உலகை உலுக்கும் இடப்பெயர்வுகள் இலங்கை மீதான கவனம் நீடிக்குமா?

உலகில் 42 மில்லியன் மக்கள் வேரோடி விழுதெறிந்த தமது தாய் மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதிலும் சுமார் 42 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தாங்கள் விழுதெறிந்து வாழ்ந்துவந்த சொந்த மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இவர்களில் 26 மில்லியன் பேர் தமது சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஏனைய 16 மில்லியன் மக்களும் தமது நாடுகளிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும், இறப்பினைத் தள்ளிவைக்கவும் விஞ்ஞானம் வழி தேடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், உலக அளவில் பல நாடுகளிலும் இந்த மனிதப் பேரவலம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

அதிகரித்துவரும் இந்த இடம்பெயர்வுப் போக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. எந்தவொரு தனிப்பட்ட அமைப்பும் உலக அளவில் இவ்வளவு தொகையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவருக்குமான மனிதாபிமானப் பணிகளை தனித்து முன்னெடுக்க முடியாது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் உலகில் இடம்பெயர்ந்த இந்த 42 மில்லியன் மக்களில் சுமார் 17 மில்லியன் மக்களுக்கு மட்டுமே (இடம்பெயர்ந்தோர் தொகையில் அரைவாசிக்கும் குறைவானவர்களுக்கே) நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது. இவ்வாறு, அனைத்துலக அளவில் செயல்படும் மிகப்பெரிய அமைப்பினால் கூட கையாளப்பட முடியாததொரு நிலையை உலகின் இடப்பெயர்வுப் பிரச்சினை எட்டிவிட்டது.

அனைத்துலக அளவில் செயல்படும் மிகப்பெரிய அமைப்பான அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பினால் கூட கையாளப்பட முடியாததொரு நிலையை உலகின் இடப்பெயர்வுப் பிரச்சினை எட்டிவிட்டது.

தமது தாய் மண்ணை விட்டுப் பிடுங்கி வீசப்பட்டுள்ள இந்த இடம்பெயர்ந்த மக்கள் தொகையில் 80 சதவீதமானவர்கள் அவிருத்தியடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களே. அபிவிருத்தியடைந்த நாடுகளில் உற்பத்திசெய்யப்படும் ஆயுதங்கள் இந்த அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உள்நாட்டுப் போர்களுக்குத் தூபமிட்டு, அவை முடிவின்றித் தொடர ஊக்குவிக்கிவிப்பதே இவ்வாறான அதிகரித்த இடப்பெயர்வுகளுக்குக் காரணம் என்று கூறுப்படுகிறது.
உலகில் கூடுதலான இடம்பெயர்ந்த மக்களைக் கொண்ட நாடாக இருக்கும் கொலம்பியாவில் எறத்தாள 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தொடர்ச்சியாக மோதல்கள் நடைபெற்றுவரும் ஈராக்கில் ஏறத்தாள 2.6 மில்லியன் மக்களும், சூடானின் டர்பார் பகுதியில் 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அண்மையில் பாகிஸ்தானில் ஆரம்பமான மோதல்களால் இடம்பெயர்ந்தவர்களின் தொகையும் 2 மில்லியனைத் தாண்டிவிட்டது.
இடம்பெயர்ந்த இந்த 42 மில்லியன் மக்கள் உட்பட, உலக அளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலக உணவுத் திட்டத்தின் உணவை மட்டுமே நம்பி வாழ்வதாகக் கணிப்பீடொன்று கூறுகிறது. இந்த மக்கள் தமக்கான அடிப்படைத் தேவைகளுக்குக் கூட உலகிடம் கையேந்தி நிற்கின்றார்கள்.

இந்த நிலையிலும், உலகப் பொருளாதாரத்தில் ஏறத்தாள 1500 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக நாடுகளின் பாதுகாப்புச் செலவீனமாக ஒவ்வொரு வருடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. பாதுகாப்புச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாக மேற்கொள்ளப்படும் இன்னும் பல மறைமுகச் செலவீனங்களின் அளவு இதைவிடவும் அதிகம் என்று கூறப்படுகின்றது.
இவ்வாறான உலகப் போக்குகளின் அடிப்படையில் இலங்கையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் நிலையை ஒப்பிடும்போது அது உலகளவில் குறைந்தளவு முக்கியத்துவத்தையே பெறுகிறது. எனினும், ஓவ்வொரு நாட்டிலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் வௌ;வேறு விதமான நெருக்கடிகளுக்குள் வாழ்வதால், அவர்களின் வாழ்வை வேறு பகுதி மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்கிறார் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி வோல்டர் கெலின்.

இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வத் தகவல்களின்படி, இலங்கையின் வடபுலத்தில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் 262,632 உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஆகக் கூடுலான 235,386 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தும், 21,079 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்து 2,778 பேரும், வவுனியாவில் இருந்து 1,864 பேரும் திருகோணமலையில் 1,054 பேரும் மன்னாரில் 471 பேரும் இடம்பெயர்ந்துள்ளதாக அந்தத் தகவல் கூறுகின்றது.

இவர்கள் அனைவரும், உணவு மற்றும் குடிநீருக்கான தட்டுப்பாடு, நடமாடும் சுதந்திரம், தமது பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கான கருத்தாடல் சுதந்திரம், குழுநிலை மோதல்கள், கற்றல் நெருக்கடிகள், பாலியல் துன்புறுத்தல்கள், கலாசரா சீரழிவுகள், மாற்று கலாசார உள்வாங்கல்களின் ஊடாக பாரம்பரிங்களை தொலைத்தல் எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருப்பதாக மனிதாபிமான அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பாரிய மனித அவலங்களை சந்திக்கும் பல நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் ஒப்பிடும்போதும், இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த இந்த மக்கள் மீது உலகின் கவனம் கணிசமாகவேனும் இருப்பது மகிழ்ச்சிதரும் விடயம். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இந்த விடயத்தில் நேரடியாகத் தலையீடு செய்து, இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிட்டடமையானது இந்த மக்களின் பிரச்சினைகளுக்கான விரைவான தீர்வு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருட இறுதிக்குள் இடம்பெர்ந்தவர்களின் 80 வீதமானோரை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதாக அரசாங்கம் ஐ.நா. வுக்கு வழங்கியிருக்கும் வாக்குறுதி இந்த நம்பிக்கையை மேலும் வலுவடையச் செய்கிறது.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் மனிதப் பேரவலத்துக்கு முகம் கொடுத்துள்ள இந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் இருக்கும் யாழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இடம்பெயர்ந்த மக்களும் மீண்டும் தமது சொந்த இடங்களில் போதிய வசதிகளுடன் மீள்குடியேற்றப்படுவதும் சாத்தியமாக்கப்படவேண்டும்.


Comments

Popular posts from this blog

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

மீண்டும் வாழ்வோம்….

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring