முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...
கடந்து செல்லும் காலங்களில் நாங்கள் பல முகங்களை மறந்து விடுகின்றோம் அல்லது அந்த முகங்கள் எங்கள் மனங்களில் இருந்து விலகிச் சென்றுவிடுகின்றன.
எங்கள் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் பங்கெடுத்த முகங்களும் கால ஓட்டத்தில் எங்கள் மனங்களில் இருந்து காணமால் போய் விடும் துயரங்களும் நிகழ்வாகின்றன.
நான் ஒலிபரப்புத் துறையில் எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
எனினும் வானொலி நிகழ்சிகளின் போதோ சந்திப்புகளின் போதோ சிலர் எனது ஒலிபரப்பு குறித்து தெரிவிக்கும் பாராட்டுகள் என்னை குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்கின்றன.
இந்த பாராட்டுகளையும் வாழ்துக்களையும் எனக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி தந்து விட்டு மௌனமாக கடந்து போகின்ற அந்த ஓரு மனிதர் குறித்து நான் என்ன செய்யப் போகின்றேன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கின்றது.
எனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் வாழத்துகளுக்கும் முழு முதல் காரணமானவர் அவர்.
கால ஓட்டத்தில் அவரின் முகம் சில வேளைகளில் எங்கள் மத்தியில் இருந்து மறந்து போகலாம் ஆனால் அவர் ஏற்படுத்தி விட்டுள்ள வானொலிக் கலாசாரம் என்றும் அவரின் பெயரை உரத்துச் சொல்லியவாறே இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகின்னேறன்.
இது பல காலமாக எழுதப்படாமலே விடப்பட்ட ஒரு பதிவு.எப்படி எழுதியும் என்ன செய்தும் கடன் தீர்க்க முடியாத ஒருவருக்கான காணிக்கை.
எனக்குள் இருக்கின்ற ஆதாங்கத்திற்கான வடிகாலாகவும் இதனை கருதிவிடலாம்.
சமகால மூத்த தமிழ் மொழி ஒலிபரப்பாளர்களில் ‘உலக அறிவிப்பாளர்’ என்கிற அடைமொழிக்கு மிகப் பொருத்தமானவர் யார் என எனைக் கேட்டால், திருவாளர் சி. நடராஜசிவம் என்பது எனது பதிலாக அமையும்! என்று நண்பர் மப்ரூக் கூறுவது மிகைப்படுத்தப்படாத உண்மை.
இன்று என்னைப் போல் பலரை ஏதுமற்ற நிலையில் இருந்து சில உயரங்கள் வரை உயரத் தூக்கி விட்டவர் திருவாளர் நடராஜசிவம் அவர்கள்.
வெறுமனே ஒரு வானொலி அறிவிப்பாளனாக இல்லாமல் முழுமையான ஒலிபரப்பாளன் எப்படி இருக்க வேண்டும் என்ற குறியீடாக தமிழ் ஒலிபரப்புத் துறையில் பிரகாசிப்பவர் அவர்.
கடந்த பல வருடங்களாக அவரை வழி தொடரும் ஒரு மாணவன் என்ற வகையில் இதனை அழுத்தமாக என்னாலும் கூற முடிகின்றது.
ஒலிபரப்புத் துறையின் எனக்கு ஆதர்சமானவர் அவர். ஓரு ஒலிபரப்பாளனின் வெற்றிக்கு குரலை விட முக்கியமான காரணிகள் பல இருப்பதை எனக்கும் புரியவைத்தவர்.
வெறுமனே திரைப்படப் பாடல்கள் குறித்தும் திரைப்படங்கள் திரைப் பிரபலங்கள் குறித்தும் அறிந்து கொண்டு குறுகிய வட்டத்திற்குள் சுற்றி வரும் அறிவிப்பாளர்களின் மாய வட்டத்தில் இருந்து அவர் எப்போதோ வெளியேறியிருந்தார்.
தமிழ் திரையுலகம் தாண்டி உலக சினிமா வரை ஆழமான புரிதலை கொண்டிருக்கின்றார் அவர்.
இதிகாசங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரையான அவரின் வாசிப்பு முழு நேர இலக்கியவாதிகளுக்கு இணையானது.
இசை,இலக்கியம், பொழுது போக்கு, அரசியல்,விளையாட்டு தொழில்நுட்பம் என எந்த துறையிலும் உள்ள விடயங்களை ஆழமான அறிவோடு எடுத்தாளும் திறமை மிக்கவனே முழுமையான ஒலிபரப்பாளன் என்பது தான் அவரின் கோட்பாடாக இருந்தது.
அதனை அவர் முழுமையாக நம்புகின்றார் இதனால் அதன் வழி அதனை பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்.
தாமாக உருவாக்கிய மாய உலகத்தில் தமக்காக உருவாக்கப்பட்ட விம்பங்களை பாதுகாப்பதற்காக இயல்பு மீறி இயங்கும் சிலரையும் நான் சந்தித்திருக்கிறேன்.
ஆனால் அந்த மாயங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தனது இயல்பினை எதற்காகவும் எவருக்காகவும் இழக்காமல் வெற்றி பெற்ற மனிதர் நடராஜசிவம்.
அவர் ஒலிப் பதிவுகளின் போது காண்பிக்கும் வித்தியாசமான பாவங்கள் பிரசித்தமானவை அவை பார்பவர்களுக்கு சிரிப்பினை வரவளைத்து விடும தன்மை கொண்டவை.
ஆனால் அந்த ஒலிப்பதிவினை கேட்கும் போது அதில் இருக்கும் ஜீவனை கேட்போன் உள்வாங்கிக் கொள்வதற்கு அந்த வெளிப்பாடு தான் காரணமாக அமைந்திருக்கும்.
ஒரே பாணியில் கட்டமைக்கப்பட்ட விளம்பர உத்திகளை உடைத்தெறிந்தவர் நடா அண்ணா என்று விளம்பரத் துறையில் உள்ளவர்கள் அடிக்கடி கூறி வருவதை நான் பல தடவைகள் கேட்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மையானது.
ஒவ்வொரு விளம்பரமும் மற்றொன்றின் சாயலின்றி இருக்கும் விதமான மாற்றங்களை விளம்பர ஒலிப் பதிவுகளில் பிரதி எழுத்துக்களில் உள் நுழைத்து வெற்றி கண்டவர்.
இன்று எனக்கு கிடைத்திருக்கும் ஒலிபரப்பாளன் அடையாளத்திற்கு காரணமான பிதாமகர் அவர் தான் .
எனக்கு மட்டுமல்ல சூரியன் வானொலி மூலமாக அடையாளங்களை ஏற்படுத்திய பலருக்கும் அவர் தான் மூலம்
பாராம்பரியம் மிக்க இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு பாரம்பரியத்தில் இருந்து தோன்றிய போதிலும் அதற்கு முற்றிலும் மாறுபட்டதான ஒரு புதிய தமிழ் ஒலிபரப்பு கலாசாரத்தை இலங்கையில் ஆரம்பித்து வைத்தவர் அவர்.
இலங்கையில் தமிழ் வானொலி ஒலிபரப்பில் தனியார் வானொலியின் புரட்சியின் நாயகன் எத்தனையோ விமர்சனங்களை அவர் எதிர் கொண்ட போதிலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் அதனை வெற்றிகரமான பாதையில் வழிநடத்திக் காட்டியர்.
சூரியன் வானொலி ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களில் அசைக்க முடியாத அலைவரிசையாக மாற்றம் பெற்றதில் இவரின் ஆற்றல் மிக முக்கியமானது.
அதனால் தான் இன்றும் சூரியனின் கௌரவம் மிக்க ஆலோசகராய் அவர் விளங்குகின்றார்.
எல்லா கோடுகளும் ஒரு புள்ளியில் இருந்து தான் ஆரம்பிக்கும். எனது இன்றைய வாழ்வின் தொடக்கப் புள்ளியை வரைந்தவர் அவர் தான்.
நான் தேசிய தகவல் தொழில்நுட்ப கல்லூரியின் கணனித் துறையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.
உயர் தரத்தில் கிடைத்த பெறு பேறுகளின் அடிப்படையில் யாழ் பலக்லைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத்துறைக்கே தெரிவு செய்யப்பட்டிருந்தேன் மீண்டும் ஒரு முறை முயன்று பார்க்கும் ஆவலும் விடுபட்டு மருத்துவக் கனவும் கலைந்து போயிருந்த காலம் அது.
கணனித் தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கணனி கற்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு முதலில் கிடைத்தது.
எமது குடும்ப நணப்பரும் இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவருமான திரு.சந்திரமோகன் அவர்கள் மூலமாக நடா அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது.
உலக வரத்தக மையத்தின் 35 வது மாடியில் வரவேற்பறையில் அவரும் சர்தார் ஜமீலும் என்னை சந்தித்த அந்திப் பொழுதொன்றில் எனது ஒலிபரப்பு வாழ்வின் பயணம் ஆரம்பிக்கின்றது.
சில தாள்களில் எழுதப்பட்ட பாடல் விளக்க விரிகள் செய்திகள் விளம்பர பிரதிகள் என முதல் கட்ட பரிசோதனைகளை நடத்தி முடித்தார். பாடல் ரசனை குறித்தும் அது தொடர்பான அறிவு குறித்தும் துருவித் துருவி கேள்விகள் கேட்டார்.
குரல் பதிவினை வழங்கி விட்டுச் செல்லுமாறும் வேலையில் இணைவதாக இருந்தால் எனது உடல் நிறையை குறைக்க வேண்டும் இல்லாவிட்டால் 35வது மாடியில் அமைந்துள்ள சூரியனில் என்னை பணிக்கு அமர்த்துவது சிரமமாக இருக்கும் என்ற கடியோடு விடை கொடுத்தார்.
அத தான் ஆரம்பம் அதன் பின்னர் ஓரு சில நாட்களில் மீண்டும் அவருடைய செயலாளர் அருந்ததி அக்கா எனது வீட்டிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அன்று இரவே பயிற்சியில் இணையுமாறு கோரினார்.
வானொலி அறிவிப்பாளன் ஆக வேண்டும் என்பது ஒரு கனவாக இருந்தது உண்மை தான் ஆனால் அதுவே முழு நேரத் தொழிலாக மாற்றம் பெறும் என்று அப்போது நான் நினைத்திருக்கவில்லை.
அன்று தொடங்கிய பயணத்தில் என்னை தனது உற்றசாகமளிக்கும் வார்தைகளாலும் விமர்சனங்களாலும் செதுக்கத் தொடங்கினார் நடா அண்ணா.
ஒலிபரப்பாளனுக்குள் ஒளிந்திருக்கும் வாசிப்பாளன் எவ்வளவு தூரம் ஒலிபரப்பில் ஆளுமை செலுத்துவான் என்பதை அவரில் இருந்து தான் கற்றுக் கொண்டேன்.
குரல் வளத்தை தாண்டி ஒலிபரப்பாளன் என்ற அடையளாத்திற்கு நாம் பயன்படுத்தும் மொழியின் மீது நாம் கொண்டுள்ள ஆழுமை எத்தனை அவசியமானது என்பதை எனக்கு புரியவைத்தவர்.
ஒலிபரப்பின் போதான கவனக் கலைப்பான்களுக்கு அவர் சொல்லும் பாம்புக் கதை மிகவும் பிரசித்தமானது.
ஆனால் அதன் உள் அர்த்தம் எத்தனை துன்பச் சுமைகளை நாங்கள் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை இறக்கி வைத்து விட்டு வெறுமையான மனதுடன் கலையகம் செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது.
வானொலி அறிவிப்பாளன் என்ற நிலையில் இருந்து ஒரு ஒலிபரப்பாளன் என்ற நிலை வரை மிகக் குறுகிய காலத்தில் உயரம் காணச் செய்தவர்.
நிகழ்சிகளுக்கான குரல் பயன்பாடு, செய்தி வாசிப்பு விளம்பரங்கள் என பல தளங்களில் செயல்படுகின்ற போது எவ்வாறு எங்கள் குரலையும் வெளிப்படுத்தல் பாங்கினையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற நுட்பங்களை மிகவும் கவனத்தோடு கற்றுத் தந்தவர்.
நான் எல்லோரிடம் கூறிக் கொள்ளும் ஒரு விடயம் தான் நடா அண்ணாவின் அருகாமையும் வழிகாட்டலும் கிடைத்தால் ஆர்வம் கொண்ட எவருமே ஒலிபரப்புத் துறையில் முன்னேற முடியும் என்பது தான் அதற்கு நான் மட்டுமல்ல மேலும் பல நண்பர்களும் சாட்சி.
ஒலிபரப்பு துறையில் ஆற்றல் மிக்க பலரை சந்தித்திருக்கிறேன் ஆனால் அவர்களால் நடா அண்ணா போன்று கற்றுக் கொடுக்க முடிவதில்லை.
தனக்கான ஒரு ஒலிபரப்பு பாணியினை அவர் கொண்டிருந்தாலும் எமக்கே எமக்கான ஒரு பாணியை உருவாக்க வேண்டும் என்பதிலும் அது எங்கள் குரல் வளத்திற்கு ஏற்ற வகையில் எவ்வாறானதாக இருந்தால் எங்களால் சிறப்பாக பிரகாசிக்க முடியும் என்பதிலும் அக்கறை கொண்டவர் நடா அண்ணா.
என்னை மட்டுமல்ல ஆற்றலும் ஆர்வமும் கொண்ட எல்லோருக்கும் அவர் குருவானவர்.
எனது நண்பன் தீபசுதனை சூரியனுக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்த போது என்னைப் போலவே அவனையும் கவனித்துக் கொண்டவர்.
தீபசுதன் சூரியனில் சிறிது காலமே இயங்கினாலும் அதற்குள் அவன் பெயர் வெளிப்படுவதற்கு நடா அண்ணா தான் முக்கிய காரணமாகின்றார்.
சூரியனில் இணைந்து ஒரு சில வாரங்களில் இரவு நேரச் செய்தியினை வாசிப்பதற்கான வாய்பினை வழங்கினார்.
சூரியனின் இரவுச் செய்திகள் மிக முக்கியமானவையாகவும் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகின்ற செய்தியாகவும் இருந்த காலம்.
அனுபவமில்லாத ஒருவனாக அப்போது தான் ஒலிபரப்பில் கால் பதித்திருக்கும் ஒருவனான எனக்கு அதனை வழங்கியவர் அதுவே எனக்கு பலமான அத்திவாரத்தை ஏற்படுத்தி தந்தது.
செய்திப் பிரிவினருடனான தொடர்பு பின்னாட்களில் சூரியப் பார்வைகள் நிகழ்சியினை தொகுத்து வழங்கும் வாய்ப்பினை எனக்க வழங்கியது.
இந்த வாய்ப்பு ஒரு ஒலிபரப்பு ஊடகவியலாளனாக நான் மாறுவதற்கும் அடிப்படையாக அமைந்தது.
அதேபோல் கலைஞர்களை நேர்காணும் நிகழ்சியினை இலங்கையின் புகழ் பூத்தபாடகியான நித்தியா மகிந்த குமார் அவர்களுடன் இணைந்து வழங்கும் வாய்பினையும் நடா அண்ணா எனக்க வழங்கி இருந்தார்.
இது நேர்காணல் கலையை கற்றுக் கொள்ளும் வாய்பினை எனக்கு ஏற்படுத்தி தந்தது.
இலங்கையின் கலைத் துறையின் முக்கியமான பல ஆழுமைகளை இந்த நிகழ்சியின் மூலமாக நேர்காண்பதற்கு வாய்பு கிடைத்தது.
சூரியனில் இருந்து விலகிய பின்னரும் வெளியில் நடைபெறும் விளம்பர ஒலிப்பதிவுகளின் போது அவரை சந்தித்துக் கொள்வதுண்டு.
அப்போதெல்லாம் அதே அக்கறையோடு திருத்தங்களையும் ஆலோசனைகளையும் சொல்லித் தந்திருக்கின்றார்.
எனது குரலில் ஒலிபரப்பாகும் விளம்பரங்கள் சிறப்பாக இருந்தால் உடனடியாகவே பாராட்டும் பெரும் தன்மை கொண்டவர்.
அதேபோல் அதில் தவறுகள் இருந்தாலும் உடனடியாக சுட்டிக்காட்டுவார்.
இலங்கையின் ஒலிபரப்பு உலகின் தவிர்க்க முடியாத அடையாளம் அவர்.
முழுமையான ஒலிபரப்பாளனாய் விளங்கும் அவர் ஒலிபரப்புத்துறைக்கு வெளியில் திரைத் துறையிலும் நாடாகத் துறையிலும் அதீத ஈடுபாடு கொண்டவராகவும் மிளிர்கின்றார்.
ஏன் இப்போது இந்த பதிவு என்று சில கேள்விகள் எழக் கூடும் இன்று பொங்கல் வயல்களில் நெல் வளர்த்த சூரியனுக்கும் நெல்லை அரிசியாக்கி எமது பசிக்கு உணவளிக்கும் உழவனுக்கும் நாங்கள் நன்றி சொல்லும் நாள் இது.
அது போல இது எனக்கு வாழ்வளித்த ஒருவருக்கு நான் நன்றி சொல்லும் நாளாகவும் அமையட்டும் என்பதால் தான் இந்த பதிவு.
நடா அண்ணா உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் என்றென்றும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !
Comments
இந்த சந்தர்ப்பத்தில் திருமதி புவனலோஜினி நடராஜசிவம் அவர்களையும் மறந்து விட முடியாது. சூரியனோடு நேரடியான தொடர்புகளை கொண்டிராத போதிலும் சூரியனின் வளர்சியிலும் எனது வளர்ச்சியிலும் அவரது பங்கும் மிக முக்கியமானது.
வானொலி ஆரம்பித்து சிறிது காலத்திலேயே புதியவர்களை நேர்முகம் செய்வதற்காக என்னையும் பக்கத்தில் வைத்திருந்தார் என்றால், உங்களுக்கே புரிந்திருக்கும் அவர் எனக்கு சூரியனில் வழங்கிய சுதந்திரமும், ஆக்கமும் ஊக்கமும்.
ரமணன் எழுதியதுபோல் பலரை ஏதுமற்ற நிலையில் இருந்து சில உயரங்கள் வரை உயரத் தூக்கி விட்டவர் திருவாளர் நடராஜசிவம் அவர்கள் என்பதில் எனக்கும் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை.
இன்று பலர் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சில அறிவிப்பாளர்களை நோக்கி நீங்கள் எத்தனை இளம் அறிவிப்பாளர்களை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்ற ஒரு கேள்வியை வைத்தால் பதில் பூச்சியம் என்றுதான் கிடைக்கும். ஆனால் இன்றைய இலங்கை வர்த்தக வானொலி வரலாற்றில் மிளிரும் பல அறிவிப்பாளர்களின் பின்புலத்தில் நடா அண்ணாவின் பங்கு கட்டாயமாக இருக்கும்
நன்றி
நடராஜா குருபரன்
நீங்கள் மௌனம் கலைப்பதன் ஊடாக உங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மௌன இடைவெளி தகர்க்கப்படும் என்று நம்புகிறேன்.அவ்வாறு நிகழ்ந்தால் சந்தோசப்படும் முதல் மனிதனாக நான் இருப்பேன்.உங்கள் உடல நலம் மிக முக்கியமானது. இன்று தான் உங்களுக்கு நிகழ்ந்தேறியிருக்கும் சத்திரசிகிச்சை குறித்து அறிந்து கொண்டேன். ஆனாலும் இந்த பதிவிற்கு உங்கள் கருத்தினை பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான உங்கள் அவா பழைய குரு அண்ணாவை ஞாபகப்படுத்தியது. தொடரட்டும் உங்கள் பணி
உண்மை தான் அவரின் பயிற்சியின் வழி தோன்றியவர்கள் நாங்கள் எல்லோரும் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் தான்.
நடா அண்ணா
சூரியன் எப்ம்
35 ஆவது மாடி
உலக வர்த்தக மையம்
கொழும்பு
இலங்கை
அன்பின் நடா அண்ணருக்கு
முதன்முறையாக நான் உங்களை சந்தித்த அனுபவம் என்றுமே மறக்கமுடியாது. ஒரு ஒலிபரப்பாளனாக மாற்றிய பெருமை உங்களுக்கே சேரும். ஏன்றும் நன்றியுடன் கடமைப்பட்டிருக்கின்றேன் உங்களுக்கும் றமணனுக்கும். எந்த அனுபவம் இல்லாமல் வானனெளி ஒலிபரப்பு துறையில் நுழைந்த எனக்கு காலை மற்றும் மாலை செய்தி அனைத்தையம் வாசிக்கத்தந்த உங்களுக்கு மனம் ஆர்ந்த நன்றிகள். என்றும் அருந்ததி அக்கா குமுதினி அக்கா றமணன்; நடா அண்ணா என்மனதில் எப்போதும் இருப்பீர்கள்.
நடா அண்ணா நான் எப்போதும் நன்றி கடன் உள்ள மனிதனாக எப்போதும் இருப்பேன்.
எழுதுவதொன்றால் நிறைய எழுதலாம் பின்பு தொடர்ந்து எழுதுகின்றேன்.
அன்புடன்
முன்னால் டீ ஜேஃ
தீபசுதன்.
முதலில் நன்றிகள். நன்றிகள் சொல்ல முன்னர், இதை இப்படி எழுதிய நல்ல மனதுக்கு என் வாழ்த்துக்கள்.
பழைய நினைவுகளை மீட்டியதற்கே என் நன்றிகள். நடராஜசிவம் என்ற அந்த ஒலிபரப்பாளனை, என் இலங்கை வானொலியின் மூத்த சகோதரனை, எங்கள் அன்பை அவ்வப்போது ஊடறுத்து ஓடிய கோபங்களை, ரசித்த காற்றின் படைப்புக்களை இப்படி ஆயிரமாயிரமாய் நினைவுகள்.
எனக்கும் இப்படிப் பலவற்றை எழுத ஆசைதான், ஆனாலும் இந்தச் சனியன் பிடித்த சோம்பலையும், எழுத எழுத இது சரியாய் இல்லையோ என்ற திருப்தியீனத்தையும் எப்படி இல்லாமல் ஆக்குவது என்றுதான் தெரியவில்லை.
என்றுமன்புடன்,
இளையதம்பி தயானந்தா