மீண்டும் வாழ்வோம்….

அடிக்கடி வலைப்பூவின் பக்கம் என்னை எட்டிப்பார்க்க விடாமல் செய்யும் வேலைப் பழுவின் பெயர் தான் “மீண்டும் வாழ்வோம்”.

மீண்டும் வாழ்வோம் எனக்கு சுகமான ஒரு சுமை.கடந்த இரண்டு வருடங்களாக நான் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான ஊடக செயல்பாடு தான் இந்த மீண்டும் வாழ்வோம்.

கண்ணீரும் வேதனைகளும் சொந்த மண்ணியின் துயர நினைவுகளும் சுமந்து இடம்பெயர்ந்த எங்கள் உறவுகளின் துயர் துடைக்கும் ஒரு சிறு முயற்ச்சிதான் இந்த மீண்டும் வாழ்வோம்.

இந்த திட்டம் பற்றி நிறையவே பதிவுகளில் எழுத வேண்டும் என்று எத்தனையோ தடவைகள் முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது.

இம்முறை இதனை எப்படியேனும் ஒரு பதிவேனும் உறுதியுடன் தான் இதனை தட்டச்சுகின்றேன்.

அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இன்ரநியுஸ் நெட் வேர்க் எனப்டும் அரச சார்பற்ற அமைப்பினால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வாராந்த பத்திரிகை மற்றும் தினசரி வானொலி நிகழச்சிகளென இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக தளங்களில் ஒன்றாக பயணிக்கும் வாய்ப்பினை இந்த திட்டம் வழங்கியுள்ளது.

ஓலிபரப்பு ஊடகவியலாளனாய் என்னை வளப்படுத்தவும் இதழியல் துறையின் அறிவினை பெறவும் இது துணை செய்கின்றது.

மறுபுறம் எல்லோராலும் கைவிடப்பட்டு புழுதிக் காட்டுக்குள் தவித்திருக்கும் உறவுகளுக்கு எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க இந்த திட்டம் வழியேற்படுத்தி தந்துள்ளமை மன நிறைவிற்குரியது.

இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான தேவைகளை அடையாளம் காண்பதும் அவற்றை உரிய தரப்பிற்கு தெரியப்படுத்தி தீர்வு காண்பதும் இந்த திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று.

அடிப்படைத் தேவைகளுக்கான சவால்களுடன் தகவல்களுக்கான வறட்சியினையும் அனுபவிக்கும் அந்த மக்களுக்காகவே ஒரு பத்திரிகை தயாராவதும் அனத அவர்களுக்கு இலவசமாக கிடைக்கச் செய்வதும் அந்த மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மன நிறைவை ஏற்படுத்துகின்றது.
தமக்காக பேசவும் தமது பிரச்சினைகளை எழுதவும் ஒரு சிலர் இருப்பது கண்டு மகிழ்வதாக எங்களுக்கு முகாம்களில் இருந்து வரும் முகம் தெரியாத அந்த மனிதர்களின் கடிதங்கள் ஏற்படுத்தும் சிலிர்புகளை சில வரிகளில் வடிக்க முடியாது.

இன்றைய காலத்தின் தேவை எங்கள் உறவுகளின் நம்பிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டியது மட்டும் தான்.

அதனை தான் எங்களால் முடிந்த முறையில் அந்த மக்களுக்காக செய்து கொண்டிருக்கின்றோம்.

இடம்பெயர்ந்த மக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட அனைத்து தரப்பின் தொடர்புகளையும் இந்த திட்டம் ஏற்படுத்தி தந்துள்ளது.

முகாம்களுக்கு நேரில் சென்று அந்த மக்களை சந்திக்கும் வாய்ப்பு இதவரை வழங்கப்படாத போதிலும் அந்த மக்களின் வாழ்வியல் துயரங்களை எங்களால் முடிந்த அளவிற்கு வெளிப்படுத்தி வருகின்றோம்.

இது ஒரு புதிய ஊடக அனுபவம் மனிதாபிமான பணிகள் தொடர்பான செய்தியிடல் என்பது இலங்கை போன்ற ஒரு நாட்டில் சாவால் மிக்க ஊடக செயல்பாடாக மாறியுள்ளது.

இந்த நெருக்கடி எமக்கான எல்லைகளை நாங்களே அமைத்துக் கொள்ளும் அளவிற்கு எங்களை தள்ளி விட்டுள்ளது.

தினமும் நாங்கள் திரட்டும் மனிதாபிமான தகவல்கள் எத்தனையோ புதிய புதிய கதைகளை எங்களுக்கு சொல்லி கொண்டு இருக்கின்றன.

ஊடகத்துறையின் புதிய பல வடிவங்களை கற்றுக் கொள்ளும் களமாகவும் இது மாறியுள்ளது.

மீண்டும் வாழ்வோம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடான எனது அனுபவங்களை தொடர்ந்து பதிவுகளாக்கும் ஒரு எண்ணமே இந்த பதிவு.

மீண்டும் வாழ்வோம்…நம்பிக்கைள் மட்டும் சுமந்து நகரும் எங்கள் வாழ்கை பயணத்தின் சில பக்கங்களை இந்த அனுபவங்கள் மூலம் நீங்களும் தரிசிக்கலாம்…அது கூட எனது நம்பிக்கை தான்.

Comments

Anonymous said…
வாழ்துக்கள் அண்ணா…..
உங்கள் பதிவுகளுக்கும் பெரு முயற்ச்சிக்கும்……
Unknown said…
வணக்கம் ரமணன்.
உண்மையை சொல்லப்போனால் ஒரு வலைப்பதிவை மேற்கொள்பவர் தங்களைப்போல மாதக்கணக்கில் வலையேற்றம் செய்யாமல் இருப்பது ஆரோக்கியமான விடயம் இல்லை. எவ்வளவு வேலைப்பளு என்றாலும் இதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி கிரமமாக இதை நடைமுறைப்படுத்தலாமே.
நான் இலங்கை பதிவர்களின் ஆக்கங்களை வாசிப்பது மிகக்குறைவு, வெளிப்படையாகச்சொல்லப்போனால், தற்போதைய இலங்கைப்பதிவர்கள் பலர் எழுதுபவை தேவையற்றதும், வேடிக்கையானதாகவுமே உள்ளது.
இந்த நேரத்தில்தான் ரமணன், ஜனா, அசோக்பரன் ஆகியோரின் வலைப்பதிவுகள் என்னை வாசிக்கத்தூண்டின. உங்கள் மூவரின் பதிவுகளும் கருத்து செறிவு உடையதாகவும், தரமானதாகவும் இருக்கின்றதுடன், ஏதோ ஒருவகையில் பிரயோசனமானதாகவும் இருக்கின்றன.
இந்த ரீதியில் தாங்கள் பல மாதங்களாக ஏமாற்றி விட்டீர்கள் ரமணன்.
இனி தொடர்ந்தும் எழுதுங்கள்.
ஆவலுடன் உங்கள் நண்பி
நிவேதா.

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...