பன்னிரண்டாவது வருடத்தில் சூரியன்....

நேற்று போல் தான் இருக்கின்றது ஆனாலும் 11 வருடங்கள் உருண்டோடி முடிந்து விட்டது.சூரியன் தனது ஒலிக்கரங்கள் கொண்டு தமிழ் பேசும் நெஞ்சங்களை அரவணைக்க ஆரம்பித்து 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது.



எத்தனை சாதனைகள் எத்தனை வேதனைகள் அத்தனையும் தாண்டி இன்றும் மக்கள் மனங்களில் தனித்துவமான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கின்றான் சூரியன்.

உலக வர்த்தக மையத்தின் 35வது தளத்தில் இருந்து இலங்கை முழுவதற்கும் தமிழ் பரப்பும் வானொலியின் 11 வருடம் என்பது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பெருமை கொள்ளத்தக்கது.இலங்கையின் முதன் முதலாக 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பை ஆரம்பித்த தனியார் ஒலிப்பரப்பு ஊடகம் சூரியன்.

வானொலி மீதான மக்களின் அவதானிப்பு குறைவாக இருந்த காலத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது சூரியன் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.வானொலிக்கென வகுக்கப்பட்ட சம்பிரதாயங்களை உடைத்து ஒரு மாற்றத்தை தமிழ் ஊடகப் பரப்பில் ஏற்படுத்திக் காட்டியது சூரியன்.





தமிழ் ஒலிபரப்பு துறையின் தாயகமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல வருடங்கள் பணியாற்றிய பழுத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் தலைமையில் புதிய இளைஞர்கள் குழு ஒன்று நடத்திக் காட்டிய மாற்றம் அது.

வானொலி என்பது மக்களுக்கான ஊடகம் அது மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது தான் சூரியனின் தாரக மந்திரம்.அதனால் தான் நேயர்களின் நெருக்கத்திற்கும் விருப்பத்திற்கும் உரிய வானொலியாக சூரியன் குறுகிய காலத்தில் மாறிப்போனது.

சூரியனின்அறிவிப்பாளர்களை காணவும் பேசவும் மக்கள் திரளும் வரலாற்று மாற்றங்கள் சம்பவிக்க காரணம் சூரியன் மக்களின் மொழியில் மக்களோடு பேசியது மட்டும் தான்.

சூரியன் அறிவிப்பாளர்கள் கையாண்ட பேச்சு வழக்கிலான வானொலி மொழி சம்பிராதயபூர்வ வானொலி ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதிலும் அந்த மக்களின் ஏகோபித்த ஆதரவு இந்த விமர்சனங்களை வலுவிழக்கச் செய்தது.

தமிழ் வானொலி வரலாற்றில் சூரியன் ஏற்படுத்திய மாற்றம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்.சூரியனின் தாக்கங்கள் இன்றி இன்று எந்த ஒரு தமிழ் வானொலியும் இயங்க முடியாத அளவிற்கு தமிழ் ஒலிபரப்புச் சூழலை மாற்றியமைத்தது சூரியன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனம் கூட இந்த மாற்றத்தை உள்வாங்கி தன்னை மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியமை தான சூரியனின் வரலாற்று சாதனை.

சூரியன் ஆரம்பிக்கப்படும் வரையில் பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரிய ஒலிபரப்பு முறைகளை கைவிட்டு நவீன ஒலிபரப்பு சூழலுக்கு தமிழ் வானொலி உலகம் தள்ளப்பட்டது.

நடராஜசிவம் என்ற அனுபவ ஒலிபரப்பாளர் ஆரம்பித்த வெற்றிப் பயணத்தை திறமையான இளம் ஒலிபரப்பாளர்கள் இன்னும் தொடர்கின்றார்கள்.

நடா அண்ணா,அபர்ணா,லோசன் என திறமையும் அனுபவமும் வாய்ந்த முகாமையாளர்களால் வழிநடத்தப்பட்ட சூரியன் தற்போது நவநீதன் எனும் ஒரு திறமையான இளைஞரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கால மாற்றங்கள் கடந்தும் சூரியன் இன்றும் மக்கள் மனங்களில் அசைக்க முடியாத அலைவரிசையாக இருப்பதற்கு சூரியனின் வளர்ச்சிக்கு அன்றும் இன்றும் என்றும் காரணமாக இருப்பவர்கள் சூரிய சொந்தங்களான நேயர்கள் தான்.

இப்போது சூரியனில் நிகழ்ச்சிகளை வழங்குவதில்லை என்ற போதிலும் அதன் எழுச்சியிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட ஒருவன் என்ற வகையில் சூரியனின் எதிர்கால மாற்றத்திற்கான சில கருத்துக்களை இந்த பதிவின் மூலமாக முன்வைக்க விரும்புகின்றேன்.


சூரியனின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட சூரியனின் அபிமான நேயர்களில் ஒருனாக...சூரியனின் வெற்றி பயணித்தில் இணைந்திருக்கும் ஒரு அறிவிப்பாளாக...புதிய மாற்றங்களை விரும்பும் ஒரு விமர்சகனாக ... இந்த பதிவை எழுதுகின்றேன்.

சூரியனை விமர்சிப்பதோ அல்லது அறிவிப்பாளார்களின் ஆழுமைகளை மழுங்கடிப்பதோ இந்த பதவின் நோக்கம் அல்ல..

இவை மாற்றப்பட்டால் சூரியன் மேலும் சிறப்பாகும் என்ற குறைந்த பட்ச விருப்ப வெளிப்பாடே இது.


நிறைகளை கூறுவதன் மூலமாக எதிர் காலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும் விடும் என்ற நடைமுறைச் சாத்தியமற்ற விதண்டாவாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.


அதேபோல் இந்த பதிவின் ஊடாக மாற்றம் வந்து விடும் என்றும் நான் கருதவோ எதிர்பாக்கவோ இல்லை.


ஆனால் இவை இன்றல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நடந்தேறினால் சந்தோசிப்பேன்.சூரியனில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்பும் 10 விடயங்கள் இனி ..


மாற்றம் 01 – தனித்துமான நிகழ்ச்சி



இப்போது வானொலிகள் மீதான ஈடுபாடு மக்கள் மத்தியில் குறைவடைந்து விட்டதாக அண்மைய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டாலும் புதுமைகளின் தேடல்கள் இன்றி வானொலி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் மக்களின் இரசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமல் வியாபார நோக்கங்கள் முதன்மைப் படுத்தப்படுவதால் மக்களுக்கு ஈடுபாடு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது மிக முக்கியமான விடயம் வானொலி என்பது மக்களுக்கானது அந்த மக்களுக்கு நெருக்கமாக நிகழ்ச்சிகளும் பாடல்களும் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமானது.தமிழ் பேசும் மக்களின் இரசினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் பெரும்பான்மை மக்களின் இரசனை நிலைகளில் இருந்து மாறுபட்டவை.

பெரும்பான்மை மக்களால் இரசனைக்குரியவையாக கருதப்படும் விடயங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்புடையவை அல்ல என்பது குறித்து முகாமைத்துவத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியது முக்கியமானது.
காலம் காலமாக முகாமைத்துவம் சொல்கின்ற நிகழ்ச்சி மாற்றங்களை தலையால் ஏற்று செய்யும் நிலை மாற்றப்பட வேண்டும்.


தமிழ் பேசும் மக்களுக்கான தனித்துமான சில நிகழ்ச்சிகளை சூரியன் படைக்க வேண்டும்.


மாற்றம் 02 – தேடல்


இதற்கு முன்னரும் பல தடவைகள் தேடல் குறித்து பேசியிருக்கின்றேன் ஆனாலும் காலத்தின் தேவை கருதி மீண்டும் தேடல் பற்றியதான எனது பார்வை.

வானொலி என்பது ஒரு பாடல் ஒலிபரப்பும் இயந்திரம் அல்ல அது மக்களுக்கு தேவையான பல்வேறு தகவல்களை வழங்கும் கலைக்களஞ்சியமாக இருக்க வேண்டும்.

அவ்வாறு அதனை மாற்றுவது அறிவிப்பாளர்களின் கைகளில் தான் உள்ளது.
தற்போதுள்ள அறிவிப்பாளர்களில் பெரும்பாலனவர்கள் தேடலற்றவர்கள் என்பதை அவர்களின் நிகழ்ச்சிகளை கேட்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.


வெறுமனே பாடல்களை ஒலிபரப்புவதும் மற்றைய அறிப்பாளருடன் ஒரு நகைச்சுவையை பகிர்ந்து இருவருமாக சிரிப்பதும் தான் வானொலி ஒலிபரப்பு என்ற நிலை தொடர்வது வேதனைக்குரியது.கிடைக்கும் பேச்சு இடைவெளிகளில் பயன்தரக் கூடிய எத்தனையோ விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும் அதில் ஒன்றாக இரு நகைச்சுவை துணுக்கும் இருந்து விட்டுப் போகட்டும்.அதனை விடுத்து நிகழச்சி முழுவதற்கும் நகைச்சுவை தோரணம் கட்டுவதும் சிரிப்பதும் மக்களை வானொலியில் இருந்து விலக்கி விடும்.


மாற்றம் 03 – வாசிப்பு


ஒரு வானொலி அறிவிப்பாளன் குறைந்த பட்டசம் அன்றை தினசரி பத்திரிகைகளையாவது வாசித்திருக்க வேண்டும்.வாசிப்பின் ஊடகாத் தான் மொழி ஆழுமையை வளர்க்க முடியும்.ஆனால் எங்களுக்கு நேயர்களின் பெயர்களையும் ஊர்களையும் வாசிப்பது மட்டும் தானே வேலை எதற்கு வீணாக பத்திரிகையும் புத்தகங்களையும் வாசித்து நேரத்தை விரயமாக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம்.

உங்கள் நிகழ்ச்சிகளை தயவு செய்து ஒலிப்பதிவு செய்து கேட்டுப்பாருங்கள் நீங்களே உங்கள் தவறை உணர முடியும்.


சொற்களின் வறுமை எங்கள் பேச்சில் தெறிப்பதை உணர முடியும்.ஒரே சொல்லை எத்தனை முறை பயன்படுத்துகின்றீர்கள் ? ஒரே மாதிரியான வசனத்தை எத்தனை முறை பயன்படுத்துகின்றீர்கள் ? கேட்டுப் பாருங்கள் நான் சொல்வதன் ஆழம் புரியும்.


ஓரே மாதிரியான ஆரம்பம் ஒரேமாதிரியான தொடுப்புகள் ஒரே மாதிரியான முடிவுகள் இதனை எத்தனை முறை தான் திரும்ப திரும்ப கேட்க முடியும்.
அதனை மாற்றுவதற்கு உங்களால் முடியாது ஏனென்றால் நீங்கள் சொற்களுக்கான வறுமையில் இருக்கின்றீர்கள்.


தொடர் வாசிப்பு மட்டும் தான் இதனை நிவர்த்திக்க உதவும் ஒரே மருந்து.வாசியுங்கள்.. வாசிப்பு மனிதனை பூரணமாக்கும் என்றால் நிச்சயம் உங்களையும் பூரணப்படுத்தும்.



மாற்றம் 04 – அறிவிப்பா ? மிமிக்கிரியா ?


அபர்ணா மாதிரியும் லோசனம் மாதரியும் பேசுவதல்ல ஒலிபரப்பு உங்களை மாதிரி நீங்கள் பேசுவது தான் ஒலிபரப்பு.

இவர்கள் இருவர் மீதும் எனக்கு தனியான மரியாதை உண்டு.சூரியனை அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றவர்கள் இவர்கள்.
தமக்கான தனித்துவங்களால் தமக்குரிய அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.இவர்களை போல் பேசுவதற்கு முயல்வதும் அவர்களை பிரதி பண்ணுவதும் நிச்சமாக உங்களுக்கான சரியான பாதை அல்ல.
பல் குரல் ஆற்றல் என்பது ஒரு தனிக் கலை அதனை தயவு ஒலிபரப்பில் புகுத்தி உங்களையும் அவர்களையும் காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
உங்கள் சுயங்களை இழந்து மற்றவர்களின் முதுகில் போகும் பயணம் நடுக்கடலில் நாதியற்று வீசப்படும் ஆபத்து நிறைந்தது.

புதிய ஒலிப்பரப்பாளர்களை தெரிவு செய்யும் போது தமக்கான தனித்துவங்களை கொண்டுள்ள அறிவிப்பாளர்களை தெரிவு செய்வது எதிர்கால முன்னேற்றங்களுக்கு பேரூதவியாக அமையும்.
மாற்றம் 05 – நிலைய குறியிசைகள்



அளவுக்கு மிஞ்சினால் அமுதம் கூட விசமாகி விடும்.
பிரபலமான பாடல்களை மாற்றி பாடி நிலையக் குறியிசை மற்றும் நிகழ்ச்சி அடையாளங்களை உருவாக்கும் நிலையும் சலிப்பை தருகின்றது.ஆரம்பத்தில் வித்தியாசமான அனுபவத்தை தந்த இந்த இசை முயற்ச்சி இப்போது அளவு தாண்டி விசமாகி விட்டதாவே தெரிகின்றது.புதிய குறியிசைகளை புதிய இசையில் உருவாக்குவது வேறுபட்ட அனுபவத்தை தரும்.எனவே அது குறித்து சிந்திப்பது புதிய ஆண்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றம்

06 – விளையாட்டுச் செய்திகள்





ஏனைய விடயங்களைவ விட ஒப்பீட்டளவில் விளையாட்டு செய்திகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மிக அதிகம் என்றே எனக்க படுகின்றது.
விளையாட்டு செய்திகளை விரும்பும் நேயர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் ஆனால் வானொலி கேட்பவர்கள் அனைவருக்கும் விளையாட்டுச் செய்திகள் முக்கியமானதாக இருப்பதில்லை ?

காலையிலம் அதி முக்கியமான நேரத்திலும் இரவில் மிக முக்கியமான நேரத்திலும் விளையாட்டு செய்திகளுக்காக ஒதுக்கும் நேரம் மிக அதிமானது.விளையாட்டு செய்திகளை மிகவும் சுருக்கமாக்கி அதில் மீதமாகும் நேரத்தில் வேறு ஏதாவது அனைத்து தரப்பினருக்கும் பயன்தரக் கூடிய ஒரு பகுதியை இணைத்துக் கொண்டால் சுவாசரசியம் கூடும்.

வேறு வானொலிகளில் விளையாட்டு செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதால் நாங்களும் வழங்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.சூரியன் தான் மாற்றத்தின் முன்னோடி எனவே நீங்கள் மாற்றினால் ஏனையவர்கள் மாறுவார்கள்.
விளையாட்டு செய்தியை விரும்பும் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்காக அதிக நேரம் ஒதுக்குவதும் அதனை ஏறத்தாள ஒரு விளையாட்டு நிகழச்சி போலவே நடத்துவதும் தேவையா?காலையில் விளையாட்டு முடிவுகள் மற்றம் அட்டவணைகள் மட்டும் போதும் அதேபோல் இரவிலும் முழுமையான போட்டி விபரங்களை அறிவிப்பது மட்டும் போதுமானதாக இருக்கும்.
விளையாட்டு விமர்சனங்கள், விவாதங்கள்,உங்கள் அபிப்பிரயாங்கள் மற்றும் கிசு கிசுக்களை அட்டகாசத்தோடு மட்டுப்படுத்தலாமே ?

மாற்றம் 07 – நிகழ்ச்சி மாற்றங்கள்


சில நிகழ்ச்சிகள் இன்னும் பழைமை மாறமலே தொடர்கின்றன.அவற்றை மீளமைப்பதன் மூலம் புதிய நிகழ்ச்சி வடிவங்களை அறிமுகம் செய்ய வேண்டியது அவசியமானது.ஒரேமாதிரியான நிகழ்ச்சிகளை எத்தனை காலத்திற்கு கேட்க முடியும் ?இறுதியாக எந்த நிகழச்சி மாற்றப்பட்டது ? நிகழ்ச்சி மாற்றம் என்பது அதில் புதிய விடயங்களை இணைப்பாகாது.முழுமையாக அது மாற்றப்பட வேண்டும் அதனை வழங்கும் அறிவிப்பாளர்கள் உட்பட அப்போதுதான் ஒரு புதிய சுவை நேயர்களுக்கு கிடைக்கும்.

குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் புதிதான 3 நிகழ்ச்சிகளாவது அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.சூரியனின் ஆரம்ப காலத்தில் இந்த சடுதியான நிகழ்ச்சி மாற்றங்கள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டது.அதுபோன்ற சடுதியான மாற்றங்கள் உடனடியாக தேவை குறிப்பாக இசைச்சமர்,மதிய நேர இசை விருந்து, நேற்றைய காற்று ஆகிய நிகழ்ச்சிகளில் உடனடி மாற்றங்கள் செய்யப்படுவது முக்கியமானது.

மாற்றம் 08 – செய்திகள்




சூரியன் செய்திகள் மக்கள் மத்தியில் பரவலான கவனிப்பை பெற்றமைக்கு முக்கிய காரணம் அதனை வாசித்தளித்த அறிவிப்பாளர்களின் செய்தி வாசிப்பு திறன் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.ஆனால் இன்று அந்த கனம் சூரியன் செய்திகளில் இல்லை என்பது பரவலான அபிப்பிரயாயம்.

செய்தி வாசிப்பு என்பது ஒரு தனித்துவமான ஆழுமை எல்லோருக்கும் இலகுவில் வாய்துவிடாது.

அவ்வாறான ஆழுமை மிக்கவர்களை செய்தி வாசிப்பிற்காக தெரிவு செய்து அவர்களுக்கு முழுமையான பயிற்ச்சிகளை வழங்குவதன் மூலம் இந்த குறையை நிவர்த்தி செய்ய முடியும்.சூரியனில் தற்போதுள்ள ஒரு சில அறிவிப்பாளர்கள் தவிர செய்தி வாசிப்பிற்குரிய ஆழுமை பலரிடம் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது.

அதிலும் ஆழுமையற்ற சிலர் முக்கிய செய்திகளை வாசிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாதது.சூரியனின் செய்திகளுக்காக பொருத்தமான அறிவிப்பாளர்களை தெரிவு செய்யுங்கள் செய்தி வாசிப்பில் சிறப்பு தேர்ச்சி பெறும் வரை பயிற்சிகளை வழங்குங்கள் நிச்சயம் மாற்றம் வரும்.


மாற்றம் 09 - படைப்பாளிகள்



ஒரு ஊடகம் தான் சார்ந்த சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும்.

நேயர்களின் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தவும் இலைமறை காயாக இருக்கும் திறமைகளை அடையாளம் காணப்பதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டியது வானொலியின் கடமை.

அந்த வகையில் உள் நாட்டு திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான சில புதிய முயற்ச்சிகளை மீண்டும் சூரியனில் ஆரம்பிக்க வேண்டும்.

இப்போது நேயர்களின் பங்களிப்புக்கு வழங்கப்பட்டுள்ள இடம் மேலும் அதிகரிக்கப்பட்டு அவர்களின் வேறு பட்ட திறமைகளை வெளிப்படுத்தக் கூடியதான நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாற்றம் ?????????
சூரியன் அறிவிப்பாளர்களே ...

இவை மாற்றங்களுக்கான சில ஆலோசனைகள் மட்டும் தான்.
சுயவிமர்சனம் செய்து கொள்ள தவறும் எந்த ஒரு மனிதனும் முன்னேற முடியாது என்பது எனது மாற்ற முடியாத நம்பிக்கை.

அந்த வகையில் இங்கே நான் தெரிவித்த விடயங்களை விமர்சனமாக நோக்காமல் சூரியனின் வளர்ச்சிக்கான சில யோசனைகளாக பாருங்கள்.

சூரியனில் உங்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சக பயணியின் குறிப்புகளாய் இவை இருக்கட்டும்.

இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இவற்றில் ஏதாவது ஒன்றை பற்றி நீங்கள் சிந்திக்கும் போது எனது எண்ணங்கள் உசாத் துணாயகும் என்ற அவாவுடன் சூரியனின் எதிர்காலம் சிறக்க எனது நல் வாழ்த்துக்கள்.






Comments

சூரியன் குழுவினருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள், இன்று போல் என்றும் வாழ்க
சூரியன் முதலில் மற்ற வானொலிகளை நக்கலடிப்பதை விடவேண்டும், அத்துடன் மிகவும் கீழ்த்தரமாக சூரியன் கேட்கும் இடங்களில் நாங்கள் கேட்பது சூரியன் என அறிவிப்பு போடவைத்தது சூரியனின் தரத்தை குறைத்துவிட்டது. சூரியனில் ஆட்சி மாறியபின்னர் பல விடயங்களும் மாறிவிட்டன.

ஆனாலும் கொட்டை எழுத்தில் போடவேண்டிய ஒரு விடயம் இலங்கை வானொலிகள் வரலாற்றில் பல புதுமைகளைச் செய்தது சூரியன் தான். 98ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அதன் ஆரம்ப பரீட்சார்த்த ஒளிபரப்பிலிருந்து சில காலம் வரை சூரியன் கேட்ட்வன் என்ற வகையில் நான் சூரியனை விமர்சிக்க தகுதி உடையவன் என நினைக்கின்றேன்.
சூரியன் குழுமத்துக்கு என் வாழ்த்துகள்..தொடரட்டும் உங்கள் சேவை
This comment has been removed by the author.
Ramanan said…
நன்றி பிரபா
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்,புலம் பெயர் தேசத்திலும் ஒலிபரப்பு தாகம் கொண்ட உங்களை போன்றவர்களின் இருப்பு தமிழ் ஒலிபரப்புச் சூழல் குறித்த சில நம்பிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றது.
Ramanan said…
உண்மை தான் வந்தியத்தேவன்.
ஆரம்பம் முதலே எனக்கும் இதில் உடன்பாடு இருந்ததில்லை ஆனால் பெரிய இடத்து விவகாரத்தில் எங்கள் சொற்கள் பலமிழந்து போய்விடும்.அவர்கள் சொல்வதை செய்வதை தவிர வேறு எதனையும் செய்ய முடியாத நிலைதான் இன்னும் நீடிக்கின்றது.
ஆனாலும் வானொலிகள் மீதான வசை பாடல்களை நிச்சயமாக தவிர்க்கலாம் தடுக்கலாம்.பார்போம் புதிய ஆண்டில் மாற்றம் வருகின்றதா என்று
நீங்கள் குறிப்பிட்டது போல் நாங்கள் கேட்பது சூரியன் என்ற பதாதகை எழுதி வைக்கச் சொல்லி கேட்பது மிகவும் மலினமான சந்தைப்படுத்தல் உத்தி என்ன செய்வது முகாமைத்தவம் எதை செய் என்கின்றதோ அதை செய்வதை தவிர சூரியன் குழுவினருக்கு மாற்று இல்லை என்பதையும் இங்கே கூறத்தான் வேண்டும்.
அதிலும் அதனை கிண்டலடித்து இன்னுமொரு வானொலி செய்யும் கூத்தும் கூட விமர்சனத்திற்குரியது தான்.
சூரியனின் தீவிர நேயர்களில் நானும் ஒருவன்... மேன்மெலும் சிறக்க வாழ்த்துக்கள்!
இனையத்தில் சூரினைகேட்பதற்கு எதாவது சுட்டிகள் இருக்கின்றனவா?? புலம்பெயர் தேசங்களில் எப்படி சூரினைனை கேட்கலாம். எதாவது சுட்டி(இனையம்)இருக்கிறதா???
தொடருவதற்கு!
// ரமணன் said...

அதிலும் அதனை கிண்டலடித்து இன்னுமொரு வானொலி செய்யும் கூத்தும் கூட விமர்சனத்திற்குரியது தான்.//
உண்மைதான் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. மன்னன் படத்தில் கவுண்டமணி நக்கலடிக்கும் ஒரு காட்சியை முன்னர் சூரியனின் ஒளிபரப்பியபோது அங்கே வேலை செய்த நண்பர் ஒருவரை இதெல்லாம் சரியில்லாத வேலை நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் போட்டியிடுங்கள் என்றபோது இந்தச் சண்டையைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள் என்றார், சில நாட்களில் அவரே இன்னொரு ஊடகத்துக்கு போய்விட்டார். வேலை மாறுவது என்பது அவரவர் சொந்த விடயம் ஆனால் மீடியாக்களில் மட்டும் இன்னொரு ஊடகத்தில் இருந்து இன்னொரு ஊடகத்துக்கு மாறினால் கிண்டல் செய்வார்கள்.
ஆரம்பகால நேயர்களில் ஒருவனாய், பின்னர் அறிவிப்பாளர்களில் ஒருவனாய், இப்போது நலன்விரும்பிகளில் ஒருவனாய் சூரியனுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். அதேநேரம், நீங்கள் சொல்லியதில் சிலவிடயங்கள் எனக்குத் தெரியாவிட்டாலும் பலவற்றில் ஒத்துப்போகிறேன். அவற்றோடு Team work என்று சொல்லப்படுகின்ற கூட்டுமுயற்சியும் சூரியன் பிரகாசிக்கத் தேவைப்படுகிறது. மாற்றங்களோடு தொடரட்டும் சூரியனின் பணி.
நானும் சூரியனின் ஆரம்ப காலம் முதல் ஒரு அசைக்க முடியாத நேயர் தான். ஏனைய வானொலியில் அறிவிப்பாளராய் இருந்தும் கூட. நான் ஆரம்பத்தில் ரசித்த அபர்ணா அண்ணா, ரமணன் அண்ணா, பிரேம் அண்ணா, கஜன் அண்ணா, லோஷன் அண்ணா, மப்ரூக் அண்ணா, வெள்ளையன் அண்ணா, முகுந்தன் அண்ணா, வியாசா அண்ணா, கிருஷ்ணா அண்ணா, பிரணவன் அண்ணா, ஷர்மிளா அக்கா, சங்கீதா அக்கா, சிவானுஜா அக்கா, ரிகாசா அக்கா, குமுதினி அக்கா, நிஷாந்தினி அக்கா, கவ்ரி அக்கா, ......... இவர்கள் இருக்கும் போது சூரியன் வானொலி எங்கள் வீடுகளுக்குள் இருந்து ஒலிபரப்பாகுவது போன்ற ஒரு உணர்வு. அந்தளவு திறமையும், நேயர்களுக்கு எது தேவை என்கிற ஒரு புரிந்துணர்வும் அவர்களிடம் இருந்தது. நவா அண்ணா கூட நான் காதல் கொண்ட ஒரு அறிவிப்பாளர் தான். நேயர்களைக் கொள்ளை கொள்ளும் திறமை, தேவை உணர்வு அத்தனையும் இவரிடம் இருக்கிறது. நல்ல ஒரு முகாமையாளன் கையில் சூரியன் இருப்பது ஒரு புறத்தில் சந்தோஷமாகவும் இருக்கிறது. வாழ்த்துகள் நவா அண்ணாவுக்கு..... இதற்க்கு மேல் சூரியன் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் இப்போதெல்லாம் சூரியன் கேட்பது குறைவு....

(வெளி நாட்டில் இருப்பதால்....)
Anonymous said…
ரமணன் அண்ணா..
நான் ஒரு காலத்தில் சூரியனின் தீவிர ரசிகன். இருந்தபோதிலும் இப்போது எல்லா வானொலிகளையும் கேட்கவேண்டிய கட்டாயத்தில் எல்லா வானொலிகளையும் கேட்டுவருகிறேன்.

என்னை பொறுத்தவரையில் நீங்கள் சொன்ன விடயங்களுடன் எனக்கு முழுமையான உடன்பாடு உள்ளது.

இன்றைய நிலையில் எந்தவொரு வானொலியாலும் ஒரு ஆரோக்கியமான புதிய நிகழ்ச்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. நான் அறிந்த வரை வானொலிகள் சுலபமாக செய்யக்கூடிய நிகழ்ச்சிகளையே தொடர விரும்புவதாக தெரிகிறது.
இதனை ஒரு வானொலி நண்பரோடு பேசியபோது அவர் கூறியிருந்தார்...

சூரியன் தனக்கான முழுமையான ஒரு பலத்தை இப்பொழுது கொண்டுள்ளதா??? என்ற கேள்வி இயல்பாக எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
இந்த நிலையில் சூரியனின் நிகழ்ச்சி முகாமைத்துவம் கொஞ்சம் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றே சொல்ல தோன்றுகிறது.

மேலும் அண்ணா இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகிறேன். தவறெனில் மன்னிக்கவும், அதாவது சூரியன் ஒரு பெரும் வானொலி மாற்றத்துக்கு வித்திட்டது. இருபத்து நான்கு மணி நேரம் தமிழில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஒலிபரப்பு, தொலைபேசி வழியே நேயர்களை முதன்முதல் இணைத்துக்கொண்ட வானொலி என்ற பெருமைகள் சூரியனுக்கு சொந்தமானவை. எனினும் அதனை இன்னும் எத்தனை நாளைக்குத்தான், எத்தனை வருடங்களுக்குத்தான் சொல்ல முடியும். எனவே புதிய மாற்றங்களை ஏற்படுத்த சூரியன் குழு முயற்சிக்க வேண்டும்...

அண்ணா சூரியன் பல இடர்பாடுகளை சந்தித்த போதிலும் அதற்கான நேயர் கூட்டத்தை தக்கவைத்திருக்கின்ற இந்த நிலையில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் இல்லையெனில் போட்டி வானொலிகளின் அதிகரிப்புடன் ஈடுகொடுக்க முடியாமல் போகலாம். எனவே மாற்றங்கள் அவசியம்.

பதினோராவது ஆண்டை கடந்து பன்னிரண்டாவது ஆண்டில் கால்பதிக்க இருக்கும் சூரியன் மென்மேலும் புதுமைகள் படைத்து புரட்சிகள் செய்ய இதயத்தால் இனிய வாழ்த்துக்கள்...

அண்ணா உங்கள் பதிவுகளை இடைவிடாது தொடருங்கள். எமக்கு அவை நல்ல வழிகாட்டிகளாக அமைகின்றன.. நன்றிகளும் உளப்பூர்வமான வாழ்த்துக்களும்.

நன்றி,
அன்புடன்- மயில்வாகனம்
Anonymous said…
ரமணன் அண்ணா..
நான் ஒரு காலத்தில் சூரியனின் தீவிர ரசிகன். இருந்தபோதிலும் இப்போது எல்லா வானொலிகளையும் கேட்கவேண்டிய கட்டாயத்தில் எல்லா வானொலிகளையும் கேட்டுவருகிறேன்.

என்னை பொறுத்தவரையில் நீங்கள் சொன்ன விடயங்களுடன் எனக்கு முழுமையான உடன்பாடு உள்ளது.

இன்றைய நிலையில் எந்தவொரு வானொலியாலும் ஒரு ஆரோக்கியமான புதிய நிகழ்ச்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. நான் அறிந்த வரை வானொலிகள் சுலபமாக செய்யக்கூடிய நிகழ்ச்சிகளையே தொடர விரும்புவதாக தெரிகிறது.
இதனை ஒரு வானொலி நண்பரோடு பேசியபோது அவர் கூறியிருந்தார்...

சூரியன் தனக்கான முழுமையான ஒரு பலத்தை இப்பொழுது கொண்டுள்ளதா??? என்ற கேள்வி இயல்பாக எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
இந்த நிலையில் சூரியனின் நிகழ்ச்சி முகாமைத்துவம் கொஞ்சம் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றே சொல்ல தோன்றுகிறது.

மேலும் அண்ணா இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகிறேன். தவறெனில் மன்னிக்கவும், அதாவது சூரியன் ஒரு பெரும் வானொலி மாற்றத்துக்கு வித்திட்டது. இருபத்து நான்கு மணி நேரம் தமிழில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஒலிபரப்பு, தொலைபேசி வழியே நேயர்களை முதன்முதல் இணைத்துக்கொண்ட வானொலி என்ற பெருமைகள் சூரியனுக்கு சொந்தமானவை. எனினும் அதனை இன்னும் எத்தனை நாளைக்குத்தான், எத்தனை வருடங்களுக்குத்தான் சொல்ல முடியும். எனவே புதிய மாற்றங்களை ஏற்படுத்த சூரியன் குழு முயற்சிக்க வேண்டும்...

அண்ணா சூரியன் பல இடர்பாடுகளை சந்தித்த போதிலும் அதற்கான நேயர் கூட்டத்தை தக்கவைத்திருக்கின்ற இந்த நிலையில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் இல்லையெனில் போட்டி வானொலிகளின் அதிகரிப்புடன் ஈடுகொடுக்க முடியாமல் போகலாம். எனவே மாற்றங்கள் அவசியம்.

பதினோராவது ஆண்டை கடந்து பன்னிரண்டாவது ஆண்டில் கால்பதிக்க இருக்கும் சூரியன் மென்மேலும் புதுமைகள் படைத்து புரட்சிகள் செய்ய இதயத்தால் இனிய வாழ்த்துக்கள்...

அண்ணா உங்கள் பதிவுகளை இடைவிடாது தொடருங்கள். எமக்கு அவை நல்ல வழிகாட்டிகளாக அமைகின்றன.. நன்றிகளும் உளப்பூர்வமான வாழ்த்துக்களும்.

நன்றி,
அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன், தாளம் வானொலி.
முன்னாள் சூரியன் நேயர் said…
//சூரியன் மக்களின் மொழியில் மக்களோடு பேசியது மட்டும் தான்.//
அதை செய்தது சுவர்ணஒலி தான். அதைதான் copy மற்றவர்கள் பண்ணினார்கள்.

மற்றும் சூரியனின் புது தமிழ் சொற்கண்டுபிடிப்புகள் எரிச்சலை தந்தது. அத்துடன் கடூர குரலில் செய்தி வாசிக்க யார்தான் சொல்லிக்கொடுத்தார்களோ?
all the bet for sooriyan fm, once upon a time, i was a very good fan sooriyan fm, but not now, may be this might be the reason
Anonymous said…
சரியாக சொன்னீர்கள் ரமணன். நானும் ஒர் சூரியனின் ஆரம்பகால நேயர்தான். வானொலி மீதான மோகத்தால் டுபாய் சக்தியிலும் கடமையாற்றினேன். இது சூரியனுக்கு மட்டுமல்ல சக்திக்கும் ஏனய தனியார் வானொலிகளுக்கும் பொருந்தும்.
டில்ஷாட் தேவதாசன்
வணக்கம் நண்பரே


இலங்கையிலிருந்து வலைப் பதிவு செய்யும் தங்களை கொழும்பு வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றி தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த மாத இறுதியில் நடாத்த திட்டமிட்டுள்ளோம், தங்களின் வருகை மற்றும் ஏனைய விமர்சனங்கள் கருத்துக்களை என்னுடைய மின்னஞ்சலுக்கோ(vanthidevan@gmail.com) அல்லது புல்லட்டின் மின்னஞ்சலுக்கோ (bullettheblogger@gmail.com) தெரிவிக்கவும்.


நன்றி

அன்புடன்
வந்தியத்தேவன்
ARV Loshan said…
முதற்கண் சூரியனுக்கும் அதன் குழுவினர்,நேயர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

எனது காலை நிகழ்ச்சியிலேயே அந்தன்றே வாழ்த்து சொல்லியதால் இங்கே தாமதம் பரவாயில்லை என நினைக்கிறேன்.

ரமணன் சொன்ன விஷயங்கள் சூரியனுக்கு மட்டுமன்றி எல்லோருக்குமே பொருத்தம்..

எனினும் நாகரிகம் கருதி சூரியன் வானொலி பற்றிய விமர்சனப் பகுதிகளுக்கு போக நான் விரும்பவில்லை..

எனது தனிப்பட்ட ஆளுமை விருத்தியில் சூரியனின் மிகப்பெரிய பங்கை நன்றியுடன் நினைவு கூர்ந்துகொள்கிறேன்.

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring