யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

 யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்..

அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம் என்றார் மாவோ.
தமிழர்கள் இன்று சந்தித்திருப்பதும் ஒரு யுத்தம் தான். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த அரசியல் யுத்தத்தை எதிர் கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்குள் நாம் தள்ளப்பட்டு கிடக்கின்றோம்.
போரில் உங்களை ஒரு முறை மட்டுமே கொல்ல முடியும். அரசியலில் நீங்கள் பலமுறை கொல்லப்படுவீர்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை சொல்லியிருக்கின்றார்.
தமிழ் மக்களின் தற்போதைய நிலையும் அது தான் 2009 ஆயுதப் போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் நாம் பல தடவைகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் இருப்பது தான் 13வது அரசியலமைப்பு அதனை நடைமுறைப்படுத்துவது என்பது அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கடமை.


ஆனால் தற்போதுள்ள நிலையில் 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதே மிகப்பெரிய சவால் என்றும் அந்த சாவலை எதிர் கொண்டு தாம் அதனை நிறைவேற்றி தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசகைளை நிறைவேற்றி வைக்கப் பாடுபடுவதாக மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடகம் போடுகின்றார்.
இது நாடகம் தான் என்று தெரிந்தும் நமது பிரதிநிதிகள் அவரின் நாடகத்தை பார்ப்பதற்கும் இரசிப்பதற்கும் ஒவ்வொரு வாரமும் போய் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
மார்டின் லூதர் கிங் கூறியது போல சுதந்திரம் ஒருபோதும் ஒடுக்குவோரால் தானாக முன்வந்து கொடுக்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களால் கோரப்பட வேண்டும்.
ஆனால் நாம் பிச்சைப்பாத்திரங்களை ஏந்திக் கொண்டு அவர்கள் தரும் பழம் சோற்றையாவது முதலில் பெற்றுக் கொள்வோம் பின்னர் விருந்து பற்றி பேசலாம் என்ற மனநிலையில் இருக்கின்றோம்.
இந்த நிலைக்கு காரணம் என்ன ? நாம் எலலோரும் தான் காரணம்.
கேள்வி கேட்காத அல்லது கேட்க விரும்பாத எமது சமூக அமைப்பு தான் காரணம்.
வாக்களித்து தெரிவு செய்து விட்டால் போதும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற அலட்சயம் தான் காரணம்.
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் அதனை உண்மையாக்கி விட அரசாங்கம் முயல்கின்றது நாமும் அதனை நம்புவதற்கும் ஏற்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கின்றோம் அல்லது தயாராக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசகைள் என்ன ?
அவை ஏன் அவசியமானைவை ?

சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்றால் என்ன ?
தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்றால் என்ன ?
தீர்வுக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்படுவதற்கான ஒழுங்குகள் ?
அதனால் எவ்வாறான அனுகூலங்கள் ஏற்படும் ?
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசகைளை நிறைவேற்றுவதால் பெரும்பான்மை சமூகத்திற்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமா அல்லது அனுகூலங்கள் பெருகுமா ?
இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சவால்கள் என்ன ?
இந்த விடயங்கள் குறித்தான தெளிவு எம்மிடம் இருக்கின்றதா ?
இல்லை என்றால் இந்த தெளிவினை தமிழ் மக்கள் பெறுவதற்கான ஒழுங்குகளை யார் செய்ய வேண்டும் அல்லது யார் செய்யப் போகின்றார்கள்?
இப்படியாக பல கேள்விகளால் நிறைந்து கிடக்கின்றது எமது எதிர்காலம்.
தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பலவாக பிளவுண்டு நிற்பது போலவே புலம்பெயர் தேசங்களிலும் நாம் பலவாக பிரிந்து நிற்கின்றோம்.
தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் தரப்புகளும் புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளும் சந்தித்து கலந்துரையாட வேண்டிய காலத்தேவை ஏற்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜேர்மனியைத் தளமாகக் கொண்ட Berghof-Foundation என்ற தன்னார்வத் தொண்டர் அமைப்பின் ஊடாக இதுபோன்ற சந்திப்பு ஏற்பாடு செய்யப்படிருந்தது.



இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, போன்ற தயாகத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் புலம் பெயர் தேசங்களில் உலகத் தமிழர் பேரவையில் அங்கம் வகிக்கும் கனேடியத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கனேடியத் தமிழர் தேசிய அவை போன்றவையும் சந்தித்து தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து பொதுவான உட்னபாட்டை எட்டுவதற்கு முயற்சித்திருந்தார்கள்.
இருந்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
ஒரு வேளை அது அன்று வெற்றியளித்திருந்தால் நாம் ஒரு கௌரவமான அரசியல் தீர்வினை இப்போது அடைந்திருக்கலாம்.
இன்று காலம் கடந்து மீண்டும் அதே புள்ளியில் மிகப் பலவீனமான நிலையில் சர்வதேசமும் கைகளழுவி விட்ட தரப்பாக நாம் நின்று கொண்டிருக்கின்றோம்.
துமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்க வேண்டும் என்று சர்வதேசம் அதீத ஆர்வம் காண்பித்த வேளையில் அதனை பயன்படுத்தாமால் கால நீடிப்புகளை வழங்கி இழுத்தபடிப்புகளை செய்து இன்று 13 ஐ பெறுவதே பெரும் பேறு என்ற நிலைக்கு நாம் வந்து சேர்ந்திருக்கின்றோம்.
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சந்தித்த அமெரிக்க தூதுவர் கூறிய ஒரு கருத்து மிக முக்கியமானது.
எல்லாவற்றிற்கும் சர்வதேசத்தை எதிர்பார்க்காமல் உங்களுக்கான தீர்வை அடைய முயற்சிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
உண்மை தான் சர்வதேசத்தின் இப்போது மாறியிருக்கின்றது.
கோவிட் பெருந்தாக்கம் அது ஏற்படுத்திய பொருளாதார சவால்கள் , யுக்ரேன் மீதான ரஸ்ய படையெடுப்பு , கொரிய தீபகற்பத்தின் பதற்றம் என உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் மாறிப் போயுள்ளன.
இந்தியாவின் பாரதீய ஜனதா அரசாங்கம் தனது அதிகார விரிவாக்கத்தில் தமிழகத்கைப் கைப்பற்ற கடும் முயற்சி எடுக்கின்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு தமது கட்சி அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுத்துவிட்டான தோற்றப்பாட்டை ஏற்புடுத்த பிரதமர் மோடியும் அண்ணாமலையும் விரும்புகின்றார்கள்.


13 தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அல்ல என்று இந்திய தரப்பிற்கு கூறுவதற்கு தமிழ் தலைமைகள் தயாராக இல்லை.
தனித் தரப்பாக இந்தியாவிற்கோ சர்வதேசத்திற்கோ இதனை தெளிவுபடுத்துவது சவால் மிக்கதாக இருக்கலாம்.
ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ் தரப்புகள் அனைவரும் சேர்ந்து எமக்கான தீர்வு இப்படியானதாகத் தான் அமைய வேண்டும் இதனை தான் நாம் விரும்புகின்றோம் என்று உரத்துக் கூறினால் நிச்சயமாக ஒரு மாற்றம் வரும்.
தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு ஏன் அவசிமானது என்பதற்கு தமிழர் தயாகப் பகுதிகளில் தற்போதும் நடைபெறும் பௌத்தமயமாக்கல் , காணி அபகரிப்பு இராணுவ கட்டுப்பாடுகள் போன்றவற்றின் ஆதாரங்களை நாம் முன்வைக்கலாம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் காலம் காலமாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிகள்; இதுவரை நிறைவேற்றப்படாமை குறித்து நாம் ஒன்றாக முறையிடலாம்.
13 என்பது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பு ஏற்பாடு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்யும் அரசுகள தான் என்பதை தெளிவு படுத்தலாம்.
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் இலங்கை வெளிநாடுகளிடம் இருந்தும் சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் பொருளாதார நன்மைகளை பெறுவதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்று.
இப்போது ஏற்பட்டுள்ள நிலமை தற்காலிகமான நிவாரணம் மட்டும் தான் நிரந்தரமான தீர்வினை அடைவதற்கு இலங்கை நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்.
அதில் மிக முக்கியமானது இனப்பிரச்சினைக்கான தீர்வு.
இலங்கை அரசாங்கம் அதனை மிகக் கவனமாக மடைமாற்றிவிட முயல்கின்றது.
13ஜ நடைமுறைப்படுத்துவது தான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்று அது சர்வதேசத்தை நம்ப வைக்க முயல்கின்றது.
அதிலும் ஏற்கனவே இருக்கின்ற காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களையும் வழங்க முடியாதிருப்பதாக காண்பிக்கின்றது.
13 ஐ நடைமுறைப்புடுத்தினால் நாட்டிற்கு ஆபத்து என்று முன்னாள் இராணுவத் அதிகாரி ஜகத் டயஸ் கருத்தரங்கு வைக்கின்றார் சமஸ்டி கேட்டால் இரத்த ஆறு ஓடும் என்று உதய கம்மன் வில எச்சரிக்கின்றார் தென்னிலங்கை தெளிவாக நகர்கின்றது. நாம் தான் குழம்பிப் போய் கிடக்கின்றோம்.
நாம் இப்போது செய்ய வேண்டியது தாயகத்தில் உள்ள தமிழ் தேசியஅரசியல் கட்சிகளையும் புலம் பெயர் தேசங்களில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்று சேர்ப்பது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலசைகள் என்ற ஒரு பொதுப் புள்ளியில் அனைத்து தரப்புகளையும் ஒன்றாக சந்திக்க வைப்பது தமிழ் சமூகமாக நாம் இன்று செய்ய வேண்டிய மிக முக்கியமான தேவை.
அனைத்து தரப்பும் சந்தித்து பேசுவதற்கான ஒழுங்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
நேரடியான சந்திப்பிற்கான ஒழுங்குபடுத்தல் உடனடிச் சாத்தியம் அல்லாவிட்டால் 15ம் திகதி ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னர் அனைத்து தரப்பினரையும் ஒரு இணையவளிக் கருத்தரங்கிலாவது சந்திக்கச் செய்வது காலப் பொருத்தமனது.
அவ்வாறு தமிழ் தரப்புகள் ஒன்றாக சந்திப்பது என்பதே மிகப் பெரிய செய்தியினை சொல்லும் ஆற்றல் மிக்கதாக இருக்கும்.
ஜனாதிபதி அழைத்தால் போக வேண்டும் பேச வேண்டும் என்பதற்கு அப்பால் எதைப் பேச வேண்டும் எதனைக் கேட்க வேண்டும் என்ற ஒரு தெளிவினை ஏற்படுத்துவது அவசியமானது.
2015 ஆண்டு தமிழ் பேரவையினால் கொண்டு வரப்பட்ட தீர்வு யோசனை மிக முக்கியமானது.
ஆனால் அதனை சில தரப்புகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் அது கண்டு கொள்ளப்படாமல் போய்விட்டது.
அதனை தொடக்கப் புள்ளியாக அல்லத உசாத்துணையாக கொண்டு இந்த கரையடலை மேற்கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசகைளை தெளிவாக பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான ஆவணம்.
அதற்கான அங்கீகாரத்தை தமிழ் சமூகமாக நாம் ஒன்றிணைந்து வழங்கினால் அதன் அடிப்படையிலான தீர்வு நோக்கி நகர்வதற்கு நாம் முயற்சிக்கலாம்.
அனைத்து தரப்பின் பங்கு பற்றுதலோடு அதே போன்ற காத்திரமான ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்கினால் அது மிகக் காத்திரமானதாக இருக்கும்.
தமிழ் சமூகமாக நாம் இதனை உடனடியாக செய்ய வேண்டும்.
ஆனால் யார் இதனை ஒழுங்கு செய்வது என்பது தான் இங்குள்ள மிக முக்கியமான சவால் ? பூனைக்கு யார் மணி கட்டுவது.
எல்லோரையும் ஒன்றாக அழைப்பது சாத்தியமா அப்படியே வந்தாலும் ஒரே நிலைப்பாட்டிற்கு அவர்கள் வருவார்களா ?
இந்தியா கூப்பிட்டால் ஒன்றாக போகின்றீர்கள் அமெரிக்க தூதுவரை ஒன்றாக சந்தித்து பேசுகின்றீர்கள் படமும் எடுக்கின்றீர்கள் தமிழ் மக்களுக்காக நீங்கள் எல்லாரும் ஒன்றானால் மிகப் பெரிய மாற்றம் வரும்.



தமிழ் மக்களின் இத்தனை கால வலிகளுக்கும் போராட்டங்களுக்கும் இழப்புகளுக்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும். எமக்கான நிரத்தரமான விடிவு கிடைக்கும்.
எமது மண்ணின் விடியலுக்காய் ஆகுதியான அத்தனை பேரின் தியாகங்களுக்காகவும் உங்கள் முரண்களை களைந்து விட்டு அனைவரும் ஒன்றாக வாருங்கள்.
எம் மீதான தீர்வுகளை திணித்து விட்டு தமது அரசியலை நகர்த்த முயற்சிக்கும் பெரும்பான்மையின சதியினை முறியடித்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசகைளுக்காக அனைவரும் ஒன்றாவோம் வாருங்கள்.
முடியாதது என்று வாழ்கையில் எதுவும் இல்லை முயற்சித்தால் இதுவும் நடக்கும் இதனை தாண்டியும் கிடைக்கும்.
எதாவது ஒரு அசராங்கம் இதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாக இருந்தால் அது மேலும் வலுவானதாக இருக்கும்.
ஏற்கனவே சுவிஸ் அரசாங்கம் இது போன்ற முயற்சியை ஆரம்பித்ததாகவும் எனினும் கொவிட் பெருந் தொற்றினால் அது கைவிடப்படதாகவும் தெரிய வருகின்றது.
ஏன் கனேடிய அரசாங்கத்தினால் கூட இது போன்ற ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்ய முடியும்.
இதற்கான தேவையினை தெளிவுபடுத்தி கனேடிய அரசாங்கத்திடம் நாம் வேண்டுகோளினை முன்வைக்கலாம்.
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுக்களுக்கு மத்தியஸ்தம் அல்லது அனுசரணை வழங்குவதற்கு மூன்றாம் தரப்பை எதிர்பாரத்திருந்த தமிழ் சமூகம் தமக்கிடையிலான இணக்கப்பாட்டிற்கு மூன்றாம் தரப்பினை நாட வேண்டிய துர்பாக்கிய நிலையில் நிற்கின்றோம் என்பது தான் வேதனை.
தாயகத்தில், கனடாவில் ஐரோப்பவில் அவுஸ்ரேலியாவில் பல தமிழ் கல்விமான்கள், சிந்தனையார்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள், பலர் தமிழ் தரப்புகள் அனைத்தோடும் நல்ல உறவில் இருக்கின்றார்கள்.
அவர்கள் கூட இது போன்ற சந்திப்பினை ஏற்பாடு செய்யலாம்.
செய்வார்களா ?
அடம்பன் கொடியும் திரண்டால் "தான்" மிடுக்கு !

Comments

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring