படைப்புகள் உருவாக்கப்படுவதற்கும் ஏனையவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகின்றது.
எமது அடுத்த தலைமுறை தமிழ் பேசுமா ? மெல்லத் தமிழினச் சாகுமா என்பதற்கான விடையினை வேறெங்கும் தேடாமல் எங்களுக்குள் தேடுவோம் பதிலாக நாங்களும் எங்கள் எதிர்கால நடவடிக்கைகளுமே அமையும்.
வெற்றிக்கு வாழ்த்துவோம் இசையும் தமிழும் இன்னும் வாழட்டும்
Comments