பனியில் தமிழ் எழுதி வெயிலில் வேகவிடும் ஒரு குரல்... !
ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கிருக்கும் ஆனந்தம் அல்லது ஆணவம் என்பது நான் பேசும் நான் கேட்கும் நான் வாசிக்கும் மொழி சார்ந்தே தான் இருக்கின்றது. தமிழனின் அடையளம் "தமிழ்” என்பதாக மட்டுமே நான் பார்க்கின்றேன். எமக்கான பண்பாடு எமக்கான விழுமியங்கள் என பல கூறுகள் தமிழ் அடையாளம் கொண்டிருந்தாலும் மொழி தவிர்த்து அவற்றை சுமந்து செல்ல முடியாது என்பது தான் உண்மை. தமிழில் பேச முடியாத தமிழில் புரிதல் இல்லாத ஒரு தலைமுறையோடு வாழும் வாழ்வு தான் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு வாய்திருக்கின்றது. இதனை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை எங்கிருந்து எப்படி யார் தொடங்குவது என்பது எங்கள் எல்லோர் முன்னாலும் இருக்கின்ற கேள்வி. எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் தமிழர்கள் தாம் பேசும் மொழியால் மட்டுமே தங்களுக்குள்ளான பிணைப்புகளை கொண்டிருக்க முடியும் என்று உறுதியாக நம்புகின்றேன். தமிழ் மொழியை பேசாத தமிழ் மொழி பற்றிய புரிதலும் அறிதலும் இல்லாவர்களை தமிழர்களாக கொள்வதில் அவர்களோடு தமிழினின் எதிர்காலம் குறித்து உரையாடுவதிலும் என்மனம் தடை கொள்கின்றது. தமிழைப் பேசத் தெரியாதவர்கள் தமிழில் வ...