கூட்டு ஒப்பந்தம் - மலை முகடுகளில் மரித்துப் போகும் மனிதம்

நேற்று ( 06-06-2011 ) பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தனமை குறித்த செய்திகள் ஊடகங்களின் பிரதான இடத்தை பிடித்திருந்தன.

இனிவரும் இரண்டு வருடத்திற்கு அப்பாவித் தொழிலாளர்கள் வாய் திறக்க முடியாத படிக்கு ஒப்பந்த பத்திரங்களை தொழிற்சங்க எஜமானவர்கள் அவர்களின் வாய்களில் திணித்து விட்டனர்.


இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தொழிலாளர்களை பிரதிநிதித்தவப்படுத்தும் குறிப்பிட்ட சில தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர்.

மூடிய அறைகளுக்குள் நடக்கும் இந்த ஒப்பந்த பேரத்தில் பேசப்படும் விடயங்கள் முழுமையாக அறியக்கிடைக்காது. இறுதியில் இத்தனை ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற ஒற்றை வரிச் செய்தி மட்டுமே வெளியாகும்.

இம்முறையும் ஆகக்குறைந்தது 500 ரூபா அடிப்படைச் சமபளம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வழமைபோல மலை உச்சிகளில் மலைச் சரிவுகளில் விழுந்து இறந்து போய்விட்டன.

அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவில் இருந்து 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 380 ரூபா என்ற இலக்கை அடைந்துள்ளது அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் மாதாந்த அடிப்படைச் சம்பளம் 1900 ரூபாவால் அதிகரிக்கப்பட்ள்ளது.

அடிப்படைச் சம்பளம் 380 ரூபா மற்றும் வேலை வழங்கும் நாட்களில் 75 வீதமான நாட்கள் பணிக்கு சமூகமளித்திருந்தால் 105 ரூபாவும் 30 ரூபா நிரந்தர கொடுப்பனவாகவும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் 515 ரூபா நாட்சம்பளத்தை தொழிலாளி ஒருவர் பெற முடியம் எனக் கூறப்படுகின்றது.

ஆனால் 105 ரூபா மேலதிக கொடுப்பனவை பெறுவதற்கு அவர்கள் 75 வீதமான நாட்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்ற விதிமுறை அமுலில் உள்ளமையால் அந்த கொடுப்பனவு எல்லோருக்கும் கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 50 ரூபாவை தொட்டு நிற்கும் இன்றைய பொருளாதார நெருக்குவாரத்தில் மூன்று வேளை உணவு. குழந்தைகளின் கல்வி சுகாதாரம் .. இன்ன பிற தேவைகளை ஒரு தொழிலாளியின் குடும்பம் எவ்வாறு சமாளிக்கும்.

தேயிலையும் இறப்பரும் உலக சந்தையில் தொடர்சியாக விலை அதிகரிப்பை பெற்று வரும் நிலையில் அதன் உற்பத்திக்காக உயிர் உருக்கிகளாகி நிற்கும் தொழிலாளர்களின் அடிப்படை நலன்கள் உதாசீனம் செய்யப்படுவது ஏன் ? இதற்கான பதிலை தேடும் ஒரு பதிவுப் பயணமே இது

மலையகத்தின் அரசியல் என்பது தொழிற்சங்கங்களின் ஊடாகவே கட்டியெழுப்பட்டு வந்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் தொழிற்சங்க பின்னணிகளில் தோற்றம் பெற்றன. ஆனால் அவை முற்று முழுதாகவே அரசியல் மயப்பட்டு தமது கடந்த காலத்தை மறந்து விட்டுள்ளன.

இப்போது தொழிலாளர்கள் என்பவர் தமக்காக வாக்களிப்பதற்கான இயந்திரங்களாவே நோக்கப்படுகின்றனர். தேர்தல் காலங்களில் இயந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டு இயங்கு நிலைக் கொண்டு வரப்படும் வாக்குகள் பெறப்பட்ட பின்னர் அவை கவனிப்பாரற்ற நிலையில் கைவிடப்படும். இந்த நிலமையே அங்கு இன்னும் தொடர்கின்றது.

அரசியல் கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒருமித்து மேற்கொள்ளு ஒரு சமூக சுரண்டல் அங்கு நடந்தேறி வருகின்றது.

சில வேளைகளில் ஆங்காங்கே எழும் புரட்சி தீயினை கசிப்பு ஊற்றி அவர்கள் அணைத்து விடுவார்கள்

கல்வியறிவு மிக்க ஒரு பலம் பொருந்திய சமுதாயம் அங்கு தோற்றம் பெறுவதை தடுப்பதற்கான அனைத்து எத்தனிப்புகளும் மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

இந்த அழுத்தங்களின் ஊடும் அங்கு துளிர் கொள்ளும் சில ஆளுமைகள் அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களினதும் மாய வலைகளுக்குள் சிக்கவைக்கப்பட்டு கவனம் திருப்பட்டு பின்னர் தொலைக்கப்பட்டு விடுகின்றனர்.

இதற்கு சிறந்த உதாரணமாக மலையகத்திற்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களை குறிப்பிடலாம். க.பொத .சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் சுமார் 3000 பேர் உரிய பயிற்சிகள் இன்றி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களால் எவ்வாறு தகுதியான மாணவர்களை எதிர்கால சந்ததியை உருவாக் முடியும் ? இதன் பின்னணி மிகவும் வெளிப்படையானதும் இலகவாக புரிந்துகொள்ளக் கூடியதும் கூட.

1992ம் ஆண்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த சம்பள நிர்ணய முறை நீக்கப்பட்டு தொழிலாளர்களை பிரதிநிதித்தவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் சில தொழிற் சங்கங்கள் முதலாளிமாருடன் பேசி சம்பளம் தொடர்பான ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது.

இதன் உாக தொழிலாளர்களுன் அதிக நன்மைகள் கிடைக்கும் என கையொப்பமிடம் தகுதியை பெற்ற தொழிற்சங்கங்கள் பரப்பரைத்தன. அப்பாவி மக்களை முழுமையாக நம்ப வைத்தன. கூட்டு ஒப்பந்தத்தை தமக்கான விடியலாக நம்பிய மக்களின் இரவுகள் இன்று வரை விடியவே இல்லை.

இது முற்று முழுதாகவே முதலாளிமார் நலன் சாரந்த ஒரு திட்டமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கையொப்பமிடும் அதிகாரம் பெற்ற தொழிற் சங்கங்கள் தங்கள் அரசியல் செல்வாக்கினால் விமர்சனங்களையும் எதிப்புகளையும் தாண்டி இதனை நடைமுறைப்படுத்த தலைப்படன.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியின் வேலாயுதம் தலைமையிலான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராமநாதன் தலைமையிலான இடதுசாரிகளின் தொழிற் சங்க கூட்டமைப்பான தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய மூன்று தொழிற் சங்கங்கள் மட்டுமே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியும்.

சுமார் நான்கரை இலட்சம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்களை தீர்மானிக்கும் ஆழுமைகள் இவர்கள் தான் என்ற நிலை இதன் உாக உருவாக்கப்பட்டது.

இவர்கள் மூன்று பேரை மட்டுமே சமாளிக்க வேண்டியமை
முதலாளிமாருக்கும் வாய்ப்பானதாக அமைந்துள்ளதால் அதனை அவர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டனர்.

இதில் அரசாங்கமும் நேரடியாக தலையிட முடியாதபடிக்கு கடந்த காலங்களில் அரசியல் பிணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன.

ஆனால் இப்போது அரசியல் நிலைமை மாறியுள்ளது மலையக அரசியல் கட்சிகளின் தயவின்றி ஆட்சியினை தக்க வைத்துள்ள கொள்ளும் பலம் சனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு உள்ளது. அவர் மனது வைத்தால் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும் என புத்திஜீவிகள் கருதுகின்றனர்

கூட்டு ஒப்பந்த நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட முன்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் சம்பள சபைகளின் ஊடாகவே கையாளப்பட்டு வந்தது.அது போன்ற நடைமுறை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டு என்பதே அவர்களின் எதிர்பார்பாகும்

சம்பள நிர்ணய சபையானது வாழ்கைச் செலவுப் புள்ளிளை கருத்தில் கொண்டு சமபள நிர்ணயத்தை மேற்கொள்ளும் போது தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் சந்தரப்பங்கள் குறைவடையும் என நம்பப்படுகின்றது.

அதேபோல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இந்த விடயம் கொண்டு வரப்படும் போது அரசாங்கம் வரி விடுமுறைகள் மற்றும் மானியங்களை வழங்குவதன் மூலம் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்

தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் நேரடியாக தலையிடுவது மட்டுமே நடைமுறைச் சாத்தியமான தீர்வினை பெற்று தரும் என்பது அவர்களின் வாதம்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கே உரிய தீர்வினை முன்வைக்க முடியாமல் தடுமாறும் அரசாங்கம் எவ்வாறு இந்த பிரச்சினையை தீர்க்கும் என்ற கேள்வியும் தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

பி.கு
" எதியோப்பியாவில் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சி வெடித்த போது அந்த அரசாங்கம் புரட்சி நடைபெற்ற பகுதிகளில் இருந்து விவசாயிகளை பலவந்தமாக வெளியேற்றியது. பல இலடச்சக்கணக்கான விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு வெளியேறினர்....சில வருடங்களின் புரட்சியாளர்கள் உணவின்றி மாண்டனர் போராட்டம் தானாகவே முடிவிற்கு வந்தது. ஆனால் அன்று தொலைத்த விவசாயம் இன்றுவரை அங்கு மீளவே இல்லை...இப்போதும் எதியோப்பியா உலகின் பட்டினி தேசமாகவே இருக்கின்றது "

Comments

Unknown said…
அருமையான அலசல்..கூட்டு ஒப்பந்தத்தால் பாதிப்பு தான் அதிகம் போலும்..
பின் குறிப்பில் அர்த்தமுள்ள கருத்து கூறிய முதல் நபர் என்று நினைக்கிறேன்..வாழ்த்துக்கள் பாஸ்
ARV Loshan said…
தேவையான அலசல் ரமணன்.
இந்த ஊதிய 'உயர்வு' 515 ரூபா இழுபறி பத்திரிகைகளில் வாசித்தபோது மனதை மிகவும் பாதித்தது.
பாவம்.. இவர்களுக்காகப் பேசத் தான் யாரும் இல்லை.

//அரசாங்க ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கே உரிய தீர்வினை முன்வைக்க முடியாமல் தடுமாறும் அரசாங்கம் எவ்வாறு இந்த பிரச்சினையை தீர்க்கும் என்ற கேள்வியும் தவிர்க்க முடியாமல் எழுகின்றது.//
:(
Vathees Varunan said…
ஆக்கபூர்வமான ஒரு பதிவு

தங்களுடைய சுயநலன்களுக்காக அப்பாவி மலையக மக்களை பகடைக்காய்களாவை வைத்து அரசியல்வாதிகள் செய்யும் கூத்துக்களை சகிக்கமுடியவில்லை பாவம் அந்த மக்கள் இலங்கையினுடைய பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பாக இருப்பவர்கள் அவர்கள் அவர்களுடைய பிரச்சனைகள் நிற்சயமாக தீர்க்கப்படவேண்டிய ஒன்று
Vathees Varunan said…
இலங்கையினுடைய பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பாக இருப்பவர்கள் அவர்கள் அவர்களுடைய பிரச்சனைகள் நிற்சயமாக தீர்க்கப்படவேண்டிய ஒன்று

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring