ஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 05

சூரியன் செய்திகளும் நானும்.

அறிவிப்பாளன் என்ற நிலையில் இருந்து என்னை ஒலிபரப்பு ஊடகவியலாளனாக்கிய இடம் சூரியனின் செய்திப்பிரிவு.



எனது ஊடகத்துறை ஆற்றல்களை இனம்கண்டு அவற்றை புடம் போட்டது இந்த இடம் தான்.

இன்றும் ஒலிபரப்பு ஊடவியலாளனாய் நான் பணியாற்றுவதற்கு காரணம் சூரியன் செய்திப்பிரிவு எனக்கு வழங்கிய பயிற்ச்சி தான்.

ஊடகத்துறையில் எனக்கு அகரம் சொல்லிக் கொடுத்த பள்ளிக்கூடம் அது.செய்தி வாசிப்பாளனாக மட்டும் என்னை கருதாது தங்களில் ஒருவனாய் கருதிய சூரியன் செய்திப்பிரிவனருக்கு என்றும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தடையவை.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செய்திகளுக்காகவே சூரியன் பிரபல்யம் பெற்றிருந்ததை எவரும் மறந்திருக்க முடியாது.

அந்த வேளையில் முக்கியம் மிக்க செய்தி அறிக்கைகளில் ஒன்றான சூரியனின் இரவுச் செய்திகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது.

இலங்கை முழுவதிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் பரவலான அவதானிப்பை நான் பெறுவதற்கு சூரியனின் இரவுச் செய்திகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை தான் காரணம் அந்த வாய்ப்பினை எமது நிகழ்ச்சி பொறுப்பதிகாரி நடா அண்ணா.

அந்த வாய்பை உரிய முறையில் பயன்படுத்தி செய்திகளில் எனது தனித்துவத்தை நிலை நாட்ட காரணமாய் அமைந்தது சூரியன் செய்திப் பிரிவு என்கு வழங்கிய ஒத்துழைப்பு.

சூரியனில் வேறு எந்த ஒரு அறிவிப்பாளருக்கும் இல்லாத நெருக்கமான உறவு எனக்கு சூரியன் செய்திப் பிரிவோடு ஆரம்பம் முதலே இருந்தது.

நான்கு திசைச் செய்திகள் தினமும் நான்கு வேளைகளும் முந்திக் கொண்டு வந்து தந்தத சூரியன்.ஏங்கே எது நடந்தாலும் உடனுக்குடன் அதனை மக்களுக்கு வழங்கியதால் தமிழ் பேசும் மக்களின் வாழ்வோடு ஒன்றித்துப் போனது சூரியன்.

அறிவிப்புத்துறையில் எவ்வாறு சூரியன் புதுமைகளை புகுத்தியதோ ஆதேபோல் செய்தி அறிக்கையிடலிலும் சூரியன் செய்திகள் தனித்துவம் படைத்தது.

காசி நவரத்தினம்
சூரியன் செய்திப் பிரிவின் ஆரம்பகர்தா காசி நவரத்தினம் எங்களுக்கு காசி அண்ணா, அவா தான் இந்த புதிய செய்தியிடலை அறிமுகப்படுத்தியவர்.
சூரியன் செய்திப்பிரிவின் ஆணிவேர் அவர் தான்.நான் இணைந்து சிறிது காலத்தின் பின்னர் அவர் சூரியனில் இருந்து விலகிவிட்டாலும் அவருடன் பணிபுரிந்த காலத்தில் தான் நான் செய்திகளை வானொலிக்கேற்றவாறு எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக் கொண்டேன்.

செய்தியை உணராமல் செய்தியை சிறப்பாக வாசிக்க முடியாது என்பது அவர் எனக்கு கற்று தந்த முதல் பாடம்.

செய்தி சொல்லும் விதத்தால் செய்தியின் முக்கியத்துவத்தை உணர வைக்க முடியும் என்ற வித்தையை அவர் தான் அறிமுகப்படுத்தினார்.

குறைவான சொற்றகளை கொண்டு வசனங்களை உருவாக்க வேண்டியது வானொலி செய்திகளுக்கு முக்கியமானது.

அது வாசிப்பவருக்கும் உதவியாக அமைவதோடு கேட்பவர்களிடம் இலகுவாக செய்தியை கொண்டு சேர்த்து விடும்.

குறைந்த சொற்களை கொண்டு செய்திகளை வடிவமைப்பது சவால் மிக்கது அதனை அவர் மிக எளிதாக கையாண்டார்.

செய்திப் பிரிவை பொறுத்தவரை எனத மானசீக குருவாக நான் அவரை தான் கருதுகின்றேன்.

இப்போதும் எங்கு என்னை கண்டாலும் அன்போடு நலம் விசாரிக்கும் அன்புள்ளம் கொண்டவர் காசி அண்ணா.


இந்திரஜித்
காசி அண்ணா மூலம் சூரியனுக்கு அழைத்து வரப்பட்ட சூரியன் செய்திப்பிரிவின் இன்றைய முகாமையாளர் இந்திரஜித் சூரியன் செய்திப்பிரிவின் வளர்ச்சியில் முதன்மை பங்காளியாக இவரை தாரளமாக குறிப்பிடலாம்.


அன்று முதல் இன்று வரை தனது தனித்தவமான ஆற்ல்களால் சூரியன் செய்திப்பிரிவை தாங்கி வருபவர்.

எதனையும் வெளிப்படையாக குறிப்பிடக் கூடியவர்.எனது ஊடகத்துறை வளர்ச்சியில் இன்றும் அக்கறை கொண்ட ஒருவர்.

இன்று நான் பணிபுரியும் நிறுவனத்தில் இணையுமாறு என்னை நிர்பந்தித்து சேர்த்து வைத்தவர்.

இன்றைய எனது வளர்ச்சி நிலைக்கு மிக முக்கிய காரணமானவர் இந்திரஜித்.
அவர் மட்டும் என்னை அன்று என்னை சரியாக வழிநடத்தாமல் இருந்திருந்தால் எனது பாதை திசை மாறியிருக்கும்.

எத்தகைய நெருக்கடி வந்தாலும் நான் ஆறுதல் தேடி அழைப்பு எடுக்கும் நம்பிக்கைக்குரிய நண்பர் அவர் தான்.

அவர் மூலமாகதான் தமிழ் ஊடகத்துறையில் பலரின் நட்ப்பும் தொடர்பும் எனக்கு ஏற்பட்டது.

இந்திரஜித்தின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கப்படாத போதிலும் சூரியனுக்காகவே தன்னை அர்பணித்த உயர்ந்த மனிதர்.இன்றும் அவரின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காத போதிலும் தனக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்த பட்ச வசதிகளின் ஊடே சூரியன் செய்திப்பிரிவை சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.

பல தடவைகள் போட்டி வானொலிகளில் இருந்து மிகப்பெரிய விலை பேசப்பட்ட போதும் சூரியனை விட்டு வெளியேற மறுத்தவர்.

நடராஜா குருபரன்
இவரை சூரியனுக்கு அறிகம் செய்தமை எனக்கு பெருமை தரும் விடயமாக கருதுகின்றேன்.

1998ம் ஆண்டு யாழ் குடநாட்டு மாணவர்களுக்கு உயர்தர பரீட்சைக்கான விசேட கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் முயற்ச்சியில் எனது நணர்பாக் சிலருடன் இணைந்த நான் ஈடுபட்டிருந்தேன்.

கொழும்பில் இருந்து பிரபலமான ஆசிரியர்களை அழைத்துச் சென்று யாழ்ப்பாணத்தில் கருத்தரங்குளை நடத்துவது தான் திட்டம்.

கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான குறிப்புகள் மாதிரி வினாத் தாழ்கள் போன்றவற்றை கொழும்பில் அச்சிடுவதற்கு தீர்மானித்தோம்.
ஆப்போது தான் இது போன் முயற்ச்சிகளுக்கு உதவக் கூடிய ஒரு அச்சக உரிமையாளரை எனது நண்பர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.

வெள்ளவத்தையில் சிலோன் இன் ஹொட்டேலின் முதல் மாடியில் இருந்து அந்த அச்சகம் அதன் பெயர் கார்திகேயன் அச்சகம்.

அதன் உரிமையாளர் நடராஜா குருபரன்.



பரஸ்பர அறிமுகங்களை அடுத்து எங்களது முயற்ச்சிகளை மனமுவந்து பாராட்டிய அவர் கருத்தரங்குக்கான ஆவணங்களை அச்சிடும் பணியை ஏற்றக் கொண்டார்.

ஏறத்தாள ஒரு வாரம் எனக்கு காhத்திகேயன் அச்சகம் தான் வீடாகிப் போனது.
இரவில் நித்திரைக்கு மட்டும் வீட்டிற்கு செல்வேன் மற்ற நேரம் முழுவதும்குரு அண்ணாவின் அச்சக்தில் தான் எனது பொழுதுகள் கழிந்தன.

அந்த ஓரு வார பழக்கம் அவரை எனக்கு மிகவும் நெருக்கமான மனிதராக மாற்றியது.

அவரிடம் இருந்த மனிதர்களை கவரும் ஆழுமை அவர் அடைந்த வெற்றிகளுக்கு மிகப்பெரும் காரணி.

அவர் கடத்தப்பட்ட போது அவரின் மைத்துனரும் எனது நண்பருமான மதி அடித்த கொமென்ற் இதனை உறுதிப்படுத்தும்.

“ கடத்திக் கொண்டு போனவாகள் குரு அண்ணாவை கதைக்க அனுமதித்தால் போதும் அவர் தப்பி விடுவார் “
அந்த அளவிற்கு தனது பேச்சின் மூலமே எதிராளியை நிலைகுலைய வைக்கும் சாமார்த்தியசாலி.

அவரின் கடந்த கால போராட்ட வாழ்வு மற்றும் சரிநிகர் ஊடான ஊடகத் தொடர்புகள் என தமிழ் ஊடகத்துறையில் வரலாறு தெரிந்த ஒரு சில ஊடகவியலாளர்களில் ஒருவராக குரு அண்ணா இனம் காணப்பட்டார்.

சூரியனின் பிரதம செய்திய ஆசிரியராக இருந்த காசி அண்ணா விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்த நிலையில் எமத நிகழ்ச்சி பொறுப்பதிகாரியான நடா அண்ணா என்னிடம் அந்த பதவிக்கு பொருத்தமானவர்கள் எவராவது இருந்தால் தனக்கு தெரியப்படுத்துமாறு கோரியிரந்தார்.

இதனை நான் குரு அண்ணாவிற்கு தெரியப்படுத்தி எவராவது இருந்தால் அறியத்தருமாறு கேட்டேன்.

நான் அதற்கு பொருத்தமில்லையோ என்றார் அதுவரை அச்சக உரிமையாளராகத் தான் அவரை எனக்கு அப்போது தெரியும் அவர் சரிநிகரில் பணியாற்றியதும் ஊடக அனுபம் உடையவர் என்பதும் தெரியாது.

ஏற்கனவே சக்தியின் செய்திப் பிரிவினராலும் அவர் நடாப்பட்டு அங்கு செல்வதற்கு அவர் ஏறத்தாள முடிவு செய்திருந்த நிலையில் தான் நான் சூரியன் செய்தி பிரிவு வெற்றிடம் குறித்து பேசியிருந்தேன்.

அதன் பின்னர் உடனடியாக நடா அண்ணாவிடம் அவரை அறிமுகம் செய்து சூரியனுக்கு வரவழைத்து சூரியன் செய்திப் பிரிவின் சிரேஸ்ட செய்தி ஆசிரியராக பதவியில் அமர வைத்தேன்.

எழுத்து ஊடகத்துறையில் இருந்து வந்ததால் ஆரம்பத்தில் வானொலி செய்தித் தயாரிப்பில் சிக்கல்களை சந்தித்தாலும் விரைவில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

அவர் கடத்தப்பட்டு காணமல் போன போது எல்லோரையும் விட அதிகமாக கலைப்பட்டேன்.

அச்சகம் நடத்திக் கொண்டு நிம்மதியாக இருந்து மனிதரை வலிந்து அழைத்து வந்து சூரியன் செய்தி ஆசிரியராக்கி இன்று அவர் கடத்தப்டும் நிலைக்கு நானே காரணமாகிபோனேன் என்ற குற்ற உணர்ச்சி என்னை அன்றைய நாள் முழுதும் கொன்று தின்றது.

அடுத்த நாள் எனது பிறந்த நாள் ..அவர் மீண்டும் பிறந்த நாள்.

அவர் மீது சில வருத்தங்களும் விமர்சனங்களும் எனக்கு இருந்ததுண்டு ஆனால் அவற்றை அவரிடமே நேரடியாக கூறக் கூடிய அளவிற்கு எங்களின் உறவு இருந்தது.

சூரியன் செய்திப் பிரிவில் செய்தி ஆசிரியராக நான் இணைவதற்கு குரு அண்ணா தான் காணரம்.

2003ம் ஆண்டு நான் மீண்டும் சூரியனில் இணையும் போது முழு நேரமாக இணைந்து கொள்ள முடியாத அளிவிற்கு சில தனிப்பிட்ட காரணங்கள் தடுத்த போது பகுதி நேரமாக சூரியன் செய்திப்பிரிவில் என்னை உள்வாங்கி கொண்டார்.
சூரியன் செய்திப்பிரிவில் நான் பணியாற்ற கிடைத்த சந்தர்ப்பம் மிகப்பெறுமதியானது.

ஊடகத்துறையின் சிறந்த பயிற்ச்சிக் காலமாக அது எனக்கு இருந்தது.
செய்தி சேகரிப்பு ,உறுதிப்படுத்தல் வானொலி வடிவமாக மாற்றுதல் என செய்தி அறியையில் நான் முன்பு அவதானித்தவற்றை பயிற்சி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்த காலம்.

சூரியன் செய்திப் பிரிவு சுயாதீனமாக செயல்பட்ட காலம் அது என்பதால் எந்த தடைகளுமின்றி உறுதிப்படுத்தப்படும் செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

சூரியன் செய்தியாசிரியர்களில் ஒருவனாக நானும் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு எனது அடுத்த கட்ட முயற்ச்சிகளுக்கு பெரும் உந்துதலை அளித்தது.
சூரியப்பார்வைகள் மற்றும் விழுதுகள் ஆகிய சூரியன் செய்திப் பிரிவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிகழ்ச்சிகளை நானும் குரு அண்ணாவும் வழங்கிய காலங்கள் மறக்க முடியாதவை.

அந்த நிகழ்ச்சிகளின் ஊடே எமது வரலாறு குறித்த பாடங்களை குரு அண்ணா எனக்கு கற்பித்துக் கொடுத்தார்.

அவரிடம் இருந்த பரந்து கட்ட தொடர்புகள் அந்த நிகழ்ச்சிகளுக்கு மேலும் வலுச் சேர்த்தது.

விழுதுகள் பற்றியும் அது தந்த அனுபவங்கள் பற்றியும் மற்றுமொரு பதிவில் பேசுகின்றேன்.

வி.எஸ்.சிகாமணி
சூரியன் செய்திப்பரிவின் ஆரம்பம் முதல் இன்று வரை செயல்பட்டு வரும் மற்றுமொரு செய்தியாசிரியர்.

பல்வேறு தளங்களில் செயல்படுவதால் முழு நேரமாக சூரியனில் இவர் இணைந்து கொள்ளவில்லை.

சூரியன் செய்திப்பரிவிற்கு தனியான கணனி வசதிகள் மிக அண்மையில் தான் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.

அதற்கு முன்னர் செய்திகள் எல்லாம் கையெழுத்து பிரதிகள் தான்.
இவருடைய செய்திகளை மட்டும் முன் கூட்டியே வாசிக்காமல் எடுத்துச் சென்று விடலாம்.

அத்தனை தெளிவான உறுப்பான அழகான கையெழுத்துக்குச் சொந்தக்காரர் சிகா அண்ணா.

மனம் புண்பாடாத வைகயில் விமர்சனங்களை முன்வைக்க தெரிந்தவர்.
செய்திவாசிப்பாளனாக இருந்த போதும் சரி பின்னர் செய்தி ஆசரியனாக மாறிற போதும் சரி என்னை உற்சாகப்படுத்தியவர்களில் முக்கியமானவர்.

மேர்வின் மகேசன்
இலங்கையின் புகழ் பூத்த திரைப்பட நடிகர்.நடா அண்ணா மூலம் நாடக உலகில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான நடிகராக உருவெடுத்தவர்.

சர்வதேச விருதுகள் பலவற்றை வென்ற இலங்கையில் உருவான சரோஜாவின் முக்கிய பங்கு வகித்தவர்.

இவர் மூலமாகத்தான் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றித்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்திய கருத்தரங்குகளுக்கு என்னைஅழைத்துச் சென்று ஏனைய ஊடகவியலாளர்களுடன் உறவினை ஏற்படுத்திக் கொடுத்தவர் மேர்வின் மகேசன்.

அதேபோல் மறைந்த ஊடகவியலாளர் தர்மலிங்கம் சிவாராமையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

நவீன ஊடகங்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்,தமிழ் செய்தி இணையத் தளங்கள் பிரபலமாhத 2000ம் ஆண்டில் தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சி இணையத் தளங்கள் மூலமாகவே எதிர்காலத்தில் அமையும் என்று அடித்துச் சொன்வர்.

தற்போது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் முன்னாள் தினக்குரல் ஊடகவியலாளர் சீவகன் சூரியன் என்ற செய்தி இணையத் தளத்தை (எனக்கு தெரிந்தவரையில் தமிழில் முதல் செய்தி இணையத்தளம் இதுவாகத் தான் இருக்க வேண்டும்) உருவாக்குவதற்கு முக்கிய காரணியாக திகழ்ந்தவர்.
சூரியன் இணையத்தளத்தின் அங்குரார்பணம் சுகததாச விருந்தினர் விடுதியில் நடந்த போது அந்த நிகழ்வினை தொகுத்து வழங்கும் வாய்ப்பினையும் இவர் எனக்கு பெற்றுக் கொடுத்தவர்.

இவர்களை தவிரவும் சூரியன் செய்திப்பிரிவில் கடமையாற்றிய மாணிக்கம் ஜேசுதாசன்,ஹரேன்,டிட்டோ குகன்,காஞ்சனா போன்றவர்களையும் நான் சூரியன் செய்திப்பிரிவின் ஊடாக நண்பர்களாக்கிக் கொண்டேன்.

இதனை விடவும் சூரியனின் பிராந்திய செய்தியாளர்களான தயாபரன்,ஹரிச்சந்திரன்,இர்சாட்,சசிகுமார்,சலீம்,தியாகு,சிறீதரன், சுப்பு போன்றவர்களின் நெருக்கம் சூரியன் செய்திப்பிரிவில் நான் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்டதன் மூலமே என்கு கிடைத்தது.

சூரியன் நிகழ்ச்சிப் பிரிவிற்கும் செய்திப் பரிவிற்கும் இடையில் சுமூகமான உறவு எந்தக் காலத்திலும் நிலைத்ததில்லை.

எதாவது ஒரு காரணத்தை முன்வைத்து இரு பிரிவனரும் முரண்பட்டு கொள்ளவார்கள்.

அவர்கள் மீது இவர்களும் இவர்கள் மீது அவர்களுமாக அள்ளி வீசும் குற்றச்சாட்டுகள் ஆராக்கியமான வளர்ச்சிக்கு உதவினாலும் சில சந்தர்ப்பங்களில் வேண்ட்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தியதுண்டு.
இந்த ஆதிக்க போட்டியின் உச்சக் கட்டமாய்; சூரியனில் இருந்து முக்கியமான தலைகள் மூன்றை ஓரே நேரத்தில் பந்தாடிய நிகழ்வும் நடந்தேறியது.

இவை முடிந்து போனவையாக இருந்தாலும் மறந்து போக முடியாத அளவிற்கு கசப்பான அனுபவங்கள்..அப்பிடியே சங்கதி என்று விசயம் தெரிந்தவர்கள் கேட்கலாம் ஆனால் அது பற்றி இப்போது நான் பேசுவதாக இல்லை ஆனால் என்றாவது ஒரு நாள் அன்று நடந்தது என்ன என்பது பற்றி விரிவாகவே பேசுவேன்.

இதற்கு காரணம் சூரியனின் அபிரமிதான வெற்றிக்கு காரணம் யார் என்ற கேள்விக்கான பதிலாக இரதரப்பும் தங்களை நினைத்து கொள்ளவது தான்
சூரியன் செய்திகள் தான் சூரியனை தனித்தவமாகன வானொலியாக மாற்றியது என்பது செய்திப்பிரிவினரின் நம்பிக்கை.

ஏன்ன தான் செய்திகளை அவர்கள் எழுதி கிழித்தாலும் அதற்கு உயிர் கொடுத்து வாசித்து மக்களிடம் சேர்த்தது நாங்கள் தானே என்கின்ற மிதப்பும் செய்திகளுக்கு அப்பாலும் நேயர்கள் விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை நாங்கள் தானே வழங்குகின்றோம் என்ற வாதமும் நிகழ்ச்சி பிரிவிடம் இருக்க தான் செய்தது.

என்னை பொறுத்தவரை சூரியனின் வெற்றி என்பது சூரியன் படைத்த வித்தியாசங்களை ஏற்று அதனை இரசித்த நேயர்களை மட்டும் தான் சாரும்.

அதேபோல் செய்திப் பிரிவும் நிகழ்ச்சிப் பிரிவும் சூரியனின் வளர்ச்சிக்கு சரிசமமான பங்கினை வழங்கி வருவதாகவே கருதுகின்றேன்.

இந்த இரண்டு மோதல் குழுக்களிலும் அங்கம் வகித்த ஊடகப் போராளியாக நான் இருந்ததால் இரு தரப்பிடமும் இருந்தும் இந்த ஆதிக்க மோதல்களில் விலக்களிக்ப்பட்டிருந்தேன் அதனால் பல சந்தர்பங்களில் எனது தலை பாதுகாக்கப்பட்டது.


தற்போதுள்ள ஊடகச் சூழலில் தங்காளல் முடிந்த அளவிற்கு செய்திகளை வெளிப்படுத்தும் சூரியன் செய்திப் பிரிவிற்கு அதன் வெற்றி பயணத்தில் இணைந்திருந்த ஒரு பயணியாய் எனது கையசைப்புகளும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.

Comments

Anonymous said…
ரமணன் அண்ணா சூரியன் செய்திப்பிரிவைப்பற்றியும் அதன் வெற்றிகளில் கைகொடுத்தவர்கள் பற்றியும் மிகவும் ஆரோக்கியமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கின்றீர்கள்.

நான் சூரியனை செவிமடுக்கத் தொடங்கிய நாள் முதல் சூரியனின் பிரதம செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் குரு அண்ணா... அதனைப்போன்றே இந்திரஜித் அண்ணா, சிகாமணி அண்ணா போன்றவர்களின் செய்திதொகுப்புக்களையும் உங்கள் தொகுப்புக்களையும் அவதானித்து கேட்டிருக்கிறேன்.

அத்துடன் விழுதுகள், சூரியப்பார்வைகள் என்பன அனைவராலும் விரும்பப்பட்ட அவசிய நிகழ்ச்சிகள்... உங்கள் ஊடக ஆற்றலை அண்மையில் ஒரு தொகுப்பாக கேட்க முடிந்தது... அதில் நீங்கள் ஊடகங்களின் நடுநிலைத்தன்மையும் அதன் போக்கும் என்ற தலைப்பில் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் அவர்களிடமும் சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் அவர்களிடமும் கேட்ட கேள்விகள் என்னை பிரமிக்க செய்தன...
உங்கள் திறமைகளும் சிந்தனைகளும் வெவ்வேறு திசைகளில், கோணங்களில் அதில் வெளிப்பட்டன.

அத்துடன் அண்ணா இன்று ஊடகங்களின் செய்திகளிலும் அதனை வாசிப்போரிலும் எனக்கு நூறு வீத திருப்தி இல்லை. அத்துடன் சில வானொலிகளில், தொலைக்காட்சிகளில் செய்திகளை வாசிப்போருக்கு சரியாக தமிழ் மொழியை உச்சரிக்க தெரியாமல் இருப்பது வருந்தத்தக்கது. மேலும் சில வானொலிகளில், தொலைக்காட்சிகளில் பத்திரிக்கை செய்திப்பாணியில் செய்தி அறிக்கைகள் அமைவது கவலையாகவும், ஏற்றுக்கொள்ளமுடியாததாகவும் உள்ளது.

உங்களிடம் இருந்து செய்தி அறிக்கை தயாரித்தல், உறுதிப்படுத்தல், வெளியிடுதல் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் தாளம் இணைய வானொலி செய்திப்பிரிவின் சார்பில் எதிர்பார்க்கின்றேன். வளர்ந்துவரும் எமக்கு கரம் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.- மயில்வாகனம் செந்தூரன், அறிவிப்பாளர் தாளம் இணைய வானொலி, செய்திப்பிரிவு.
Chander said…
//"இவை முடிந்து போனவையாக இருந்தாலும் மறந்து போக முடியாத அளவிற்கு கசப்பான அனுபவங்கள்..அப்பிடியே சங்கதி என்று விசயம் தெரிந்தவர்கள் கேட்கலாம் ஆனால் அது பற்றி இப்போது நான் பேசுவதாக இல்லை ஆனால் என்றாவது ஒரு நாள் அன்று நடந்தது என்ன என்பது பற்றி விரிவாகவே பேசுவேன்"//

அண்ணா முடிந்தால் என்னதான் நடந்தது என கூறுங்கள்? காரணம் 'அப்படியே சங்கதி' நிறுத்தப்பட்டது ஏன் என இன்றும் எனக்கு தெரியாது. அண்ணா இன்று இலங்கையில் உள்ள தமிழ் வானொலிகளில் தற்போதும் சூரியன் செய்திகளுக்கு நிகர் எதுவுமில்லை என நினைக்கிறேன். பல கட்டுப்பாடுகள், அரசியல் அழுத்தங்கள் இருந்தும் ஏதோ புதிய பல அம்சங்களுடன் சூரியன் செய்திகள் தனித்துவம் பெறுகின்றன என்பது மறுக்க முடிய உண்மை.
சூரியனுடைய நிகழ்ச்சிப் பிரிவுக்கும் செய்திப்பிரிவுக்கும் இடையிலிருந்த ஆதிக்கப்போட்டி, எனக்குத் தெரிந்தவரை இரண்டு ”பெரிய” தலைகளுக்கு இடையிலான போட்டியாகவே எப்போதும் இருந்திருக்கிறது. மற்றபடி செய்தி வாசித்தவர்களுக்கும் செய்தி ஆசிரியர்களுக்கும் இடையில் சுமூகமான உறவே இருந்தது. இல்லாவிட்டால் செய்திகளை சிறப்பாக வழங்கியிருக்க முடியாது. உங்களுடைய பதிவில் ஒட்டுமொத்த செய்திப்பிரிவுக்கும் நிகழ்ச்சிப் பிரிவுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதான தவறான தோற்றம் தெரிகிறது ரமணன் அண்ணா.

மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட செய்தி ஆசிரியர்களில் இந்திரஜித் அண்ணா என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானவர். சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தி, தான் முன்னேறத் தெரியாதவராக இருந்தாலும் பலரை வளர்த்துவிட்ட பெருமைக்குரியவர்.

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். எழுதுங்கள்.
Anonymous said…
But am wondering why sooriyan forced a different kind of tamil vocabulary in news with Hard Voice.. Inventing some funny tamil words (for which even listners dont know the meaning) when there is tamil words already in use!

Sooriyan News survived just because they reported it news well.

Except election time where they breached all media ethics and went on campaigning to their boss.
Ramanan said…
நன்றி கிருஸ்ணா,

நீங்கள் குறிப்பிட்டது போல் ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சி பிரிவும் செய்திப் பிரிவும் முட்டிமோதிக்கொண்டதில்லை ஆனால் nருந்தலைகளின் மோதல்கள் இரு பிரிவுகளுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
நீங்கள் குறிப்பிட்டது போல் செய்தி வாசிப்பாளர்களில் செய்திகள் கவனம் செலுத்தி அக்கறையுடன் செய்தி வாசித்தவர்கள் எவரும் செய்திப்பிரிவுடன் இதவரை முரண்பட்டதில்லை என்பது உண்மை தான் நீங்கள் குறிப்பிட்டது போல சூரியன் செய்திகள் சிறப்பான வெளிப்பாட்டிற்கு அந்த இணைப்பு அவசியமானதும் கூட.
ஆனால் தலைள் மட்டும் தான் முட்டிக் கொண்டன என்பதை என்னால் ஏற்றக முடியாது.
பல சந்தர்பங்களில் வால்களும் வாலாட்டியிருக்கின்றன, செய்திகளை பற்றி தெரியாதவர்கள் அல்லது செய்தி வாசிப்பில் ஈடுபடாதவர்களால் பல சந்தர்பங்களில் செய்திப்பிரிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டதை நான் நேரில் அனுபவித்திருக்கிறேன்.
நிலமை இப்போதும் மாறவில்லை முன்பு பேச்சு வாக்கில் மட்டும் இருந்த முரண்பாட்டு நிலை இப்போது கைகலப்பு வரை வளர்ந்து நிற்பதை வேதனையுடன் வெளிப்படுத்தி தான் ஆக வேண்டும்.
//செய்திகளை பற்றி தெரியாதவர்கள் அல்லது செய்தி வாசிப்பில் ஈடுபடாதவர்களால் பல சந்தர்பங்களில் செய்திப்பிரிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டதை நான் நேரில் அனுபவித்திருக்கிறேன்//

விரிசல்களைப் பயன்படுத்தித் தங்களை வளர்க்க நினைத்தவர்களைப் பற்றி நீங்கள் சொல்ல வருவது புரிகிறதண்ணா. தமிழ் உச்சரிப்பைப் பற்றிக் கவலைப்படாமல்(?), சிங்களப் பெயரைக் கொஞ்சம் தவறாக உச்சரித்ததை மேலிடம் வரைக்கும் குற்றச்சாட்டாகக் கொண்டுபோக முயற்சித்தவர்களைக் கண்ட (சொந்த) அனுபவமும் இருக்கிறது :-)

//முன்பு பேச்சு வாக்கில் மட்டும் இருந்த முரண்பாட்டு நிலை இப்போது கைகலப்பு வரை வளர்ந்து நிற்பதை வேதனையுடன் வெளிப்படுத்தி தான் ஆக வேண்டும்//

இது எனக்குப் புதிய தகவல்.
யாசன் said…
ஓர் ஊடகவியலாளனின் துணிவு கடமை செயல் இவற்றை உங்களிடமே நான் அதிகளவில் தெரிந்து கொண்டேன். எல்லாவற்றையும் சொல்லும் நீங்கள் எங்களை போன்ற இளம் தலைமுறைக்கு செய்தி தயாரிப்பு எவ்வாறு அமையவேண்டும் அதுவும் வானொலிக்கு எவ்வாறு எமுதவேண்டும் எள்றும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தாம்மையுடன் கேட்டுகொள்கின்றேன். - உங்கள் வழியில் ஒருவனாய் நானும்...புலம்பெயர்ந்த மண்ணில் இருந்து.
ARV Loshan said…
நல்லதொரு அலசல்.. ஒரு ஆராய்ச்சி என்றே சொல்லலாம்..

மோதல்களால் தான் வளர்ச்சியும்,வீழ்ச்சியும் என்று நீங்கள் சொல்வது மிகச் சரி..

செய்திகளும்,நிகழ்ச்சியும் மோதாத காலம் ஒன்றே ஒன்றிருந்ததை நான் ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.. :)

எனக்கும் குரு அண்ணாவுக்கும் இடையில் இருந்த அபிப்பிராய பேதங்களையும் மீறிய நட்பே இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்..

கைகலப்பு? எனக்கும் இது புதிய தகவலே..

இலங்கை வானொலிகளில் தலை சிறந்த ஒரு செய்தி வாசிப்பலரிடமிருந்து இந்தப் பதிவு வந்திருப்பது மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள் ரமணன்.

ரமணனையும்,இந்திரஜித்தையும் யாரும் இதுவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.. எனக்கும் அந்த வாய்ப்பு சரியாகக் கிடைக்காது தான் துயரம்...

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring