தமிழ் மரபுரிமைத் திங்கள் 2013


புதிய தேசத்தில் புதிய வாழ்கைச் சூழலில் இருந்து எழுத்தப்படும் முதலாவது பதிவு இது.

2011ம் ஆண்டு ஓக்ரோபர் மாதம் கனடாவிற்கு புலம் பெயர்ந்த பின்னர் இங்கிருக்கும் வாழ்கை முறைக்குள் வாழப் பழகுவதற்கான போராட்டங்களோடு ஒரு வருடம் கடந்தோடிப் போய்விட்டுள்ளது.

இங்கும் எழுதுவதற்கும் பகிர்வதற்கும் நிறையவே விடயங்கள் இருக்கின்றன.
ஆனால் அதற்கானநேரத்தை தேடி அடைவதென்பது சிரமமளிக்கும் ஒன்றாகவே இருந்த வருகின்றது.



இந்த வருடம் சமூக வலைத்தளங்களில் அதிகம் இயங்குவதற்கு தீர்மானித்திருக்கிறேன்.அது சாத்தியமாகின்றதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்த பதிவின் நோக்கம் தமிழர்களின் தலைமாதம் குறித்த ஒரு சிறப்பானதும் முக்கியத்துவம் மிக்கதுமான வேலைத் திட்டம் தொடர்பான சில விடயங்களை பகிர்வதாகவே இருக்கின்றது.

நான் கடமையாற்றி வரும் வணக்கம் எப்.எம் மற்றும் தமிழ் வண் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடக பங்களிப்போடு இம்முறை ரொரன்ரோவில் தமிழர்களின் பாரம்பரிய மாதம் தொடர்பான வேலைத் திட்டங்கள் "தமிழ் மரபுரிமைத் திங்கள்" என்ற தொனிப் பொருளுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் மீதும் தமிழரின் பாரம்பரியங்கள் மீதும் பற்றுதி கொண்ட இளம் தலைமுறையினரின் கடின உழைப்பினால் இங்கு தமிழர்கள் வாழும் முக்கிய நகரங்களின் நகர சபைகள் தை மாதத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக அங்கீகரித்துள்ளன.

ஒன்ராறியோ மாகாண சபையும் அதனை அங்கீகரிப்பதற்கு தயாராக இருந்த போதிலும் மாகாண சபை அமர்வுகள் கடந்த பல வாரங்களாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையால் அதற்கான சாத்தியம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

2013ம் அண்டில் ஒன்ராறியோ மாகாண சபையின் அங்கீகாரம் தமிழர்களின் பாரம்பரிய மாதத்திற்கு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புலம் பெயர் தேசங்களில் வாழும் மக்கள் இழந்து விட்ட தமது தாய் மண்ணின் வேர்களை தேடிக்கொண்டிருக்கின்ற சூழலில் முன்னெடுக்கப்படும் இது போன்ற முனைப்புகள் வரவேற்பிற்குரியவை.

நேரத்தோடு போராடும் வாழ்கைச் சூழலின் மத்தியிலும் எழுந்து நிற்கும் இது போன்ற முயற்சிகளை நாங்கள் கொண்டாட வேண்டும் என்பது அவசியமாகின்றது.


நீதன் ஷான் இங்குள்ள இளம் தலை முறையின் முக்கிய அடையானமாக இருக்கும் ஒரு தமிழ் இளைஞன்.

இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்பதை தாண்டி இதனை வெற்றிகரமாக முன் நகர்த்துவதற்கு கடந்த பல வருடங்களாக உழைத்து வரும் இளைஞர்களின் குறியீ்டாக கருதப்படுபர். அவரின் இந்த முயற்சி பல இளைஞர்களை தமிழரின் பாரம்பரியங்கள் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் அறிந்து கொள்ளும் திசை நோக்கி திருப்பியுள்ளது.

தமிழர்களாக நாங்கள் பெருமையோடு போற்றும் தமிழரின் பாரம்பரியங்களை இங்கு வாழும் வேற்றின சமூகங்களோடு பகிர்ந்து கொள்வதும் இங்கு புதிதாக தோன்றியுள்ள எமது அடுத்த தலைமுறைக்கு அதனை கொண்டு சேர்ப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

பல்லின சமூகங்களோடு இணைந்து பணியாற்றும் நம்மவர்கள் அவர்களின் வேலைத் தளங்களிலும் மாணவர்கள் அவர்களின் கல்வி நிலையங்களிலும் இதனை முன்னெடுக்க முடியும்.

ஒரு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களின் நிகழ்சி நிரலுக்கு அமைவாக தமிழர்களின் பாரம்பரிய மாத நிகழ்வுகள் நடத்தப்படாமல் பரந்து பட்ட பங்களிப்புடன் இதனை முன்னெடுப்பதற்கான ஏற்பாடு வரவேற்பிற்குரியது.

இங்கு இருக்கும் அமைப்பியல் முரண்பாடுகள் காரணமாக ஒரு அமைப்பினால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வு மற்றைய அமைப்புகளால் புறக்கணிக்கப்படுதல் அல்லது அதற்கு மாற்றான நிகழ்வு அதே தினத்தில் ஏற்பாடு செய்யப்படுதல் என்ற கொடிய நோய் புலம் பெயரந்த் எங்களை பீடித்திருப்பதும் இந்த ஏற்பாட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

எல்லோரும் வாருங்கள் ஒன்றாக வடம் பிடிப்போம் தேர் நகரட்டும் என்ற இந்த அழைப்பு ஒரு சிறந்த முன்னுதாரணமாக கொள்ளப்படக் கூடியது.
தமிழர்களின் பாரம்பரிய மாதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் குறித்தும் அதற்கு தேiவாயன தொழில் நுட்ப ஆலோசனைகளையும் ஏற்பாட்டுக் குழுவினர் வழங்கவுள்ளனர்.
அவர்களின் ஒத்துழைப்புடன் தமிழர்களின் வாழ்வியல் மீது அக்கறை கொண்டவர்கள் தங்கள் பகுதிகளில் இதனை முன்னெடுக்க முடியும்.

பணியிடங்களில் தமிழ் பணியாளர்கள் தமது மாற்றின பணியாளர்களோடும், மாணவர்கள் வேற்றின சமூக மாணவர்களோடும் தொடர் மாடி மனைகளில் வாழும் மக்கள் அங்கு வாழும் மாற்றின சமூக மக்களோடும் ஒன்று கூடல்களை, அல்லது ஒரு தேநீர் விருந்தினை ஏற்பாடு செய்வதன் ஊடாகவும் இந்த மாதத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

இந்த நிகழ்வுகளில் பேசுவதற்கு சிறப்பு பேச்சாளர்களை ஏற்பாடு செய்வதற்கும் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

இந்த சிறிய நிகழ்வுகளில் தமிழர்களின் வாழ்வியல் குறித்த விடயங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ள முடியும். அந்த சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழரின் பாரம்பரியங்களையும் அவர்களின் வரலாற்று தடங்களை தெளிவுபடுத்துவதற்கான சிறு ஆவணங்கள் தாயரிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவானதாகவும் குறுகிய வாசிப்பின் ஊடாக நீண்டகால வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் கைநூல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய மாத நிகழ்வுகளின் ஏற்பாட்டுக் குழுவினை தொடர்பு கொள்வதன் மூலம் இந்த விடயங்களை பெற்றுக் கொள் முடியும்.
இதேவேளை சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் சிறுகச் சிறுக நாங்கள் முன்னெடுக்கும் இந்த வேலைத் திட்டங்கள் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது என்ற நம்பிக்கை எங்களுக்குள் ஏற்பட வேண்டும்.

இங்கு தமிழர்களில் சிலர் கடந்த காலங்களில் செயல்பட்ட விதமானது தமிழர்கள் குறித்த தவறான புரிதலை மாற்றின மக்களிடையில் ஏற்படுத்தி விட்டுள்ளது.

தமிழ் இளைஞர் குழுக்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட குழு வன்முறைகள் தமிழர்களை குழு வன்முறையாளர்களாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

அதே போல் கடனட்டை மோசடிகள் காப்புறுதி மோசடிகள் குறித்து சில தமிழர்கள் கைது செய்யப்பட்டமை தமிழர்களை மோசடிக்காரர்கள் என்று அடையாளப்படுத்தவும் காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் மிக அண்மைக் காலமாக மாற்றின மக்களுக்கு தமிழர்கள் யார் என்ற புரிதனை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.
பொதுவாக இங்குள்ள பொது வைத்திய சாலைகள் மக்களின் பங்களிப்புடன் தமது உட்கட்டுமான வசதிகளை அதிகரித்து வருகின்றன.

மருத்துவ சேவைகளை அரசாங்கம் மக்களுக்கு இலவசமான வழங்கி வருகின்ற போதிலும் வைத்தியசாலையின் வசதிகளை மேமப்படுத்துவதற்கு பிரதேச மக்கள் ஒத்துழைப்பு வேண்டப்படுகின்றது. இப்போது தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளுக்கான நிதி சேகரிப்புகளை தமிழ் சமுகம் பல்வேறு வழிமுறைகளின் ஊடாக முன்னெடுத்து வருகின்றது.

இதன் மூலம் தமிழர்கள் மீதான நன்மதிப்பு இங்கு ஏற்றம் பெற்று வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.

தமிழர்கள் தங்களுக்காக மட்டுமல்லாமல் இங்கு வாழும் ஏனைய இனங்களுக்காகவும் உதவிகளை வழங்குகின்றார்கள் என்ற எண்ணம் மாற்றின மக்களிடையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தமிழ் மரபுத் திங்கள் என்ற செயல் திட்டமானது தமிழர்களின் மதிப்பீடுகளை ஏனைய சமூகங்களிடையில் அதிகரிக்கும் என்று நம்பமுடியும்.

எதிர் வரும் காலங்களின் புலம் பெயரந்து தமிழர்கள் வாழும் தேசங்கள் எங்கும் மரபுரிமைத் திங்கள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதே இந்த வருடத்தின் முக்கிய குறிக்கோளாக கொள்ளப்படுகின்றது.

இன்னும் நிறைய விடயங்கள் இத குறித்து பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியுள்ளதால் மீண்டும் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய புதுவருட வாழத்துக்கள்....!

Comments

Jana said…
நல்லதொரு விடையம். தமிழ் மரபுரிமைத் திங்கள் சிறப்புற வாழ்துக்கள்.
அத்தோடு தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Pakeerathan said…
நல்ல விடயம் எழுதி இருக்கிறீர் ஆனால் நடை முறைக்கு சரி வராது. பலர் தங்கள் சுய விளம்பரத்திற்காக பல விடையங்களை செய்கிறார்கள். உண்மையான விசுவாசம் இல்லை என்பது என் அனுபவம்.
பகீரதன்
( பட்டணத்தில் எலிகள் , ஒற்றுமை தமிழ் கார்ட்டூன் வெளியிட்டவர் )

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring